வாசிப்பான்

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்த கதையாய் ஏதோ ஒரு மொபைல் வாங்கப் போய் அப்போதைக்குப் புதிதாய் உதித்திருந்த Samsung Galaxy S Duos மாடல் மொபைலை வாங்கி வந்தேன். முதலில் கொஞ்ச நாட்கள் எப்ப பார் மொபைலும் கையுமாகத் தான் அலைவது. 2G சேவையை வேறு ஆக்டிவேட் செய்த பின் எப்போதும் முகநூல், ட்விட்டர், அரட்டை … என ஆன்லைனிலேயே கிடந்தேன். மொபைலில் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாகத் தெரிந்தன. அத்துடன் ‘தமிழ்விசை’ ஆப்பை நிறுவி, தமிழிலேயே எழுதவும் பழகிக் கொண்டேன்.

வலைப்பதிவு எழுத ஆரம்பித்ததிலிருந்தே, ஓடை வாசிப்பான் மூலம் பிறரது வலைப்பதிவுகளையும் வாசித்து வந்தேன். கூகுள் ரீடர் சேவை துவங்கியதிலிருந்து, பிற வலைப்பதிவுகளை வாசிக்க அதை உபயோகப்படுத்தி வந்தேன்; உபயோகப்படுத்தினேன் என்று சொல்லிக் கொள்ளலாம் 😉 எப்பதாவது தான் ரீடரைத் திறப்பேன். எக்கச்சக்கமான பதிவுகள் இருக்கும்; சிலவற்றை மட்டும் வாசித்து விட்டு மீதவுள்ளவற்றை ‘mark all as read’ [தோழர்களின் பதிவுகள் இதற்க விதிவிலக்கு]. மொபைல் வந்ததிலிருந்து இந்தப் போக்கு மாறியது. அதில் கூகுள் ரீடர் ஆப்பை நிறுவி, தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். எனது வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்ததில் இதற்கு கணிசமான பங்கு உண்டு. எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்த போது தான், கூகுள் ரீடர் சேவையை நிறுத்தி விட்டது 😦 அதன் பின் கொஞ்ச நாட்களுக்கு, அது! இது! எது? என்று ஒவ்வொரு ரீடராக முயற்சித்து விட்டு, இப்போது gReader-ல் சவாரி செய்து கொண்டிருக்கிறேன்.

சரி, இந்தக் கதையெல்லாம் எதற்கு என்று கேட்பது புரிகிறது. இதை எனது வாசிப்பானுக்குப்(மொபைல்) பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பதிவாக்க நினைத்தேன்; முடியவில்லை. சில நாட்கள் தள்ளிப் போய் விட்டதென்றாலும் வாழ்த்தைப் பதிவு செய்து விடுவோம்; அப்புறம் பின்னால் ரீடர் குத்தமாகி விடப் போகிறது.