கள்வனின் காதலி

தன் காதலி கல்யாணியின் திருமணத்தால் மனமுடைந்து போயிருந்த முத்தையன், பூங்குளத்தை விட்டு திருப்பரங்கோயில் மடத்திற்கு கணக்குப் பிள்ளை வேலைக்குச் செல்கிறான். சென்ற இடத்தில் கார்வார் பிள்ளையின் சதியால் தங்கை அபிராமியைப் பிரிந்து சிறைக்கு செல்கிறான். சிறையிலிருந்து தப்பிச் செல்லும் முத்தையன், பிரபலமான கள்வனாகிறான். கல்யாணியுடன் ஏற்பட்ட எதிர்பாராத சந்திப்பு, அவர்கள் காதலை உயிர்ப்பிக்கிறது. அபிராமியை கமலபதியின் கைகளில் ஒப்படைத்து விட்டு, காதலியுடன் கள்வன் தப்பி ஓட திட்டம் தீட்ட, போலீஸ் அவனுக்கு வலை வீச. என்று இறுதி அத்தியாயங்களில் அனல் பறக்கிறது.

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – உலகில் உறுதியானது, உண்மையானது, அழிவில்லாதது ஒன்று உண்டு; அது அன்பு. தீய செயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல்.

சோலைமலை இளவரசி

தளவாய்ப் பட்டணம் கலகத்திற்குப் பின் குமாரலிங்கம் சோலைமலையின் அடிவாரத்திலுள்ள பாழடைந்த கோட்டையில் தங்க நேரிடுகிறது. அந்தக் கோட்டைக்குள் முன் எப்போதோ தான் பிரவேசித்தது அவர் நினைவுக்கு வருகிறது. விதி அவரைப் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. அப்போது அவர் மாறனேந்தல் யுவமகாராஜா உலகநாத சுந்தரபாண்டியத் தேவன். ஆங்கிலேயர்களின் துணையோடு சோலைமலை மகாராஜா மாறனேந்தலைக் கைப்பற்ற, உலகநாதர் தப்பிப் பிழைத்து சோலைமலைக் கோட்டைக்குள்ளேயே, சோலைமலை இளவரசி மாணிக்கவல்லியிடம் தஞ்சம் அடைகிறார்; மனதைப் பறிகொடுக்கிறார். பின் ஆங்கிலேயர்களின் வஞ்சத்தால் உயிரைப் பறிகொடுக்கிறார. இதே மாதிரியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒவ்வொன்றாக குமாரலிங்கத்துக்கு இப்போது நடக்க, தற்போதைய சோலைமலை இளவரசி பொன்னம்மாவும், குமாரலிங்கமும் இணைந்தார்களா என்பதே ‘சோலைமலை இளவரசி’யின் மீதிக்கதை.

கல்கியின் ‘சோலைமலை இளவரசி‘ – ‘தேசத் தொண்டர் குமாரலிங்கம்’, ‘சோலைமலைச் சாமியாரான’ ஓர் உருக்கமான தொடர் காதல் கதை.

பொய்மான் கரடு

சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் வழியில், டிரைவர் கல்கிக்கு பொய்மான் கரடைக் காட்டுகிறார். விசித்திரமான அந்தப் பாறையைப் பற்றி உள்ளூருக்குள் வழங்கி வரும் கதையை அப்படியே பயணத்தின் போது டிரைவர் எடுத்துவிட, அது ‘பொய்மான் கரடு‘ எனும் அமர இலக்கியமாக நமக்கு கிடைத்து விட்டது.
கதாநாயகன் செங்கோடன் ஐந்து ஏக்கரா காட்டுக்கு ராஜா;அநாதை;கருமி. கதாநாயகி செம்பவளவல்லி அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவள். இவர்களுக்கு இடையில் குமாரி பங்கஜா என்னும் மாயமான் வர, அதைத் துரத்திக் கொண்டு ஓடும் செங்கோடன், பங்கஜாவின் கூட்டாளிகளின் திட்டத்தை முறியடிக்கப் போய் கொலைகாரனாகிறான் 😀 “குமாரி பங்கஜாவின் கூட்டாளிகள் யார்? அவர்களின் திட்டம் என்ன? செங்கோடன் சேர்த்து வைத்த புதையல் என்ன ஆனது? செங்கோடன் கொலை வழக்கிலிருந்து விடுபட்டானா?” இது போன்ற பல முடிச்சுகளை அழகாய் அவிழ்த்திருக்கின்றார் ‘பொய்மான் கரடு’ நாவலில் கல்கி. இருக்கிறத விட்டுட்டு, பறக்கறதுக்கு ஆசைப்படுறவங்களுக்கு ‘பொய்மான் கரடு’ பாடம்.

மோகினித்தீவு

கல்கியின் நண்பர் கவிராயர், ஜப்பான் யுத்தத்தின் போது பர்மாவிலிருந்து தாயகம் திரும்பும் வழியில், கப்பல் ஒரு மனித நடமாட்டமில்லாத தீவின் அருகில் கரை ஒதுங்குகிறது. தீவின் அழகில் மயங்கி அதை விட்டு வர மனமின்றி கவிராயர் அத்தீவை ரசித்துக் கொண்டிருக்கின்றார். யாருமில்லாத அத்தீவில் ஒரு ஆணும், பெண்ணும் கவிராயர் கண்களுக்கு தென்படுகின்றனர். ‘யார் அவர்கள்? அவர்கள் எப்படி, எப்போது இந்த தீவுக்கு வந்து சேர்ந்தார்கள்? மோகினித்தீவின் பிண்ணனி என்ன?’ இப்படியான கேள்விகளுக்கு பதிலே ‘மோகினித்தீவு’. கல்கியின் விறுவிறுப்பான இந்தக் குறுநாவல் ஒரு சிறுவிருந்து.

கல்கியின் மோகினித்தீவு நாவலை online-ல் படிக்க இங்கே செல்லவும்.