காரிருள்விடுதூது

கதிரவனை வழியனுப்பி விட்டு,
கரியதொரு போர்வையை விரித்து, – அதில்
கரையும், வளரும் ஒளிர்மதியையும்,
கண் சிமிட்டும் விண்மீன்களையும் பரப்பி,
கருவிழிகளைப் பூட்டி மாந்தரை
கனவுலகிற்கு அழைத்துச் செல்லும்,
காரிருளே! இரவே!

கரும்பினும் இனியவள், என்
கண்மணி தனிமையில் வாடும் இந்நேரம், அவள்
கலக்கத்தைப் போக்கி, நான் திரும்பும்
காலம் தொலைவில் இல்லை என்றுரைத்து அவள்
கண்ணீர் கழித்து, களிப்பைக் கூட்ட
காடுகள், மலைகள், கடல்கள் கடந்து
காரிருளே! நீ தூது செல்வாயாக!

Go 2009! வா 2010!

பாய் வீட்ட சுருட்டி எறிஞ்சிட்டு, புது வீட்டுக்கு போனோம்.
ஸ்கந்தகிரிக்குப் போகையில, போகையில… கூட வந்த பசங்களுக்கு அடி பட்டிருச்சு. அப்புறம் என்ன பண்ண? அவங்கள ஆஸ்பத்திரில சேத்துட்டு மலையேறப் போனோம்.
மால்பே, செயின்ட் மேரீஸ் தீவு, மரவந்தே, காப் கடற்கரைகளில் ஆடிய ஆட்டங்கள் மறக்க முடியாதது.
நாங்க போக வேண்டிய இடத்துப் போகலைனாலும், அட்டைக்கு இரத்த தானம் கொடுத்த இடமான கெம்மன்குன்டி பச்சைப் பசேலேன கண்ணுக்குள்ளேயே நிக்குது.
நாலஞ்சு தடவ சென்னைக்குப் போனது, தீபாவளிக்கு முந்தின நாள் சென்னையில இருந்து மதுரைக்குப் போறதுக்குள்ள. அதெப்படி நம்ம போற பஸ் மட்டும் பஞ்சர் ஆகுதுனு தெரியல 😦
மனதை ஈர்த்த சே மற்றும் காஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள், அந்தாதியில் படித்த அபிராமி அந்தாதி, நம்ம வீட்டு கல்யாணங்கள், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கடைசி இரண்டு மாதங்கள் என்று சென்ற வருடம் சென்று விட்டது.

வரும் வருடம் அனைவருக்கும் வளமும், நலமும் தரட்டும்!

வடு

நாவினால் சுட்ட வடு ஆறும்
தீயினால் சுட்ட வடு ஆறும்
நாயைப்போல் தெருத்தெருவாய்
இழுத்துவந்து சுட்ட வடுவம் ஆறும்
ஆறாது… சந்ததியினால்…
சாதியினால் சுட்ட வடு.