அவ்வுலகம்

த்ரிவிக்ரமன் கேள்விப்பட்ட முதல் மரணத்திலிருந்து ஆரம்பிக்கிறது அவ்வுலகம். கற்பனைகளில் அவர் கண்ட சாமியைக் கல்லாகக் கண்டதும் ‘எல்லாக் கற்பனைகளுமே பொடிப் பொடியாகிற நிகழ்வுகளின் தொகுப்பு தான் வாழ்க்கை’ என்பது புரியத் துவங்குகிறது. பல புதிய உலகங்களை விக்ரமனுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் மரணத்தை ஏற்றுக் கொண்ட விதம், அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. தனது கடைசி சடங்குகளை எப்படி செய்ய வேண்டும், என்று சுக்கிரனிடம் சொல்லி விட்டு, சில நாட்களிலேயே அவ்வுலகம் செல்கிறார் த்ரிவிக்ரமன். மரணத்தை வரவேற்று ஏற்றுக் கொண்டதால் அவ்வுலகில் அவருக்கு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. அங்கு அவர் தான் பார்க்கவே கூடாது என நினைத்த சிலரையும், மீண்டும் என்றாவது ஒருநாள் பார்க்க மாட்டாமோ என பார்க்க ஏங்கும் சிலரையும் பார்க்கிறார். அந்த பிம்பங்கள் அவருக்கு இறந்த காலத்தையும், அப்போது அவர் இழந்ததையும் நினைவுபடுத்துகின்றன. ஒவ்வொரு பிம்பத்துடன் அவர் உரையாடி விட்டு செல்லும் போதும் அவர் மனத்திலிருந்த அழுக்குகள் ஒவ்வொன்றாக வெளியேறுகின்றன. ‘பூலோக வாழ்வை எவ்வளவு எளிதாக வீணடித்து விடுகிறோம்’ என்பதை ஒவ்வொரு பிம்பத்தின் வாயிலாகவும் நம் கண் முன் நிறுத்தி, சிந்திக்க வைக்கிறார் வெ.இறையன்பு.

அவ்வுலகப் பயணத்தின் போது மனதில் பதிந்த பொன்மொழிகள்

  • ஒப்பிடாத வரை உன் வாழ்வு சொர்க்கம்.
  • நினைவுகளின் தொகுப்பே வாழ்வின் விரிவாக்கம்.
  • எந்த உயர்ந்த விஷயமும் கேள்விக்குள்ளாக்கப்படலாம்.
  • நம்பிக்கைகள் எல்லாமே ஒருவகையில் மூடநம்பிக்கைகளே.

அவ்வுலகம் – இறப்புக்குப் பின் தொடரும் இறந்த காலம்…

இடி, மின்னல், கொலுசு

மின்னலுக்கு
முன்னறிவிப்பு,
அவள் வருகையை
இடித் திசைக்கின்றன
வெண்கொலுசுகள்.