எனது பிம்பம்

கண்ணாடியில் எனது பிம்பம்.
எனது இன்றைய செயல்களை
நினைவு கூர்ந்தேன், ஒவ்வொன்றாக.
கொஞ்சம் கொஞ்சமாக
மறைந்து போய்,
மீண்டும் தெளிவாகத் தெரிந்தது,
கண்ணாடி முன் நான் நிற்கும்
இந்தக் கணம் வந்த போது,
கண்ணாடியில் எனது பிம்பம்.

செர்ரீ பறிக்க…

சென்ற ஞாயிற்றுக் கிழமை ப்ரண்ட்வுட்டுக்கு (Brentwood,CA) செர்ரீ பறிக்க சென்றிருந்தோம். பள்ளிக்கூடத்துக்கு சென்று வரும் வழியில் அவ்வப்போது நெல்லிக்காய், நவாப்பழங்கள் எல்லாம் பறித்துத் தின்றிருக்கிறேன். ஆனால் இப்படி பழங்களைப் பறித்து சாப்பிட, ஓர் ஊருக்கு செல்வதா? ‘அப்படி அங்கு என்ன விஷேஷம்?’ என்று விசாரித்தால், இந்த ப்ரண்ட்வுட் ஊரில் அறுவடைக் காலங்களில் ‘நீங்களே பறித்துக் கொள்ளலாம்’ (U-Pick) என்று ஒரு பொன்னான வாய்ப்பு தருகிறார்கள். அதாவது கனிகள் நிறைந்திருக்கும் மரங்களுள்ள தோட்டங்களுக்குள் உங்களை அனுமதிப்பார்கள். நீங்களாகவே அதைப் பறித்துத் தின்று பார்த்து ;-), வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம்(சில தோப்புகளில் கண்டிப்பாக நீங்கள் பறிக்கும் பழங்களை நீங்களே வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கட்டாயமும் உண்டு). இவ்வாறு நீங்களாகவே பறித்து வாங்கும் பழங்கள், வெளியே கடைகளில் வாங்கும் பழங்களை விட விலை குறைவாக இருக்கும். முதலில் நாங்கள் ஒரு தோட்டத்திற்குள் நுழைந்து, அங்கே லோக்குவாட்(Loquat)[சீன மொழியில் பீ-பா], ப்ளம், செர்ரீ மற்றும் ஆப்ரிகாட்(Apricot) போன்ற பழங்களை ருசித்து விட்டு, வரும் போது நாங்களே பறித்த ப்ளம் பழங்களை வாங்கிக் கொண்டோம். அடுத்ததாக ஒரு ஸ்ட்ராபெர்ரீ தோட்டத்துக்குள் புகுந்தோம். இங்கே பறிக்கும் பழங்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்பதால், வெறும் வேடிக்கையுடன் நிறுத்திக் கொண்டோம். கடைசியாக ஒரு செர்ரீ தோட்டத்துக்குள் நுழைந்து, திகட்டும் வரை செர்ரீ பழங்களைத் தின்றோம். தோட்டத்திலிருந்து வெளியேறும் போது செர்ரீக்களையும், கொஞ்சம் பீ-பாக்களையும் வாங்கிக் கொண்டோம். இப்படியாக மதிய உணவு, வெறும் பழங்களிலேயே முடிந்து விட, சாயங்காலம் வீடு திரும்பினோம். என்ன தான் வித விதமான பழங்களை அன்று நாங்கள் சுவைத்திருந்தாலும், நம் ஊரில் கட்டுக் காவலை மீறி கல்லால் வீழ்த்தி கிடைக்கும் கனிகளை சுவைக்கும் போது கிடைக்கும் ருசி மட்டும் கிடைக்கவேயில்லை… 😉