ஆறு‌ மணிக் குருவி

இதுவரை இருமுறை மட்டுமே இவ்வருடத்தில் பறவை காணலுக்கு சென்றிருந்தேன் 😔ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று Bngbirds குழுவினர் சவுல் ஏரியில்(Saul Kere) பறவை காணலை ஒருங்கிணைப்பார்கள். காலையில் எழுவது தற்போது சிரமமாகி விட்டதால் சற்று தாமதமாகவே குழுவினருடன் இணைந்து கொண்டேன். கோடை காலமாதலால் ஏரியில் நீர் குறைவாகவே இருந்தது. அதனாலேயே வழக்கத்திற்கு மாறாக நிறைய சங்குவளை நாரைகள்(Painted Storks) ஒருபுறம் குழுவாக மீன்களைத் துழாவிக் கொண்டிருந்தன.  ஏகப்பட்ட நீர்க்காகங்கள், நாரைகள், கொக்குகள், புள்ளி மூக்கு வாத்துகள், மடையான்கள், கருப்புத் தாமரைக் கோழிகள், நீலத் தாழைக்கோழிகள், குக்குறுவான்கள்.    புள்ளி ஆந்தைகள்(Spotted Owlets), சிவப்பு கானாங்கோழி(Ruddy-breasted Crake) மற்றும் முதல் முறையாக(Lifer) தோட்டக் கள்ளனைக் (Indian Pitta) கண்டது சிறப்பு. ஆறு மணிக் குருவி என்றழைக்கப்படும் தோட்டக் கள்ளனை நவ்ரங் என்று அழைப்பர்; ஒன்பது வண்ணங்களாலான மிகவும் அழகான பறவை. வெகு நாட்களுக்குப் பிறகு பறவைகளைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி 😊

சவுல் ஏரி

இன்று காலை 20-25கி.மீ மிதிவண்டி பயணம் செல்வதாகத் திட்டம். ஆனால் நேற்று இரவு சுதாகர் பறவை காணலுக்கு அழைக்கவும்; திட்டம் திசை மாறி விட்டது. சவுல் ஏரிக்கு(Saul Kere) காலை 6 மணி வாக்கில் கிளம்பினோம். 6:45க்கு ஏரியை நெருங்கும் போது விடிந்திருந்தது என்றாலும் வெளிச்சம் குறைவு தான். ஏரியில் ஏகப்பட்ட மாற்றங்களைக் காண முடிந்தது; ஆங்காங்கே சில பல இடங்களில் மரங்கள், புதர்களுக்கு முடி திருத்தப்பட்டது போலிருந்தது. சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர் நிறைந்திருந்தது; ஆதலால் நீர்ப் பறவைகள் குவிந்திருந்தன. நீர்க்காகங்கள், சாம்பல் நாரைகள், முக்குளிப்பான்களை வழக்கத்திற்கு மாறாக இன்று நிறைய கண்டேன். மெர்லின் செயலியின் உதவியுடன் பறவைகளின் ஓசைகளை வைத்து அவற்றை அறிய முயற்சித்தேன். பறவை காணலின் போது பலவித பறவைகளை பார்க்கும் வாய்ப்பை சவுல் ஏரி எப்போதும் வழங்கத் தவறுவதில்லை; நீர்ப்பறவைகள், பச்சைக் கிளி, சின்னான்கள், நாகணவாய்கள், தகைவிலான்கள், கதிர்க்குருவிகள், குக்குறுவான்கள், மீன்கொத்திகள், கள்ளிப்புறாக்கள், பஞ்சுருட்டான்கள், வாலாட்டிக் குருவிகள், தேன் சிட்டு, கரிச்சான் இன்ன பிற பறவைகள். சவுல் ஏரி எனக்கு நிறைய Lifers (முதன் முதலாக ஒரு பறவையைக் காணும் பாக்கியம்) கொடுத்திருக்கின்றது. இன்றும் என்னை ஏமாற்றாமல் சிவப்புச் சில்லையைக்(Lifer#166) காட்டி மெய்சிலிர்க்க வைத்தது. கானுயிர் புகைப்படக் கலைஞரான சுதாகர் கிளையில் இளைப்பாறும் சேற்றுப்பூனைப்பருந்து, அசையாமல் அழகுச் சிலையாய் புகைப்படத்திற்கு தன்னை ஒப்புவித்த சாம்பல் நாரை, மீனை வேட்டையாடி லாவகமாக தூக்கிப் போட்டு விழுங்கும் பாம்புத்தாரா என அழகுப் பறவைகளின் வாழ்வியலை அற்புதமாக படம்பிடித்துக் கொண்டிருந்தார். திரும்பி வர மனமில்லாமல் விடை பெற்றோம். நிறைவான காலை வேளை; மிக்க மகிழ்ச்சி!