நட்புக்கு நுரையீரல்

அன்புக்கும் காதலுக்கும் இதயத்தை இழுக்காதவர் இலர். தற்போது வாசித்து வரும் ந.பிச்சமூர்த்தியின்மோகினி” புத்தகத்தில் ‘நட்புக்கு நுரையீரல்’ என்றொரு வரியைப் பார்த்தேன். நன்றாகத் தானிருந்தது. இனிமேல் நட்புக்கு நுரையீரல் 😊

புத்தகத்திலிருந்து:-

இன்பத்தைப் பகிர்ந்து கொடுப்பது மனித சுபாவம்; நட்புக்கு நுரையீரல். அதிலும் நம்முடைய நட்போ தெய்விகமானது; ஒரு நுரையீரலுக்கும் மற்றொன்றுக்கும் உள்ளது போன்ற ஜீவ்ய சம்பந்தம்.

உப்பு வேலி

உப்புவேலி

நீண்ட நாட்களாக வாசிக்க விரும்பிய புத்தகங்களின் பட்டியிலில் இருந்த புத்தகம் ‘உப்பு வேலி‘. சர்க்கரையைப் பற்றி பேசுமளவுக்கு உப்பைப் பற்றி பேசுவதில்லை. தற்போது எளிதில் மலிவாகக் கிடைக்கும்(இதர மளிகைப் பொருட்களின் விலையோடு ஒப்பிடுகையில்) உப்பு, சில வருடங்களுக்கு முன்பு விலையுயர்ந்த பொருளாக இருந்திருக்கின்றது என்பதை நம்ப முடிகிறதா? அதாவது வருட சம்பளத்தில் ஆறில் ஒரு பங்கு ஒரு குடும்பத்தின் உப்புக்கான செலவு.ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கிய புத்தகத்திலுள்ள சிறிய அடிக்குறிப்பில் ஆரம்பிக்கிறது ஆசிரியரின் இந்தியப் பெருவேலிக்கான தேடல். வேலியின் மிச்சத்தைக் காணும் மிதமிஞ்சிய வெறியால் பயணங்களிலும், வேலி தொடர்பான செய்திகள், வரைபடங்கள் போன்றவற்றை சேகரிப்பதிலுமே பெரும்பாலான நேரத்தை செலவிட்டிருக்கின்றார். கம்பெனி உப்புத் தயாரிப்பினை தன் கையகப்படுத்தி, வேறெந்த வழியிலும் அதை மக்கள் பெறாமலிருக்க சுங்கப் புதர்வேலியை உருவாக்கியது; உயிர்வேலி எப்படி உருவாக்கப்பட்டது? உப்பின் அவசியம், காந்தியின் உப்புச்சத்தியாகிரகம் என உப்பைப் புத்தகம் முழுவதும் தூவியிருக்கிறார். பர்மத் லயின் என்றழைக்கப்பட்ட வேலியின் எச்சத்தைக் கடைசியில் அவர் காண்பதுடன் புத்தகம் நிறைவடைகிறது. ஒரு வரலாறானது புத்தகமாகவோ அல்லது திரைப்படமாகவோ படைப்புறும்போது, அது மானுடத்தின் மனசாட்சியை எக்காலத்துக்கும் உலுக்கும் ஆவணமாக நிலைபெற்றுவிடுகிறது. இந்திய வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் வாசிக்க வேண்டிய படைப்பு. மிக நன்று!

பரங்கிமலை இரயில் நிலையம்

சென்பாலனின் பரங்கிமலை இரயில் நிலையம், KDP Pen To Publish 2018 போட்டியில் முதல் பரிசை வென்ற நாவல்.  பரங்கிமலை இரயில் நிலையத்தருகே பள்ளி மாணவன் ஒருவன், ஓடும் இரயிலில் இருந்து விழுந்து இறப்பதில் ஆரம்பிக்கிறது நாவல். அவன் தவறி விழவில்லை, தள்ளி கொலை செய்யப்பட்டிருக்கிறான் எனும் போது மெல்ல கியர் மாறுகிறது. கொலையாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஆல்டோ கார்த்திக் ஏற்கிறான். பரபரவென நகரும் விசாரணைகள், சில திருப்பங்கள்… வழக்கம் போல, இறுதியில் கொலையாளி கார்த்திக்கால் கண்டுபிடிக்கப்படுகிறான். 55 பக்கங்களே உள்ள ஒரே மூச்சில் முடித்து விடக் கூடிய விறு சிறு நாவல். நன்று.

பரங்கிமலை இரயில் நிலையம்

கிண்டிலில் அருஞ்சொற்பொருள்

கிண்டில் வாசிப்பானில் தமிழ் புத்தகத்தை வாசித்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டடைந்தது; ஏதாவது ஒரு சொல்லுக்கான அர்த்தம் தெரியவில்லை என்றால் அதைத் தெரிவு செய்தால் போதும், கிண்டில் அதற்கான பொருளை தமிழ் அகராதியிலிருந்து எடுத்து வந்து காட்டுகிறது. தமிழ் புத்தக வாசிப்பிற்கு பேருதவியாக இருக்கும் சிறப்பம்சம் 👏

Tamil Dictionary in Kindle Tamil e-book

சவுல் ஏரி

இன்று காலை 20-25கி.மீ மிதிவண்டி பயணம் செல்வதாகத் திட்டம். ஆனால் நேற்று இரவு சுதாகர் பறவை காணலுக்கு அழைக்கவும்; திட்டம் திசை மாறி விட்டது. சவுல் ஏரிக்கு(Saul Kere) காலை 6 மணி வாக்கில் கிளம்பினோம். 6:45க்கு ஏரியை நெருங்கும் போது விடிந்திருந்தது என்றாலும் வெளிச்சம் குறைவு தான். ஏரியில் ஏகப்பட்ட மாற்றங்களைக் காண முடிந்தது; ஆங்காங்கே சில பல இடங்களில் மரங்கள், புதர்களுக்கு முடி திருத்தப்பட்டது போலிருந்தது. சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர் நிறைந்திருந்தது; ஆதலால் நீர்ப் பறவைகள் குவிந்திருந்தன. நீர்க்காகங்கள், சாம்பல் நாரைகள், முக்குளிப்பான்களை வழக்கத்திற்கு மாறாக இன்று நிறைய கண்டேன். மெர்லின் செயலியின் உதவியுடன் பறவைகளின் ஓசைகளை வைத்து அவற்றை அறிய முயற்சித்தேன். பறவை காணலின் போது பலவித பறவைகளை பார்க்கும் வாய்ப்பை சவுல் ஏரி எப்போதும் வழங்கத் தவறுவதில்லை; நீர்ப்பறவைகள், பச்சைக் கிளி, சின்னான்கள், நாகணவாய்கள், தகைவிலான்கள், கதிர்க்குருவிகள், குக்குறுவான்கள், மீன்கொத்திகள், கள்ளிப்புறாக்கள், பஞ்சுருட்டான்கள், வாலாட்டிக் குருவிகள், தேன் சிட்டு, கரிச்சான் இன்ன பிற பறவைகள். சவுல் ஏரி எனக்கு நிறைய Lifers (முதன் முதலாக ஒரு பறவையைக் காணும் பாக்கியம்) கொடுத்திருக்கின்றது. இன்றும் என்னை ஏமாற்றாமல் சிவப்புச் சில்லையைக்(Lifer#166) காட்டி மெய்சிலிர்க்க வைத்தது. கானுயிர் புகைப்படக் கலைஞரான சுதாகர் கிளையில் இளைப்பாறும் சேற்றுப்பூனைப்பருந்து, அசையாமல் அழகுச் சிலையாய் புகைப்படத்திற்கு தன்னை ஒப்புவித்த சாம்பல் நாரை, மீனை வேட்டையாடி லாவகமாக தூக்கிப் போட்டு விழுங்கும் பாம்புத்தாரா என அழகுப் பறவைகளின் வாழ்வியலை அற்புதமாக படம்பிடித்துக் கொண்டிருந்தார். திரும்பி வர மனமில்லாமல் விடை பெற்றோம். நிறைவான காலை வேளை; மிக்க மகிழ்ச்சி!

பச்சை நிறமே

இன்றிலிருந்து அலுவலகத்தில் வழக்கத்திற்கு மாறாக வேறொரு தளம் எங்கள் அணிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. எங்கு நோக்கிலும் பச்சை நிறமே! சுவரில் இருந்து நாற்காலிகள் என எதிலும். எனது இருக்கைக்கு அருகில் இருந்த கலந்தாய்வு அறையில் முதல் சந்திப்பு; அறையின் பெயர் Avocado 🥑. அடுத்ததாக சந்திப்பு நடைபெற்ற அறையின் பெயர் Celadon; பச்சை நிறப் பாத்திரங்களை உருவாக்குதல். இதைப் பார்த்ததும் பொறி தட்டியது. பொதுவாக தளத்தில் உள்ள அனைத்து அறைகளின் பெயர்களுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கும், நதிகளின் பெயராக; வாத்தியக் கருவிகளின் பெயராக என. ஆக இத்தளத்தில் உள்ள அறைகளுக்குள் உள்ள ஒற்றுமை, பச்சை நிறம். சிறப்பு. யோசித்துப் பார்த்தால் இப்போது தான் விளங்குகிறது, இதற்கு முன்னர் எங்கள் அணிக்கு ஒதுக்கப்பட்டிருந்த தளத்தை நிரப்பியிருந்தது நீல நிறம்(Bellflower, Ultramarine).

கிண்டில் செயலி

கிண்டில் கருவியில் புத்தகங்களை வாசிப்பதோடு நில்லாமல் கிண்டில் செயலியையும் கைபேசியில் நிறுவி வைத்திருக்கின்றேன்; கைபேசி உடல் உறுப்புகளில் ஒன்றாகி விட்டதால் எப்போது வேண்டுமானாலும் வாசிப்பதற்கு வசதியாக இருக்கும். அப்படி எவ்வளவு தான் வாசித்திருக்கிறேன் என்றெல்லாம் ஆராயப்படாது 😂 ‘சமீபத்தில் வாசித்த பக்கம்‘ எனக்குப் பிடித்தமான சிறப்பம்சம். கிண்டில் செயலியைத் திறந்தால் தானாக ஒரு பெட்டியில் சமீபத்தில் வாசித்த பக்கம்(கிண்டில் கருவியிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு கருவியிலோ) வந்து நிற்கும்; எந்த கருவியிலும் எப்போது வேண்டுமானாலும் விட்ட இடத்திலிருந்து தொடரலாம்.

Most Recent Page Read

நேற்று கிண்டில் செயலியை மேய்ந்து கொண்டிருந்த போது தற்செயலாக எனது வாசிப்பு புள்ளிவிவரங்களைக் காண நேர்ந்தது. தொடர்ந்து 12 வாரங்களாக ஒரு நாளாவது சில பக்கங்களாவது வாசித்து வந்திருக்கிறேன். இதில் அதிகபட்சமாக 18 வாரங்கள் வாசித்திருக்கிறேன். நாட்கணக்கில் அதிகபட்சம் தொடர்ந்து 16 நாட்கள் வாசித்திருக்கிறேன். இதைக் கண்டதிலிருந்து தினமும் ஒரு பக்கமாவது வாசித்து புள்ளிவிவரங்களில் எனது உச்சத்தைத் இவ்வருடத்தில் தொடலாம் என்றிருக்கின்றேன். பாப்பம் 🙂

புத்தகங்கள்

இப்போதெல்லாம் ஏதாவது ஒரு புத்தகத்தை வாங்க வேண்டும் என்றால் முதலில் அதற்கு கிண்டில் பதிப்பு இருக்கிறதா என்று கிண்டுவது; அடுத்ததாகத் தான் அச்சு பதிப்பை அலசுவது. ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ புத்தகத்தில் அ.முத்துலிங்கத்தின் புத்தக விமர்சனங்களை வாசித்து கொண்டிருக்கும் போதே அவற்றை வாங்க முடிவு செய்தேன். அவை பின்வருமாறு:-

  • புலி நகக்கொன்றை – பி.ஏ.கிருஷ்ணன்
  • The Devil That Danced On The Water – Aminatta Forna
  • A Short History Of Nearly Everything – Bill Bryson

இவற்றில், அந்த இரண்டு ஆங்கில புத்தகங்களின் அச்சு பதிப்பை வாங்கியிருக்கிறேன். A Short History Of Nearly Everything புத்தகத்துடன் இணைப்பாக வந்த புத்தகக்குறியைப் பாருங்கள்; விற்பன்னர்கள் ரேட்டிங்கிற்கு கொடுக்கும் ரேட்டின் விளம்பரம். இதான் இப்போது டிரெண்டிங் போல.

Bookmark

ரேட்டிங்கின் ரேட்

சமீபத்தில் வீட்டை சுத்தம் செய்யும் துடைப்பானை அமேசான் இணையதளம் வழியாக வாங்கினேன். துடைப்பானைத் தேடும் வேட்டையில், தேவைக்கேற்றவாறு, பட்ஜெட் கட்டத்துக்குள் வந்தவற்றில், இந்த குறிப்பிட்ட துடைப்பான் ரேட்டிங்கில் முந்தி நின்றது. மதிப்பீட்டை மட்டும் வைத்து முடிவு செய்யாமல், அதற்கு கொடுக்கப்பட்டிருந்த விமர்சனங்களைப் பார்த்தால் பிரமாதம் என்று பரிந்துரைத்திருந்தார்கள். துடைப்பான் வீட்டை அடைந்ததும் பெட்டியைப் பிரித்து, அதிலுள்ளவற்றைப் பொருத்தி பார்த்தேன்; அப்புறம் துடைக்கும் போது பார்த்துக்கலாம் என்று அத்தோடு நிறுத்திக் கொண்டேன். அப்போது பெட்டிக்குள் இருந்த ஒரு துண்டு சீட்டைக் கவனித்தேன். அதில் குறிப்பிட்டிருந்ததாவது ‘எங்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங் மற்றும் விமர்சனம் கொடுப்பவர்களுக்கு, ரூ.50/- பணம் அனுப்பி வைக்கப்படும்.‘ விமர்சனத்தை ஸ்கிரீன்சாட் எடுத்து அனுப்ப வேண்டிய வாட்ஸ்ஆப் எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. விற்பவர்களின் வியாபார யுக்தி நன்றாகத் தான் வேலை செய்திருக்கிறது; இப்ப போய் துடைப்பானின் மதிப்பீட்டைப் பார்த்தால் நூறு சதவீதம் 5 ஸ்டார் ரேட்டிங்; 250-க்கும் மேற்பட்டோர் கொடுத்து-வாங்கியிருக்கிறார்கள். இந்த சனங்களின் விமர்சனங்களை நம்பி எப்படி பொருள்களை வாங்குவது? 😦 இனிமேல் ஏதாவது ஒரு பொருள் நூற்றுக்கு நூறு 5* ரேட்டிங்குடன் அகப்பட்டால் சற்று கவனத்துடன் தான் அணுக வேண்டும்.

வித்யாரம்பம்

இளையவளுக்கு இன்று மழலையர் பள்ளி துவக்க விழா. குறிப்பிட்ட நேரத்திற்கு கிளம்பும் போதே அரை மணி நேரம் கழித்து தான் ஆரம்பிக்கும் என்று ஆணித்தரமாக கூறியிருந்தேன்; அப்படியே நடக்கவும் செய்தது. ஆசிரியைகளுடன் மின்னி, புஜ்ஜியும் எங்களை வரவேற்றனர்; மின்னி, புஜ்ஜியுடன் சில கிளிக்ஸ். நிகழ்ச்சி ஆரம்பமான போது அரங்கம் நிறைந்து வழிந்தது; பெற்றோர் சில இடங்களில் சிறாரை சிராவயல் மஞ்சுவிரட்டு போல துரத்திக் கொண்டிருந்தனர். மிக்க மகிழ்ச்சியுடன் பெற்றோர்; செய்வதறியாது திகைப்புடனும், நகைப்புடனும் மழலையர். குத்துவிளக்கு ஏற்றப்பட்டு, பிரார்த்தனை, ஆடல், பாடல், பேச்சு என மேடை அமர்க்களப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின் வித்யாரம்பம்; அரிசியில் குழந்தையின் கையைப் பிடித்து எழுத வைக்கும் நிகழ்வு. விஜயதசமியன்று செய்யப்படும் இந்து சமய சடங்கு கிறித்தவ பள்ளியில் அனைத்து மத மழலையருக்கும் செய்யப்பட்டது. மகிழ்ச்சி! ஒவ்வொரு குழந்தைக்கும் மரக்கன்று ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. இன்று ஒரு தகவலாக Kindergarten என்பது ஜெர்மானிய மொழி வார்த்தை; மழலையர் தோட்டம் என பொருள்படும் இக்கல்வி முறையைத் தோற்றுவித்தவர் ஃப்ரெடரிக் ஃப்ராபெல் எனும் ஜெர்மானியர்;அதனால் தான் Garten(Garden). வரும் போது மீண்டும் மின்னி, புஜ்ஜி, ஜம்போ, டெட்டி என எல்லோருடனும் படமடுத்துக் கொண்டு விடை பெற்றோம். நாளை முதல் 7:30-8:30 நான் ரொம்ப பிஸி.

வித்யாரம்பம்