இருண்ட வாழ்வு

பதிவு எழுதி பல நாட்களாகி விட்டது; இன்னமும் அந்த பனிக்கால உறக்கத்திலிருந்து மீளவில்லை 😦 புதிதாக எதுவும் எழுதவில்லை என்பதால், ஒரு பழைய பதிவை ‘சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை’ முன்னிட்டு இன்று மீள்பதிவு செய்கிறேன்.

இருண்ட வாழ்வு
அவன் அந்த ஹோட்டலுக்குள்
நுழைந்து சில நிமிடங்களாகி இருந்தது.
அவன் அமர்ந்திருக்கும் இடத்தில்,
அவனுக்கு முன்னர் சாப்பிட்டவர்களின்
இலையைக் கூட யாரும் எடுக்க முன் வரவில்லை.
பசியும், கோபமும்
அவன் பற்களை நறநறவென்று கடிக்க வைத்தன.
சில நிமிடங்களுக்குப் பின்,
கிழிந்த அழுக்கு சட்டையுடன் சிறுவன் ஒருவன்,
ஒரு கையில் துணியுடனும், ஒரு கையில் வாளியுடனும்
அவனருகில் வந்து நின்றான்.
அச்சிறுவனின் கையில் ஆறாத புண்கள்;
கண்களின் ஓரம் வெளியேறத் துடிக்கும் கண்ணீர்.
அச்சிறுவனது தோற்றம் கண்டு,
அவன் சீற்றம் கொண்டான். நேராக
அந்த ஹோட்டல் முதலாளியிடம் சென்று,
‘பதினான்கு வயதிற்குட்பட்ட சிறுவர்களை
வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி தவறு.
சிறுவர்களின் உடல், மனம், கல்வி பாதிக்கப்படும்
வகையில் அவர்களின் மீது திணிக்கப்படும்
எதுவும் சட்டப்படி குற்றம்.
வறுமையின் பிடியில் சிக்கி,
வாழ முடியாமல் வழியின்றி தவிக்கும்
இவர்களை இப்படி வாட்டி வதைக்கிறீர்களே!…’ – என்று
அவன் அறிந்தோ, அறியாமலோ அவர்கள் செய்யும்
குற்றங்களைப் அவர்களுக்கு புரியும் படி சொல்லிக் கொண்டிருந்தான்.
எந்த வித சலனமுமில்லாமல், அவன் சொல்வதை
ஒரு காதில் வாங்கி
மறு காதின் வழியே விட்டுக் கொண்டிருந்தார் முதலாளி.
‘இதுவே, உங்கள் பிள்ளையாக இருந்தால்
இப்படி வேலை வாங்குவீர்களா?’ – என்று
அவன் தொடர்ந்து கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்.
‘தம்பி, அவன் என் பையன் தான். என்
புள்ளய எப்படி வளர்க்கணும்னு எனக்குத் தெரியும்.
உங்க வேலையப் பார்த்துட்டு போறீங்களா!’
அவன் சற்றும் எதிர்பார்க்காத பதில்…,
தொடர்ந்து எதுவும் பேச முடியாமல்,
திரும்பிப் பாராமல்,
வந்த வழியிலேயே நடக்கலானான் அவன்.
‘அய்யோ! அந்த ஆள் என்
அப்பா இல்லை.
அநாதை ஆசிரமத்திலிருந்து என்னை
அழைத்து வந்து, அடிமையாய்
ஊதியம் இல்லாத வேலைக்காரனாய் ஆக்கி,
உழைப்பை உறிஞ்சிக் கொண்டிருக்கும் அட்டை…’
உண்மையை யாரிடமும் சொல்ல முடியாமல்
தவித்துக் கொண்டிருந்தான், சில நிமிடங்களுக்கு முன்னரே
அறைக்குள் அடைக்கப்பட்ட அந்த சிறுவன்.
சிறுவனுக்காக அவன் எழுப்பிய குரல்,
அச்சிறுவனது இருண்ட வாழ்வில்,
ஒளியைப் பரப்பியிருந்தது, – அந்தக் கொடிய
இருண்ட நரகத்திலிருந்து,
வெளிவரும் நாள் வெகுதொலைவில் இல்லையென்று,
அச்சிறுவன் மனதில் தன்னம்பிக்கையையும் அது விதைத்திருந்தது.
***
இரா.சுப்ரமணி
10 06 2008