வானம் தொலைவில் இல்லை

வெண்நுரைகளை உடுத்திப் படுத்திருக்கும்
விண்ணைத் தொட்டு வர ஆசை.
பறந்தது…
மேகங்களைத் தொட்ட போது தான்
பறவைக்கு உறைத்தது,
மேகங்களும் வானமும் அருகருகே இல்லை என்று 😮

இன்னமும் வானம்
அசையாமல் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தது,
அதே அறிவிப்புப் பலகையுடன்,
“வானம் தொலைவில் இல்லை”.

இரயிலும் நிலவும்

இரவில் ஆரம்பித்தது பயணம்.
இரயிலும், நிலவும் சேர்ந்தே நகர்ந்து கொண்டிருந்தன.
இரயிலை விரட்டிக் கொண்டு
நிலவு நகர்கிறதா?
நிலவைத் துரத்திக் கொண்டு
இரயில் ஓடுகிறதா?
இரயிலா? நிலவா?

பொழுது விடிந்தது.
மூச்சிறைக்க, இரயில் மட்டும்
தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது.
நிலவைக் காணவில்லை!