கைபேசி கால கடிதங்கள்

அன்பே!
உனக்கு நான் கடிதங்கள் எழுதியிருக்கிறேனா?
– இல்லை.
அதனாலென்ன?
நுட்பங்கள் விரல் நுனியில் விளையாடும் கைபேசி யுகத்தில்
எல்லா செயலிகளிலும் நான் தட்டச்சி அனுப்பிய
ஒவ்வொரு செய்தியையும்
சிரிப்பான்களையும்
மீம்களையும்
படங்களையும்
ஒலி/ஒளித் துணுக்குகளையும்
ஒரு வரிச் செய்திகளையும் கூட
ஒன்று விடாமல் கோர்த்துப் பார்,
அப்போது புலப்படும்
நம் கைபேசி கால கடிதங்களும்,
அவை கட்டமைக்கும் மிக…மிகப் பெரிய நூலகமும்.

Advertisements

‘உயிருடன்…’ கவிதைத் தொகுப்பு மின்னூல்

Uyirudan_Cover_Imageவலைப்பதிவுகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பே ‘உயிருடன்…’. ஒரு வட்டத்துக்குள் நில்லாமல், காதல், நட்பு, நம்பிக்கை, மூடநம்பிக்கை, வானம், மேகம், நிலவு, இரவு, மழை … எனப் பல்வேறு பாடுபொருட்களை வகை தொகையில்லாமல் தன்னுள் அடைத்து வைத்திருக்கிறது இத்தொகுப்பு. எழுத்து வாகனத்திற்கு வாசிப்பு எரிபொருள் அவசியம் என்று பற்ற வைக்க, வாசிப்பு என்னை பற்றிக் கொண்டது. எழுத்து, வாசிப்பைத் தொடர்ந்த எழுத்து முயற்சி, புதிய முயற்சிகளுக்காக வாசிப்பு என நீண்ட பயணத்தில், நான் நடை பழகியதன் தொகுப்பு இம்மின்னூல். நன்றி!

மின்னூல் :- http://freetamilebooks.com/ebooks/uyirudan-poems/

பிலோமி டீச்சர்

வா.மு.கோமுவின் ‘பிலோமி டீச்சர்’ சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். தொகுப்பில் நினைவில் நின்ற சிறுகதைகள்:-

Philomi_Teacher

  • துணையின் தேவையை உணர்த்தும் ‘திசை தவறி நகரும் நதிகள்
  • திருநங்கைகளின் பிரச்சனைகளை முன் வைக்கும் ‘புள்ளி பிசகிய கோலம்‘, ‘உயிர் வலிக்கிறதே யாத்தே!’
  • மனநோயாளிகளின் மனநிலையைப் பிரதிபலிக்கும் ‘எது நிஜம்? எது பொய்?’
  • சிலரிடம் நாம் காட்டும் அதீத அன்பிற்கு பின்னால் நம் நினைவுகளில் வாழும் நெருக்கமானவர்கள் இருப்பதைக் காட்டும் ‘கட்டம் போட்ட லுங்கி அணிந்தவன்’
  • மண உறவில் ஏற்பட்ட காயங்கள் மறைந்து கொண்டிருக்கையில், தன்னை இன்னொருவனிடம் முழுவதும் ஒப்படைத்து விட்டவளுக்கு ஏற்படும் காயம் சொல்லும் ‘பிலோமி டீச்சர்

ஈர்ப்பும் வடையும்

ஓர் ஊரில் பாட்டி ஒருவர் விற்பதற்காக வடை சுட்டுக் கொண்டிருந்தார். அவர் அசந்த நேரத்தில் அவ்வழி சென்ற காக்கா ஒன்று, ஒரு வடையை அவரிடமிருந்து சுட்டுக் கொண்டு பறந்து போய் மரக்கிளை ஒன்றில் உட்கார்ந்து, அவ்வடையை ருசிக்கத் தயாரானது. அம்மரத்தின் கீழே பசியுடன் அமர்ந்திருந்த நியூட்டனுக்கு காக்காவிடமிருந்த வடையைக் கண்டு உமிழ்நீர் சுரந்தது. உடனே நியூட்டன் காக்காவைப் பார்த்து, ‘அறிவில் சிறந்த காகமே, உனக்கு ஈர்ப்பு விசை என்றால் என்னவென்று தெரியுமா?’ என்று வினவினார். காக்கா ‘தெரியாது!!!’ என்று சொல்லி முடிப்பதற்குள், காக்காவின் வாயிலிருந்த வடை கீழே விழுந்து, நியூட்டனின் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. ‘ஈர்ப்பு விசையால் தான் இவ்வடை நேராக என் கையில் வந்து விழுந்தது.’ என்று காக்காவுக்கு விடையை விளக்கி விட்டு, வடையை சுவைக்க ஆரம்பித்தார் நியூட்டன்.

கர்ஜனை

காட்டில் உள்ள விலங்குகள், பறவைகளென அனைத்து உயிரிகளும், கர்ஜிப்பதைத் தவிர வேறெந்த குரலோ/ஒலியோ எழுப்பலாகாது என சிங்க ராஜா அதிரடியாக அவசர அரசாணை ஒன்றை பிறப்பித்தது. ‘என்னடா இது வம்பா போச்சு! நமக்கு எப்படி கர்ஜிக்க வரும்?’ என மைண்ட் வாய்ஸ் எழுந்தாலே, அவர்கள் வனத்துரோகிகள் என குற்றஞ்சாட்டப்பட்டு காடு கடத்தப்பட்டார்கள். இந்த சூழ்நிலையில் ஆணையை மறுத்தவர்களும், எதிர்த்தவர்களும் ஏதாவதொரு ஊன் உண்ணிக்கு விருந்தாகியிருப்பார்கள் என்பதை தனியாக விளக்கத் தேவையில்லை. எஞ்சியிருந்தவர்கள் ஒன்றும் பேச முடியாமல் மௌனத்தைக் கடைபிடித்தார்கள். நாட்கள் ஓடின… காடு இயல்பு நிலைக்கு திரும்பிய பின், தன் வேட்டையை முடித்துக் கொண்டு காடு திரும்பிய சிங்க ராஜாவுக்கு காட்டின் அமைதி கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. மாதங்கள் ஓடின… அடுத்ததாக ஒரு நன்னாளில் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் கர்ஜனை காட்டின் குரலாக அறிவிக்கப்பட்டு, அதைக் கொண்டாடும் வகையில் ஒரு வாழ்த்து வடையும் சுட்டு அனுப்பப்பட்டது, ஊமையாகிப் போய் தமக்கு நாக்கு எதற்கு என மறந்து போன வன உயிரிகளுக்கு. ஓங்கி ஒலிக்கட்டும், கர்ஜனை!