புத்தகங்கள்

இப்போதெல்லாம் ஏதாவது ஒரு புத்தகத்தை வாங்க வேண்டும் என்றால் முதலில் அதற்கு கிண்டில் பதிப்பு இருக்கிறதா என்று கிண்டுவது; அடுத்ததாகத் தான் அச்சு பதிப்பை அலசுவது. ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ புத்தகத்தில் அ.முத்துலிங்கத்தின் புத்தக விமர்சனங்களை வாசித்து கொண்டிருக்கும் போதே அவற்றை வாங்க முடிவு செய்தேன். அவை பின்வருமாறு:-

  • புலி நகக்கொன்றை – பி.ஏ.கிருஷ்ணன்
  • The Devil That Danced On The Water – Aminatta Forna
  • A Short History Of Nearly Everything – Bill Bryson

இவற்றில், அந்த இரண்டு ஆங்கில புத்தகங்களின் அச்சு பதிப்பை வாங்கியிருக்கிறேன். A Short History Of Nearly Everything புத்தகத்துடன் இணைப்பாக வந்த புத்தகக்குறியைப் பாருங்கள்; விற்பன்னர்கள் ரேட்டிங்கிற்கு கொடுக்கும் ரேட்டின் விளம்பரம். இதான் இப்போது டிரெண்டிங் போல.

Bookmark

சின்னஞ்சிறு பழக்கங்கள்

ஜேம்ஸ் கிளியர் எழுதிய ‘சின்னஞ்சிறு பழக்கங்கள்’ புத்தகத்தை கொஞ்சம் தாமதமாக வாசித்து விட்டதாக நினைக்கிறேன். கொரானா காலகட்டத்தில் தினசரி உடற்பயிற்சிக்கென சிறிது நேரம் ஒதுக்க ஆரம்பித்தேன். இரண்டு வருடங்களுக்கும் மேலாக அப்பழக்கத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறேன். புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள‌ நிறைய உத்திகளை‌ நானாகவே கண்டடைந்து நடைமுறையில் செயல்படுத்தி எனது உடற்பயிற்சி பழக்கத்தைத் தக்க வைத்திருக்கிறேன். நிறைய விஷயங்கள் நாம் அறிந்தவை தான்; ஆனால் அதை பயன்படுத்தி எப்படி புதிய பழக்கத்தை ஆரம்பிக்கவும், கெட்ட பழக்கத்தை கைவிடுவது எனவும் விதிகளைப் பட்டியலிட்டு உதாரணத்துடன் ஆசிரியர் விளக்குகிறார். இப்புத்தகத்தை வாசித்த பின் நிச்சயமாக உங்களது இலக்கை நோக்கிய திட்டமிடல் மேம்பட்டு இருக்கும். தமிழில் நாகலட்சுமி அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். கட்டாயம் பரிந்துரைக்கிறேன். புத்தகத்திலிருந்து சில குறிப்புகள் கீழே:-

துவக்கத்தில் மிகச் சிறியவைபோலவும் முக்கியமற்றவைபோலவும் தோன்றுகின்ற மாற்றங்களை, தொடர்ந்து பல ஆண்டுகள் நீங்கள் தக்க வைத்துக் கொள்ளத் தயாராக இருந்தால், அவை ஒன்றிணைந்து அற்புதமான விளைவுகளைப் பெற்றுக் கொடுக்கும்.

ஒன்றில் மேதமை பெறுவதற்குப் பொறுமை தேவை. பிரபல சமூகச் சீர்திருத்தவாதியான ஜேக்கப் ரீஸ் இவ்வாறு கூறியுள்ளார்: “எதுவும் வேலைக்கு ஆகாது என்பதுபோலத் தோன்றும்போது, கல்லுடைக்கும் தொழிலாளி ஒருவர் ஒரு பெரிய பாறையை உடைப்பதை நான் சென்று பார்க்கிறேன். அவர் நூறு முறை அதைத் தன் சுத்தியலால் அடித்தும் ஒரு கீறல்கூட அதில் தெரிவதில்லை. ஆனால் நூற்றியோராவது முறை அவர் அதை அடிக்கும்போது, அந்தப் பாறை இரண்டாகப் பிளக்கிறது. அந்தக் கடைசி அடி அந்தப் பாறையை உடைக்கவில்லை, மாறாக, அதற்கு முந்தைய அனைத்து அடிகளும் சேர்ந்தே அதை உடைத்தன என்பதை நான் அறிவேன்.”

நீங்கள் அடைய விரும்புகின்றவற்றின்மீது கவனம் செலுத்துவதற்கு பதிலாக, நீங்கள் யாராக ஆக விரும்புகிறீர்களோ அதன்மீது உங்கள் கவனத்தை ஒன்றுகுவிப்பதுதான் உங்களுடைய பழக்கங்களை மாற்றுவதற்கான ஆற்றல்மிக்க வழியாகும்.

நடத்தை மாற்றத்திற்கான நான்கு விதிகள் சிறப்பான பழக்கங்களை உருவாக்குவதற்கு நாம் பயன்படுத்தக்கூடிய எளிய விதிகளே. அவை பின்வருமாறு: (1) அதை வெளிப்படையாகத் தெரியும் ஒன்றாக ஆக்குங்கள், (2) அதை வசீகரமானதாக ஆக்குங்கள், (3) அதை சுலபமானதாக ஆக்குங்கள், (4) அதை மனநிறைவளிக்கும் ஒன்றாக ஆக்குங்கள்.

நம்முடைய கனவுகள் தெளிவற்றவையாக இருக்கும்போது, நாம் வெற்றி பெறத் தேவையான குறிப்பிட்ட விஷயங்களைச் செய்வதைத் தவிர்த்துவிட்டு, முக்கியத்துவமற்ற வேலைகளில் நாள் முழுவதையும் செலவிடுவதற்கு ஏகப்பட்டச் சாக்குப்போக்குகளை நம்மால் கூற முடியும்.

பயிற்சிதான் கற்றலுக்கான ஆற்றல் வாய்ந்த வழியே அன்றி, திட்டமிடுதல் அல்ல.

தீர்மானிக்கும் கணங்களில்தான் பல பழக்கங்கள் நிகழுகின்றன. நீங்கள் மேற்கொள்ளும் தீர்மானம் உங்களை ஓர் ஆக்கபூர்வமான நாளை நோக்கி வழிநடத்தும் அல்லது ஓர் ஆக்கபூர்வமற்ற நாளை நோக்கி வழிநடத்தும்.

ஒரு பழக்கம் நீடிக்க வேண்டுமென்றால், நீங்கள் உடனடியாக ஒரு வெற்றியாளர்போல உணர வேண்டும் – அது ஒரு சிறிய வெற்றியாக இருந்தாலும்கூட.

பழக்கங்கள் + பிரக்ஞையுடன்கூடிய பயிற்சி = மேதமை

நாம் ஓர் அடையாளத்தை எவ்வளவு அதிக இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருக்கிறோமோ, அதைத் தாண்டி வளருவது நமக்கு அவ்வளவு அதிகக் கடினமானதாக ஆகிறது.