ரேட்டிங்கின் ரேட்

சமீபத்தில் வீட்டை சுத்தம் செய்யும் துடைப்பானை அமேசான் இணையதளம் வழியாக வாங்கினேன். துடைப்பானைத் தேடும் வேட்டையில், தேவைக்கேற்றவாறு, பட்ஜெட் கட்டத்துக்குள் வந்தவற்றில், இந்த குறிப்பிட்ட துடைப்பான் ரேட்டிங்கில் முந்தி நின்றது. மதிப்பீட்டை மட்டும் வைத்து முடிவு செய்யாமல், அதற்கு கொடுக்கப்பட்டிருந்த விமர்சனங்களைப் பார்த்தால் பிரமாதம் என்று பரிந்துரைத்திருந்தார்கள். துடைப்பான் வீட்டை அடைந்ததும் பெட்டியைப் பிரித்து, அதிலுள்ளவற்றைப் பொருத்தி பார்த்தேன்; அப்புறம் துடைக்கும் போது பார்த்துக்கலாம் என்று அத்தோடு நிறுத்திக் கொண்டேன். அப்போது பெட்டிக்குள் இருந்த ஒரு துண்டு சீட்டைக் கவனித்தேன். அதில் குறிப்பிட்டிருந்ததாவது ‘எங்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங் மற்றும் விமர்சனம் கொடுப்பவர்களுக்கு, ரூ.50/- பணம் அனுப்பி வைக்கப்படும்.‘ விமர்சனத்தை ஸ்கிரீன்சாட் எடுத்து அனுப்ப வேண்டிய வாட்ஸ்ஆப் எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. விற்பவர்களின் வியாபார யுக்தி நன்றாகத் தான் வேலை செய்திருக்கிறது; இப்ப போய் துடைப்பானின் மதிப்பீட்டைப் பார்த்தால் நூறு சதவீதம் 5 ஸ்டார் ரேட்டிங்; 250-க்கும் மேற்பட்டோர் கொடுத்து-வாங்கியிருக்கிறார்கள். இந்த சனங்களின் விமர்சனங்களை நம்பி எப்படி பொருள்களை வாங்குவது? 😦 இனிமேல் ஏதாவது ஒரு பொருள் நூற்றுக்கு நூறு 5* ரேட்டிங்குடன் அகப்பட்டால் சற்று கவனத்துடன் தான் அணுக வேண்டும்.