சென்ற வருடம்

  • வருடத்தின் முதல் நாளே, லால் பாக்கில் நானும் செந்திலும் பத்து கி.மீ ஓடினோம். இது நாங்கள் பதிவு செய்த ஆரோவில் மாரத்தானுக்கான முதற்கட்ட பயிற்சி. தினமும் காலை பனியில் எழுந்து ஓடியதன் பயன், ஆரோவில் அரை மாரத்தானை (21.1 கி.மீ) நடந்தும்-ஓடியும் முடிக்க முடிந்தது. அதற்கு பிறகு ஓட்டம் ஆட்டம் கண்டது வேறு கதை. இருந்தாலும் அடுத்ததாக பெங்களூரில் 10கி.மீ ஓட்டத்திலும் பங்கேற்று முடித்தேன். இதற்கெல்லாம் காரணமான ஓட்டக்கார் வன்னிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
  •  இணையதளத்தில் சில வகுப்புகளில் இணைந்து பயிற்சி எடுத்து பார்த்தேன். Courseera மிகச் சிறப்பாக இருக்கின்றது. வரும் நாட்களில் விருப்பப் பாடம் எதுவாக இருந்தாலும் இணையம் வழியாக இவ்வாறு படிப்பது இன்னும் பரவலாகும்
  • தம்பி அஜீத்தின் இறப்பு பேரிழப்பு. இன்னும் அதிலிருந்து முழுவதுமாக மீள முடியவில்லை.
  • இவ்வருடம் திரைப்படங்கள் பார்ப்பது அருகி விட்டிருந்தது. பார்த்தவை எதுவும் நினைவில் நிற்கும் படியாக இல்லை.
  • கட்டுரைகள், வலைப்பதிவுகள், நாவல்கள், சிறுகதைகள் என வாசிப்பு நிறைவளிக்கும் படியாக இருந்தது. தொடர்ந்து வாசித்து வரும் ‘வெண்முரசு’ நாவல் வரிசையை வாசிக்காத நாட்கள் குறைவே. நாஞ்சில் நாடனின் ‘மிதவையும்’, ‘சதுரங்கக் குதிரையும்’, வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’, மௌனியின் கதைகள், வைக்கம் முகமது பஷீரின் ‘உலகப் புகழ் பெற்ற மூக்கு’, ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’ ஆகியவை நன்றாக இருந்தன. கிண்டில் பேப்பர் ஒயிட் வாசிப்பான் வாங்கியிருக்கிறேன்; இதனால் வாசிப்பு அதிகரிக்கிறதா என்று பார்ப்போம்.
  • எதுவுமே எழுதவில்லை 😦 வலைப்பூவில் எழுதிய பதிவுகள் கூட மிகச் சொற்பமே.
  • சொல்லிக் கொள்ளும் படியாக எங்கும் பயணிக்கவே இல்லை. அலுவலகத்திலிருந்து சென்ற அமெரிக்கா பயணம் மறக்க முடியாதது. இரண்டு நாட்கள் விமான நிலையங்களுக்குள்ளாகவே சுற்றிக் கொண்டு இருந்தால் எப்படி மறக்க முடியும் (பெங்களூரு -> லண்டன் -> நியூயார்க் -> டாலஸ் -> சான் ஃபிரான்சிஸ்கோ).