கட்டற்ற மென்பொருள்

தனியுரிம நிறுவனங்கள் விதிக்கும்,
நீ மட்டும் தான்,
இதற்கு மட்டும் தான்
உபயோகிக்க வேண்டும் … போன்ற
கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு
உரிமைகளின்றி, வெறும்
உரிமத்துடன் வாங்கும்
மென்பொருள்களுக்குப் பதிலீடாக
எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தவும்,
தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்,
மாற்றங்கள் செய்திடவும், செய்த
மாற்றங்களை வெளியிடவுமென,
பயனர்களுக்கு முழு சுதந்திரத்தையும்
மட்டற்ற மகிழ்ச்சியையும் தருபவையே,
கட்டற்ற மென்பொருள்கள்.

நிழல் தேடல்

கொளுத்தும் வெயிலில்
இளைப்பாற நிழல்
தேடும் போது தான்,
விழிகளுக்குத் தெரிகின்றன,
வழியிலிருந்து
அழிந்து போன மரங்கள்.

ஓப்பன் சோர்ஸ் – ஒரு கையேடு

Free Software என்றவுடன் இலவசமாய் கிடைக்கக்கூடிய மென்பொருள்கள் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள், ‘இலவச மென்பொருள்’ என மொழிபெயர்க்கவும் செய்கிறார்கள். ஆனால் ‘Free Software’-ல் உள்ள ‘Free’ சுதந்திரத்தைக் குறிக்கிறது என்றும் அதை ‘கட்டற்ற மென்பொருள்’ என்று தான் கூற வேண்டும் என்றும் கட்டற்ற மென்பொருள்களின் வித்திலிருந்து புத்தகத்தை ஆரம்பிக்கிறார் ஆசிரியர். கட்டற்ற மென்பொருள்கள் கொடுக்கும் நான்கு சுதந்திரங்கள், ஒரு குட்டி ஸ்பூன் கதையின் மூலம் எளிதில் நமக்கு புரிய வைக்கப்படுகிறது. அடுத்ததாக குனு இயக்கம் யாரால், எப்போது, எதற்காக துவங்கப்பட்டது என்னும் வரலாறு விறுவிறுப்பாக விவரிக்கப்படுகிறது. லின்க்ஸ் கெர்னல் குனு சிஸ்டத்துடன் இணைந்து ‘குனு/லினக்ஸ்’ இயங்குதளம் உருவானது பற்றியும், பெரும்பாலும் ‘லினக்ஸ்’ என்றே அறியப்படும் ‘குனு/லினக்ஸ்’ இயங்குதளம், ‘குனு/லினக்ஸ்’ என்று அழைக்கப்பட வேண்டிய அவசியமும் எடுத்துரைக்கப்படுகிறது. ஓப்பன் சோர்ஸ் இயக்கத்தின் தொடக்கம், அதன் பிண்ணனி, ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர்களுக்கும், ஃப்ரீ சாஃப்ட்வேர்களுக்கும் உள்ள வேறுபாடு, ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் உருவாகும் முறை மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப கருவிகள் எல்லாம் அலசப்படுகின்றன. இதெல்லாம் சரி, ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர்களால் நமக்கு என்ன பயன் என்ற கேள்விக்கு, ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர்களின் பயன்கள் காரணங்களுடன் பட்டியலிடப்படுகின்றன. பட்டியலைப் படித்தவுடன் கண்டிப்பாக இதை ஏன் நாம் பயன்படுத்திப் பார்க்கக் கூடாது என்று தோன்றும். அதற்கு வசதியாக அடுத்த பகுதியிலேயே உபுண்டு குனு/லினக்ஸ் இயங்கு தளத்தை நம் கம்ப்யூட்டரில் நிறுவுவதற்கு சொல்லித் தரப்படுகின்றது. நிறுவிய பின், ஒரு ஆர்வத்தில் இப்படி இந்த இயங்கு தளத்தை நிறுவி விட்டோமே, விண்டோஸில் பல சாஃப்ட்வேர்களை பல விதமான பணிகளுக்கு பயன்படுத்தி வந்திருக்கிறோம், அவற்றை எல்லாம் இந்த இயங்குதளத்தில் எப்படி இன்ஸ்டால் செய்து, உபயோகிப்பது என்கிற கேள்வியோ கவலையோ உங்களுக்கு வேண்டாம். அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் சாஃபட்வேர்களுக்கு இணையான ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர்களும் அவற்றை எப்படி இந்த இயங்குதளத்தில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும் ஓர் அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓப்பன் சோர்ஸ் – ஒரு கையேடு -> வழிகாட்டி.

புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்.