தேசிய நெடுஞ்சாலை – NH 7

அவங்கள பத்தி தான் நினெச்சிட்டு இருக்கேன்… எப்படி இருக்காங்களோ?… எத்தன பேரு உசிருக்கு போராடிட்டு இருக்காங்களோ?… காலை 7 மணி. கூட்டமா நின்னு வேடிக்கை பாத்துட்டு ‘உச்’ கொட்டிகிட்டு இருந்தாங்க நம்ம ஜனங்க. ‘காலைல 4 மணிக்கு இந்தப் பக்கம் வந்தேண்ணே! ஏதோ சத்தம் கேட்டுட்டு இருந்துச்சு. அட எதுக்கு வம்புன்னு திரும்பிட்டேன். அட இப்படினு தெரிஞ்சிருந்தா ஏதாவது பண்ணிருக்கலாம்’ – ம்ம்ம் ஈரமுள்ள ரோஜா.

தோப்பூர். சேலத்துக்கும் தர்மபுரிக்கும் நடுவுல இருக்க சின்ன கிராமம். தொப்பையாறு அணை, தோப்பூர் தர்க்கா, ஆஞ்சநேயர் கோவில் இங்க பிரபலமான இடங்கள். எனக்குப் பிடிச்சதுனா, கண்ணத் திறந்து பாத்தா சும்மா கலர் கலரா காரு, பஸ், லாரினு பறந்துட்டு இருக்கும். அதுகள பார்த்துட்டே இருக்கும் போது நேரம் போறதே தெரியாது. பிடிக்காததுனா, கண்ண மூடும் போது எவனாவது ‘பாம்…பாம்’னு ஹார்ன் அடிச்சு தூக்கத்த கலைச்சிட்டு போய்ருவான். அப்புறம் கண்ணுக்கு முன்னாடி நடக்கிற சாலை விபத்துகள்; யாரு அடிபட்டு துடிச்சிட்டு இருந்தாலும் அத பாத்தும், பாக்காத மாதிரி போற ஜனங்க. இப்படிதாங்க, நேத்தும்… ம்… இல்ல… இன்னிக்கு காலைல மூணு மணி இருக்கும். அந்த பக்கமா ஹெட்லைட் இல்லாம ஒரு லாரி வந்துட்டு இருந்தது. அந்த வளைவுல அதுக்கு எதிரா வந்த பஸ் இந்த லாரியப் பாத்திருக்க வாய்ப்பே இல்ல. …. ரெண்டும் நல்லா மோதி அப்படியே அப்பளம் மாதிரி நொறுங்கி விழுந்துச்சுக. லாரி டிரைவரும் கிளீனரும் காலி. பஸ்ல பின்னாடி உக்காந்திருந்தவங்க சில பேர் மட்டும் லேசான காயங்களோட தப்பிச்சிட்டாங்க. மத்த படி எல்லோருக்கும் சரியான அடி. நிறைய பேர் மயக்கமாயிட்டாங்க; சில பேர் ஒரேடியாவே மயக்கமாயிட்டாங்க. ரெண்டு, மூணு பேரு ரோட்ல போயி, அடுத்த வந்த பஸ்ஸ நிறுத்துறதுக்கு பாத்தாங்க. லாரி, கார்… யாருமே நிறுத்தாம இவங்க பக்கத்துல வரவும் வேகத்தக் கூட்டிட்டு பறந்தாங்க. ஹூம்… இவங்களலாம் அந்நியன் தான் கருடபுராணப் படி தண்டிக்கணும். ஆம்புலன்ஸுக்கு கால் பண்ணி 1 மணி நேரத்துக்கு மேல ஆச்சு. அது சரி, சரியான விலாசம் கொடுத்தாலே சாவகாசமா வருவாங்க. இவங்க கொடுத்த குத்துமதிப்பான விலாசத்துக்கு மட்டும் சட்டுனா வந்து நிப்பாங்க. ஒரு வழியா ஆம்புலன்ஸ் வந்து கொஞ்ச பேர அள்ளிப் போட்டுட்டு போச்சு. என்ன பிரயோஜனம்? அடிபட்டு இருக்கவங்களுக்கு சரி, உசிருக்கு போராடிட்டு இருக்கவங்க… அவ்ளோ தான்… இங்க இருந்து பக்கத்துல இருக்க ஆஸ்பத்திரிக்கு போகறதுக்குள்ளவே எப்படியும் போய் சேர்ந்திருவாங்க. அப்படியே அங்க போனாலும் முக்காவாசி அவசர கேஸுகள பெங்களூருக்கோ, சேலத்துக்கோ அனுப்பிச்சு வெப்பாங்க. கஷ்டம் தான்… இப்ப பத்து மணி ஆவுது. ஹூம்… ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவங்களுக்கு என்ன ஆச்சுனு தெரியல. நேத்திக்கு, இன்னிக்கு இல்லங்க, பல வருஷமா இது மாதிரி எக்கசக்கமான விபத்துகள பாத்துகிட்டு தான் வர்றேன். நம்மளால எதுவும் உதவி செய்ய முடியலியே நிறைய தடவ வருத்தப்பட்டிருக்கேன்.

சாயங்கால பேப்பர எவனாவது வாசிச்சிட்டுப் போவும் போது தான் காலையில ஆஸ்பத்திரி சேத்தவங்களுக்கு என்ன ஆச்சுனு தெரியும் என்பதால் பொழுது சாய்வதற்காக காத்துக் கொண்டிருந்த்து தேசிய நெடுஞ்சாலை-NH7-ல் ஓரமாய் நின்று கொண்டிருக்கும் அந்த இரக்க மனதுள்ள மரம்.