மீன்கள்

நேற்று மாலை புதுவரவாக எட்டு மீன்களை வாங்கி வந்தோம்; பச்சை, இளஞ்சிவப்பு, ஊதா, நீல வண்ணங்களில் டெட்ரா வகையறா, இரு தங்க மீன்கள் மற்றும் இரு சிவப்பு தொப்பி ஒராண்டா. ஆறு மாதங்களுக்கு முன் வீட்டில் மீன்கள் வளர்க்க ஒரு மனதாக சம்மதித்தேன். ஒரு மனதாக ஏனெனில் என்ன தான் குடும்பத்தினர் ஆர்வம் காட்டினாலும் நானோ மீன் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்வது, மீன்களுக்கு உணவு பரிமாறுவது, நீர் மாற்றுவது என மீன்வளத்துறைக்கும் நான் பொறுப்பேற்க வேண்டும் என்பதாலே. முதன்முதலாக வீட்டுக்கு வந்த டெட்ராக்கள் சட்டென மறைந்து வீட்டை துக்க வீடாக மாற்றி விட்டன. அதிலிருந்து நீர் சேரவில்லை எனில் கலப்பதற்காக சொட்டு நீலம் போல் கொடுக்கப்பட்ட திரவத்தை நீர் மாற்றும் வேளையில் கலக்க மறப்பதில்லை. அந்த ஒரு மருந்து எல்லாவற்றையும் தடுக்க வல்லது அல்ல. ஏதாவது ஒரு மீன் அவ்வப்போது காரணம் ஏதும் தெரிவிக்காமலே மரணத்தை தழுவிய‌ வண்ணம் இருக்கின்றது; அதற்கு மனமும் பழகிப் போய் விட்டது. மீன்களின் வண்ணங்களும், தொட்டிக்குள் அவற்றின் ஆட்டமும் ஓட்டமும் குழந்தைகளையும் நம்மையும் குதூகலிக்க செய்கின்றன; அதனாலேயே தொடர்கின்றன புதுவரவுகள். புதுவரவு நல்வரவாகுக!

மீன் தொட்டி

பிற்சேர்க்கை

  • சரியாக ஒரு வாரத்தில் ஒரு தங்க மீன் முதல் விக்கெட்டாக தன் இன்னுயிரை ஜுன் 5 அன்று இழந்து விட்டது. ஆழ்ந்த அனுதாபங்கள்!
  • ஜூன் 22 – பச்சை டெட்ராவின் இறப்பு
  • ஜூன் 23 – ஒரு சிவப்பு தொப்பியின் மரணம். மற்றொரு சிவப்பு தொப்பியும் தங்க மீனும் கவலைக்கிடம்.
  • ஜூன் 24 – தங்க மீன் விடைபெற்றுக் கொண்டது.
  • ஜூன் 29 – டெட்ராக்களில் நங்கூரப் புழுக்கள். தனிமைப்படுத்தப்பட்டவை ஒவ்வொன்றாக உயிரிழப்பு. புதுவரவாக மஞ்சள் மற்றும் பச்சை டெட்ராக்கள், 2 தங்க மீன்கள், ஒத்தையாய் ஓய்ந்து போய் கிடக்கும் சிவப்பு தொப்பிக்கு ஒரு ஜோடி.
  • ஜூலை 16 – ஓய்ந்து போயிருந்த சிவப்பு தொப்பி முற்றிலுமாக ஓய்வெடுத்துக் கொண்டது. மஞ்சள் மற்றும் பச்சை டெட்ராக்கள் நங்கூரப் புழுக்களால் மரணப் படுக்கைக்குத் தள்ளப்பட்டன. புதுவரவாக ஐந்து குட்டி தங்க மீன்கள்.
  • ஜூலை 27 – கடைசி சிவப்பு தொப்பியும் விடை பெற்று கொண்டது. இப்போது தொட்டியில் தங்க மீன்கள் மட்டும்.
  • ஆகஸ்ட் 25 – 2 பெரிய தங்க மீன்கள் இவ்வாரத்தில் இறந்து விட்டன.
  • ஆகஸ்ட் 27 – ஐந்தில் ஒரு குட்டி தங்க மீன் நண்பர்களை விட்டு பிரிந்தது.
  • செப்டம்பர் 20 – இன்னுமொரு தங்க மீன் விடை பெற்றுக் கொண்டது.
  • செப்டம்பர் 23 – நான்கு புதிய குட்டி தங்க மீன்கள் வருகை

சித்தன்னவாசல்

சித்தன்னவாசலுக்குள் நுழையும் போது சரியாக காலை மணி 10. குகை ஓவியங்களை பார்வையிட அப்போது தான் அனுமதிப்பார்கள். நுழைவுச் சீட்டை அங்கேயே வாங்கிக் கொண்டோம்; பெரியவர்களுக்கு ரூ.20/-; 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு நுழைவுச் சீட்டு தேவையில்லை. 1200 வருடங்கள் பழமையான ஓவியம்; அழிந்தும் அழியாமலும் அக்காலத்தை நம் கண் முன் நிறுத்துகின்றது; துறவி, மீன்கள், பறவைகள், விலங்குகள் என பல்லுயிர்களும் பரவியிருக்கும் தாமரைக் குளம். அத்துடன் சமணர்களின் சிற்பங்கள். பெரியவர் ஒருவர் குடைவரைக் கோயிலின் சிறப்புகளை எல்லாம் சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைக்கின்றார். 25 ஆண்டுகளாக இப்பணியை செய்யும் அவர், ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்கிறாராம். குடைவரைக் கோயிலின் உள் நின்று அவர் ஒருநிலைப் படுத்தி ஓம் எனும் போது, அது மட்டும் எதிரொலிக்கின்றது. ஓவியத்தைப் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. அடுத்ததாக ஏழடிப்பட்டம். அதற்கு நுழைவுக் கட்டணம் தனி; ரூ.25/-. மலையேறுவதற்கு தோதாய் படிகளும், கைப்பிடிக் கம்பிகளும் உள்ளன. கொளுத்தும் வெயிலில் குழந்தைகளே ஏறி விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேலே பல சமணர் படுகைகள் இருந்தன. அங்கே கொஞ்ச நேரம் இளைப்பாறி விட்டு இறங்கினோம். புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தையும் ஒரு எட்டுப் பார்த்து விட்டுப் போகாலம் என்று அங்கு சென்றோம். பெரியவர்களுக்கு ரூ.5/-, சிறுவர்களுக்கு ரூ.3/-. பழங்காலத்து பொருட்கள், ஊர்வன, விலங்குகள், பறவைகள், மெல்லுடலிகள், இசைக் கருவிகள், உலோகத்தினால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் என எக்கச் சக்கமாய் இருந்தன; சிறப்புத் தோற்றமாக அசைந்து சத்தமிடும் இயந்திர டி.ரெக்ஸ் டைனோசர். அருங்காட்சியகம் அருமை. குழந்தைகளுடன் சென்று கண்டு களிக்கப் பரிந்துரைக்கிறேன். சிறப்பு.

Sittannavasal

கணக்கெடுப்பு

இன்றைய மிதிவண்டி உலா காலை 5:30 மணிக்கு துவங்கியது. ஒரு வழி தொலைவு 6 கி.மீ. பயணிப்பது பிரதான சாலையில் என்றாலும் வழி நெடுக தெரு நாய்கள். இப்படி பொதுவாக சொன்னால் மிகையாக எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பிருப்பதால், போற போக்கில் அப்படியே தெரு நாய்களை கணக்கெடுப்பதாக முடிவு. 1,2,5… விடிந்தால் எனக்கென்ன என்று உறக்கத்திலிருப்பவை, சோம்பல் முறிப்பவை, சாலையின் குறுக்கே மறுக்கே எதுக்கென்றே தெரியாமல் ஓடிக் கொண்டிருப்பவை, தனது ஏரியாவை யார் கடந்தாலும் குரைத்து வைப்பவை, மண்ணில் உருண்டு புரண்டு கொண்டிருப்பவை, விளையாடுவன, கறிக்கடை வாசலில் எலும்பை எதிர் நோக்கி பவ்யமாய் நிற்பவை, குப்பைக் கூளத்தைக் கிளறி ஏதாவது சிக்குமா எனத் தேடிக் கொண்டிருப்பவை, உடல் நலம் குன்றியவை, கூட்டமாக நின்று அலப்பறை செய்பவை என ஓரளவுக்கு கண்ணில் பட்டவைகளை கணக்கில் வைத்துக் கொண்டேன். பெரும்பாலும் பிரதான சாலையை ஒட்டியிருந்தவர் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர். அதிலும் சிலர் விடுபட்டிருக்கலாம். 40-50 இருக்கலாம் என்ற என் கணிப்பைத் தாண்டிச் சென்ற எண்ணிக்கை 85-ஐத் தொட்டு நின்றது. இன்னும் கொஞ்ச தூரம் சென்றிருந்தால் சதமடித்திருக்கும் போல. கணக்கெடுப்பு நிறைவடைந்தது. முடிவுகளில் சொல்வதற்கு ஒன்றுமில்லை; முடிவாக சொல்ல வேண்டுமானால் நாய்கள் ஜாக்கிரதை

ஹாட்ஸ்பாட்

கைபேசிகளில் ஹாட்ஸ்பாட் என்றொரு வசதி உள்ளது. அதன் மூலம் அது தாரை வார்த்துக் கொடுக்கும் தரவை, வேறு சாதனங்களை அதில் இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டிலிருந்து வேலை பார்க்கும் போது, அவசர காலங்களில் இந்த வசதி பஞ்சத்தில் அடிபட்டவனுக்குக் கிடைத்த பஞ்சாமிர்தமாய் இனிக்கும். வோடஃபோன் சேவையுடைய ஒரு கைபேசி, ஏர்டெல் சேவையுடைய ஒரு கைபேசி, ஜியோ சேவையுடைய பகிரலைக் கருவி என ஆயுதங்கள் எல்லாம் தயார் நிலையில் இருந்தன. வார இறுதி நாட்கள் மட்டும் தங்கி விட்டு சென்று விடலாம் என்று ஊருக்கு வந்தால் வாரக் கணக்காகி விட்டது. வீட்டிலிருந்தே பணி புரிய வேண்டிய சூழல். தயார் நிலையில் இருந்த ஆயுதங்களை வைத்து நேற்று, இன்று, நாளை என்று ஒவ்வொரு நாளாகத் தள்ளிக் கொண்டிருந்தேன். இன்று மும்மூர்த்திகளும் சேர்ந்து நன்றாக ஒரு நாமத்தைப் போட்டு விட்டார்கள். காலையிலிருந்து தொடர்ந்து ஜூம் சந்திப்புகள். இணையம் அணைந்து அணைந்து இணைந்த படி இருந்தது. என் பேச்செல்லாம் திக்கித் திக்கி சென்றது; எதிரில் பேசுபவர்களது பேச்சோ, விட்டு விட்டு ஏதோ சங்கேத மொழியில் புரிந்து கொள்ள முடியாத அளவுக்குக் கேட்டது. எப்போதும் ஏதாவது ஓர் ஆயுதம் தான் மக்கர் பண்ணும். இன்று அனைத்தும் சேர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது போல் இருந்தது. இப்படி அனைத்தும் செயலற்றுப் போகும் போது உபயோகப்படுத்த வேண்டிய மந்திர வார்த்தைகளை (BRB, Have to drop off இன்ன பிற) பிரயோகித்து நாளைத் தள்ளியாயிற்று. ஹாட்ஸ்பாட் மாதிரியான மண் குதிரைகளை எல்லாம் நம்பி வற்றிப் போன ஆற்றில் கூட இறங்கக் கூடாது. இன்னும் சில நாட்கள் ஹாட் ஸ்பாட்டில்…

ரெட்டைச் சக்கரக் குருவி

மகளுக்கு மிதிவண்டி வாங்கச் சென்ற போது பெரியவர்களுக்கான வண்டிகள் மீது, எனது கவனம் குவிந்ததில் ஆரம்பித்தது இந்தப் பயணம். எந்த மிதிவண்டி வாங்குவது? கியர் வச்சதா? கியர் இல்லாததா? சாலையில் ஓட்டுவதற்கா? கரடு முரடான இடங்களில் ஓட்டுவதற்கா? இரண்டுக்கும் இடைப்பட்ட ஒன்றா? ஏகப்பட்ட கேள்விகள்.‌ இணையத்தில் அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுத்தது மேக்சிட்டி ஐ பைக் சிங்கிள் ஸ்பீடு சைக்கிள். வாங்குவதெல்லாம் சரி, மிதிவண்டியை கொஞ்ச நாட்களாவது ஓட்டுவேனா, இல்லை அது வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டு கிடக்குமா என்று சுற்றத்தாருக்கு மட்டுமல்ல எனக்கே சந்தேகமாகத் தான் இருந்தது. கொரோனா கால கட்டத்தில் எடை வேறு எகிறிப் போயிருந்தது; எடை குறைப்புக்கு மிதிவண்டி உதவாது என்று ஏகப்பட்ட எச்சரிக்கைகள். அனைத்தையும் ஓரங்கட்டி விட்டு வாங்கிய கடனுக்கு, சிறிது சிறிதாக தினமும் ஓட்ட ஆரம்பித்தேன். கரிய நிறத்திற்கு ஏற்றாற் போல் அதற்கு கரிச்சான் எனப் பெயரிட்டேன்; அந்த ரெட்டை சக்கரக் குருவி என்னை ஏற்றிக் கொண்டு எட்டுத் திக்கும் மதுரையைச் சுற்றிக் காண்பித்தது; நாடடங்கில் வாடிப் போயிருந்த நாடி நரம்புகளுக்கெல்லாம் புத்துயிர் கொடுத்து, உடலளவிலும், மனதளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மிதிவண்டியில் எழுதியிருந்த ‘REDISCOVER CYCLING‘ என்ற வாசகத்துக்கு ஏற்ப மிதிவண்டி ஓட்டும் பழக்கத்தை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய பரிமாணத்தில் கண்டடைந்தேன். இப்போது எதற்கு இதெல்லாம் என்றால், இன்று எனது ரெட்டைச் சக்கரக் குருவி இதுவரை 7000கி.மீ தூரத்தைக் கடந்து பறந்து கொண்டிருக்கிறது. இன்னும் உயரப் பறக்கட்டும்…

சின்னஞ்சிறு பழக்கங்கள்

ஜேம்ஸ் கிளியர் எழுதிய ‘சின்னஞ்சிறு பழக்கங்கள்’ புத்தகத்தை கொஞ்சம் தாமதமாக வாசித்து விட்டதாக நினைக்கிறேன். கொரானா காலகட்டத்தில் தினசரி உடற்பயிற்சிக்கென சிறிது நேரம் ஒதுக்க ஆரம்பித்தேன். இரண்டு வருடங்களுக்கும் மேலாக அப்பழக்கத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறேன். புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள‌ நிறைய உத்திகளை‌ நானாகவே கண்டடைந்து நடைமுறையில் செயல்படுத்தி எனது உடற்பயிற்சி பழக்கத்தைத் தக்க வைத்திருக்கிறேன். நிறைய விஷயங்கள் நாம் அறிந்தவை தான்; ஆனால் அதை பயன்படுத்தி எப்படி புதிய பழக்கத்தை ஆரம்பிக்கவும், கெட்ட பழக்கத்தை கைவிடுவது எனவும் விதிகளைப் பட்டியலிட்டு உதாரணத்துடன் ஆசிரியர் விளக்குகிறார். இப்புத்தகத்தை வாசித்த பின் நிச்சயமாக உங்களது இலக்கை நோக்கிய திட்டமிடல் மேம்பட்டு இருக்கும். தமிழில் நாகலட்சுமி அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். கட்டாயம் பரிந்துரைக்கிறேன். புத்தகத்திலிருந்து சில குறிப்புகள் கீழே:-

துவக்கத்தில் மிகச் சிறியவைபோலவும் முக்கியமற்றவைபோலவும் தோன்றுகின்ற மாற்றங்களை, தொடர்ந்து பல ஆண்டுகள் நீங்கள் தக்க வைத்துக் கொள்ளத் தயாராக இருந்தால், அவை ஒன்றிணைந்து அற்புதமான விளைவுகளைப் பெற்றுக் கொடுக்கும்.

ஒன்றில் மேதமை பெறுவதற்குப் பொறுமை தேவை. பிரபல சமூகச் சீர்திருத்தவாதியான ஜேக்கப் ரீஸ் இவ்வாறு கூறியுள்ளார்: “எதுவும் வேலைக்கு ஆகாது என்பதுபோலத் தோன்றும்போது, கல்லுடைக்கும் தொழிலாளி ஒருவர் ஒரு பெரிய பாறையை உடைப்பதை நான் சென்று பார்க்கிறேன். அவர் நூறு முறை அதைத் தன் சுத்தியலால் அடித்தும் ஒரு கீறல்கூட அதில் தெரிவதில்லை. ஆனால் நூற்றியோராவது முறை அவர் அதை அடிக்கும்போது, அந்தப் பாறை இரண்டாகப் பிளக்கிறது. அந்தக் கடைசி அடி அந்தப் பாறையை உடைக்கவில்லை, மாறாக, அதற்கு முந்தைய அனைத்து அடிகளும் சேர்ந்தே அதை உடைத்தன என்பதை நான் அறிவேன்.”

நீங்கள் அடைய விரும்புகின்றவற்றின்மீது கவனம் செலுத்துவதற்கு பதிலாக, நீங்கள் யாராக ஆக விரும்புகிறீர்களோ அதன்மீது உங்கள் கவனத்தை ஒன்றுகுவிப்பதுதான் உங்களுடைய பழக்கங்களை மாற்றுவதற்கான ஆற்றல்மிக்க வழியாகும்.

நடத்தை மாற்றத்திற்கான நான்கு விதிகள் சிறப்பான பழக்கங்களை உருவாக்குவதற்கு நாம் பயன்படுத்தக்கூடிய எளிய விதிகளே. அவை பின்வருமாறு: (1) அதை வெளிப்படையாகத் தெரியும் ஒன்றாக ஆக்குங்கள், (2) அதை வசீகரமானதாக ஆக்குங்கள், (3) அதை சுலபமானதாக ஆக்குங்கள், (4) அதை மனநிறைவளிக்கும் ஒன்றாக ஆக்குங்கள்.

நம்முடைய கனவுகள் தெளிவற்றவையாக இருக்கும்போது, நாம் வெற்றி பெறத் தேவையான குறிப்பிட்ட விஷயங்களைச் செய்வதைத் தவிர்த்துவிட்டு, முக்கியத்துவமற்ற வேலைகளில் நாள் முழுவதையும் செலவிடுவதற்கு ஏகப்பட்டச் சாக்குப்போக்குகளை நம்மால் கூற முடியும்.

பயிற்சிதான் கற்றலுக்கான ஆற்றல் வாய்ந்த வழியே அன்றி, திட்டமிடுதல் அல்ல.

தீர்மானிக்கும் கணங்களில்தான் பல பழக்கங்கள் நிகழுகின்றன. நீங்கள் மேற்கொள்ளும் தீர்மானம் உங்களை ஓர் ஆக்கபூர்வமான நாளை நோக்கி வழிநடத்தும் அல்லது ஓர் ஆக்கபூர்வமற்ற நாளை நோக்கி வழிநடத்தும்.

ஒரு பழக்கம் நீடிக்க வேண்டுமென்றால், நீங்கள் உடனடியாக ஒரு வெற்றியாளர்போல உணர வேண்டும் – அது ஒரு சிறிய வெற்றியாக இருந்தாலும்கூட.

பழக்கங்கள் + பிரக்ஞையுடன்கூடிய பயிற்சி = மேதமை

நாம் ஓர் அடையாளத்தை எவ்வளவு அதிக இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருக்கிறோமோ, அதைத் தாண்டி வளருவது நமக்கு அவ்வளவு அதிகக் கடினமானதாக ஆகிறது.

ஜியோ சேவை மைய அனுபவம்

இன்று அருகில் உள்ள ஜியோ மையத்துக்கு எனது பகிரலை கருவிக்கான பேட்டரி வாங்க சென்றிருந்தேன். காசைக் கொடுத்தோமா வாங்கினோமா என்றில்லாமல், இதற்காக ஒரு வரிசையைத் தாண்டி வர வேண்டியிருந்தது; இன்ன பிற பழுது பார்க்கும் சேவைகளுக்கும் அதே வரிசை. UPI பரிவர்த்தனை மட்டுமே செல்லும் என்று சொல்லி விட்டே அழைத்தார்கள். என்னுடன் வரிசையிலிருந்த சிலர் ஜியோ பட்டன் மொபைலுக்கு பேட்டரி வாங்க வந்திருந்தனர்; ஜி பே, ஃபோன் பே ஒன்லி என்றவுடன் பெப்பேனு கடையை விட்டு நடையைக் கட்டி விட்டார்கள். எப்படி அவர்களிடம் UPI பரிவர்த்தனைக்கான செயலிகள் இருக்கும்; எனக்கு இந்த லாஜிக் கே உதைக்கிறது. நான் பேட்டரி வாங்கிய பின், வாடிக்கையாளர் சேவையை மதிப்பிட ஒரு விண்ணப்பத்தை நீட்டி கையொப்பம் மட்டும் கேட்டனர். நான் அதை வாசித்து விட்டு எல்லாவற்றுக்கும் 3/5. அதைப் பார்த்த அன்பர்கள் ‘சார் எல்லோரும் வார இறுதியிலே மையத்துக்கு வருவதால் சேவை தாமதமாகிறது; நேற்றெல்லாம் ஈ ஓட்டி கொண்டிருந்தோம்’ என்று சமாதானங்களை அடுக்கி கொண்டிருந்தார்கள். இதுவே நான் வெறும் கையொப்பம் மட்டும் போட்டிருந்தால் அவர்களே 5/5-ஐ அவர்களுக்கு அள்ளி வழங்கியிருப்பார்கள். அப்படியே பண பரிவர்த்தனையும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற எனது கருத்தை அந்த விண்ணப்பத்தில் பதிவு செய்து விட்டு நான் நடையைக் கட்டினேன்.