வாழ்க்கைத் தத்துவம் விளக்கும்
யின்-யாங் சின்னம்,
கால்பிறை நிலவு.
Monthly Archives: பிப்ரவரி 2013
கீழக்குயில்குடி
கீழக்குயில்குடிக்குப் போகணும்னு சொன்னதிலிருந்து, எப்ப போகலாம்னு கேட்டுகிட்டே இருந்தான் கிஷோர். இன்று சாயங்காலம் நேரா, கீழக்குயில்குடி சமணர் மலைக்குக் கூட்டிட்டே போயிட்டான். மலையடிவாரத்தில் ஓர் அய்யனார் கோவில் இருந்தது. அதற்கு முன் ஒரு தாமரைக்குளம். அங்க தான் நீச்சல் பழகுனானாம் கிஷோர் 😉 . தொல்லியல் துறை மலையேறுவதற்குத் தோதாக, கொஞ்ச தூரம் வரை படிகளை அமைத்திருந்தது. படிகள் இருந்த வரை மலையில் ஏறி, அங்கிருந்த சிற்பங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, இருட்டிக் கிடந்த வானம் நீரை வாரி இறைத்தது 😦
அங்கிருந்த தீர்த்தங்கரர் சிற்பத்தில், சைடுல இருந்து இரண்டு இயக்கியர்கள் சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள்; தலைக்கு மேல் முக்குடை இருந்தது. இந்த மூன்று குடைகளும், மூன்று உலகங்களைக் குறிக்கின்றன. இது மூன்று உலகங்களுக்கும் அதிபதி என்பதை உணர்த்துகின்றதாம்.இன்னுமா கிளம்பல என்பது போல், மழை எங்களை அடித்து விரட்ட, மலைக்கு டாட்டா சொல்லி விட்டு கடகடவென்று கீழிறங்கினோம்.மழை நிற்கும் வரை காத்திராமல் கிளம்பியதால், சாரல் முகத்தில் சப் சப் என்று அடிக்க, தொப்பென்று மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
சாயங்காலம் – வான்மேகம் – நீள்வானம்
சாயங்காலம்
அழுது அழுது
சிவந்த கண்களுடன்
ஆதவன், விண்ணிடமிருந்து
பிரியாவிடை பெறும் நேரம்.
வான்மேகம்
நிறம் மாறும் பச்சோந்தி போல்,
நிமிடத்திற்கு ஓர் உருமாறினாலும்,
வெள்ளை மனம் கொண்ட அமீபா.
நீள்வானம்
வெண்மேகப் போர்வையை விலக்கி,
வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும்
நீல விழிகள் கொண்ட பூதம்.
****
இரா.சுப்ரமணி
15 02 2013
மாமதுரை போற்றுவோம்
மதுரையின் பழமை, பெருமை, வரலாற்று சிறப்புகளை விளக்கும் வகையில் ‘மாமதுரை போற்றுவோம்’ விழா மதுரையில் பிப்ரவரி 8,9,10 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. விழாவில் ஒரு நிகழ்ச்சியாக ‘மாமதுரையின் பெருமைக்கும் புகழுக்கும் பெரிதும் காரணம் – பழமையின் சின்னங்களே! மண்ணின் மக்களே!’ என்ற தலைப்பில், பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் தமுக்கம் திடலில் நடத்தப்பட்டது. பட்டிமன்றத்தில் நான் கேட்டறிந்த தகவல்களில், நினைவில் இருப்பவற்றைக் கீழே பட்டியலிடுகின்றேன்.
- ‘பழமையின் சின்னங்கள்’ அணிக்காக பேசியவர்கள் குறிப்பிட்ட சின்னங்கள் :- வைகை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கோரிப்பாளையம் பள்ளிவாசல், செயின்ட் மேரிஸ் தேவாலயம், மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், ஆனைமலை, திருமலை நாயக்கர் மஹால், சித்திரைத் திருவிழா, அழகர் மலை, ஆல்பர்ட் விக்டர் பாலம், அமெரிக்கன் கல்லூரி, தமுக்கம் திடல், புது மண்டபம், தாமரைப் பூ வடிவில் வடிவமைக்கப்பட்ட மதுரை வீதிகள் மற்றும் காந்தி அருங்காட்சியகம்
- ‘மண்ணின் மக்கள்’ அணிக்காக பேசியவர்கள் குறிப்பிட்ட சில மதுரைக்காரர்கள் :- எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி. எம். சௌந்தரராஜன், மணி ஐயர், நாராயணன் கிருஷ்ணன் மற்றும் ஜி.நாகராஜன்
- சென்னை நகரை சீரமைக்கும் பொருட்டு, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று, நகரமைப்பு பற்றி தெரிந்து கொண்டு வருவதாக கூறிய அதிகாரிகளுக்கு, ‘இதற்காக ஐரோப்பா செல்லத் தேவையில்லை. இரயிலேறி மதுரைக்குச் சென்று வாருங்கள்.’ என்று சொன்னாராம் காமராசர்.
- தென்னிந்தியாவில் சமணப் படுகைகள் மதுரையில் தான் அதிகமாக உள்ளன.
- பரிபாடல், மதுரைக்காஞ்சி என பல சங்க இலக்கியப் பாடல்களிலிருந்து மதுரையைப் பற்றிய வரிகளை மேற்கோள் காட்டினார்கள்.
- ‘தீபம்’ நா.பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’, ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே!’, சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ போன்ற நூல்கள் மதுரையை மையமாகக் கொண்டவை.
- ‘சொக்கன் ஊரணி’ என்ற பெயரே மருவி ‘செக்கானூரணி’ ஆனது. ‘சம்பந்த நல்லூர்’ என்ற பெயரே மருவி ‘சமயநல்லூர்’ ஆனது.
- ‘தமு’, ‘கமு’ என்ற தெலுங்கு சொற்களிலிருந்தே ‘தமுக்கம்’ திடலின் பெயர் உருவானது.
- முன்னர் சித்திரைத் திருவிழா ‘தைத்’ திங்களில் கொண்டாடப்பட்டு வந்தது. அதைத் தையிலிருந்து, சித்திரைக்கு மாற்றியவர் ‘திருமலை நாயக்கர்’.
- வைரமுத்துவின் வரிகளில் மதுரை:-
நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான்
நிமிர்ந்து முட்டும் கோபுரமும்
ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் – தமிழ்
அழுந்தப் பதிந்த சுவடுகளும்
காணக் கிடைக்கும் பழமதுரை – தன்
கட்டுக் கோப்பால் இளமதுரை!
பேராசிரியர், மாமதுரையின் பெருமைக்கும், புகழுக்கும் காரணம் சின்னங்களை உருவாக்கியும், அதைப் பாதுகாத்தும் வரும் ‘மண்ணின் மக்களே!'(நாம தான்) என்று தீர்ப்பளித்து பட்டிமன்றத்தை முடித்து வைத்தார். பட்டிமன்றம் முடிந்தவுடன், அப்படியே அங்கே கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மதுரையிலிருந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மதுரை வீதிகளின் வடிவமைப்பு மாதிரி, மதுரையைச் சுற்றியுள்ள இடங்களைப் பற்றிய தகவல்கள்(முகவரி மற்றும் வரைபடத்துடன்), புகைப்படங்கள், படங்கள் எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்து விட்டு வந்தேன்.
‘நானும் மதுரைக்காரன் தான்.’ என்று பெருமையுடன் கூறிக் கொண்டு, மாமதுரையைப் போற்றி, இந்தப் பதிவை இத்துடன் முடித்துக் கொள்கிறேன் 🙂