உடற்தகுதி வயது

நேற்று கூட வயதைப் பற்றிய பேச்சு வந்தது. சும்மா வேடிக்கைக்காக கொஞ்சம் குறைத்து சொன்னேன்; புதிதாக சந்திக்கும் நபர்களுக்கு சந்தேகம் ஏதும் வராது. மூத்த மகள் இரண்டாவது படிக்கிறாள் என்றால் போதும், அது எப்படி என்று ஆராயத் தொடங்குவார்கள். சில நிமிடங்களுக்கு அவர்களது கற்பனை குதிரைகள் ஓடிய வேகத்தில் காணாமலே போயிருக்கும். அது கிடக்கட்டும். என்ன தான் அளந்தாலும், வயது ஏறிக் கொண்டே போகும்; நிறுத்தவோ குறைக்கவோ ஏதும் வழி வகை இல்லை. மனதளவில் இன்னும் இளமை, வயது வெறும் எண், என்றும் பதினாறு என்றும் தேற்றிக் கொள்ளலாம்; மாற்றிக் கொள்ள இயலாது. இது இப்படி இருக்க, எனது ஸ்மார்ட் கடிகாரம் உடற்தகுதியின் அடிப்படையில் கணக்கிட்டு கூறும் வயதைப் பார்க்கையில் மட்டும் எப்போதும் அளவிலா ஆனந்தத்தில் திளைப்பேன். எனக்கு 20 என்று என்னாலே நம்ப முடியாத அளவுக்கு அள்ளி விட்டாலும், பார்க்க நன்றாக தானே இருக்கிறது. அதுவும் சும்மா ஒன்றும் சொல்லவில்லை; கடந்த ஒன்றரை வருடங்களாக சேகரித்து வைத்துள்ள எனது இதயத் துடிப்பு, உடற்பயிற்சி அளவீடுகள் என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு இந்த வயதைக் கணக்கிடுகிறது. எனது Garmin Forerunner 245 Music ஸ்மார்ட் கடிகாரத்தில் எனக்கு பிடித்த சிறப்பம்சங்களில் உடற்தகுதி அடிப்படையிலான வயதும்(Fitness Age) ஒன்று. எனது மனைவி Garmin Venu Sq 2 Music உபயோகிக்கிறார். அந்த ஸ்மார்ட் கடிகாரத்தில் உடற்தகுதி வயது அம்சம் ஒரு படி மேலே போய் விட்டது. உங்களது உடற்தகுதி வயதிலிருந்து இன்னும் ஒரு இரண்டு வயதைக் குறைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிடுகிறது. வேற லெவல் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல.

மீட்சி

சென்ற வாரம் பெங்களூரு 10கி.மீ பந்தயத்தை ஓடி முடித்த போது, கையிலிருந்த ஸ்மார்ட் கடிகாரம் ‘மீட்சி – 4 நாட்கள்’ என காட்டியது. எந்தவொரு செயலையும் முடித்து விட்டு சேமிக்கும் போது மீட்சிக்காகும் நேரத்தை கடிகாரம் காண்பிக்கும்; பொதுவாக அது சில மணி நேரங்களாக இருக்கும். அன்று கடிகாரம் காட்டியது 4 நாட்கள். முன்பெல்லாம் 10கிமீ பந்தயங்களில் கலந்து கொண்டால் கால்கள் இயல்புநிலைக்கு திரும்ப அடுத்து வரும் மூன்று நாட்களை எடுத்துக் கொள்ளும். கடந்த வருடம் கால்கள் பத்து கிமீ பந்தயங்களின் போது மீட்சிக்கென நேரங்கள் எதையும் எடுத்து கொள்ளவில்லை. ஆகையால் 4 நாட்கள் கொஞ்சம் அதிகமாக தான் தெரிந்தது; ஆனால் கடிகாரத்தின் அசரீரி அச்சு அசலாக பலித்தது. சரியாக நான்கு நாட்கள் ஆனது, கால்கள் இயல்பு நிலைக்கு திரும்ப; துல்லியமான கணிப்பு. இம்மாதிரி அவ்வப்போது ஒரு மேஜிக்கை நிகழ்த்தி தனது இருப்பையும் மதிப்பையும் தெரியப்படுத்த எனது கார்மின் ஸ்மார்ட் கடிகாரம் தவறுவதில்லை. அது மட்டுமா, ஓட எடுத்துக் கொண்ட நேரம், அதிகபட்ச வேகம், சராசரி வேகம், இதயத் துடிப்பு, அதில் நடந்த நேரம் என பலதரப்பட்ட தரவுகளை தன்னகத்தே திணித்து வைத்துக் கொண்டு நம்மைத் திணறடிக்கிறது. நன்று!