கன்னியாகுமரி

தனது அடுத்த படத்தின் கதை விவாதத்திற்காக கன்னியாகுமரி வந்த இயக்குநர் ரவி, தற்செயலாக அவனது இளமைக்கால காதலி விமலாவை ஒரு வெள்ளைக்காரனுடன் பார்க்க நேரிடுகிறது. முதன் முதலாக விமலாவை சந்தித்த நாள், கன்னியாகுமரியில் நடந்த அந்த விபத்து, அந்த விபத்திற்கு பின் விரிசல் விழுந்து உடைந்து போன அவர்களது காதல் என்று நினைவலைகள் ஒவ்வொன்றாக அவனுக்குள் மோதிச் செல்கின்றன. தன்னை அவளிடம், ஒரு வெற்றியாளனாக, அவளை விட அழகான, சிறந்த மனைவியை அடைந்தவனாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறான். விமலாவை சந்திக்கும் போது, தனது ஆசை நாயகி பிரவீணாவை தன் மனைவி என்று அறிமுகப்படுத்துகிறான். ‘வெள்ளைக்காரனுக்கும் உங்களுக்கான உறவு?, அந்த விபத்திலிருந்து எப்படி மீண்டிங்க?, இவர் மேல கோபம் வரலியா?’, என்று பிரவீணா கேட்கும் கேள்விகளுக்கு விமலா சொல்லும் பதில்கள், அவளை மேலும் பல படிகள் உயரே எடுத்துச் செல்கின்றன;ரவிக்கு விமலா மீதான வெறுப்பை அதிகரிக்கின்றன. எப்படியாவது விமலாவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பெத்தெல்புரம் ஸ்டீபனை அழைத்து வருகிறான், ரவி. அந்த திட்டமும் தோல்வி அடைய, பிரவீணாவும் அவனை விட்டு சென்று விட, ரவி ஒரு வெறுமையை உணர்வதுடன் முடிகிறது ‘கன்னியாகுமரி’.

‘கற்பனை எதிரியோட சண்டை போட ஆரம்பிச்சா முடிவே இல்லை.’ என்று சொல்லும் பிரவீணாவும், ‘குற்ற உணர்வு இல்லாம நாம செய்றது எல்லாமே ஒழுக்கமான விஷயம்தான்’ என்று சொல்லும் விமலாவும் சிந்திக்க வைக்கிறார்கள். ரவிக்கும் பிரவீணாவுக்கும் இடையேயான உரையாடல்கள் அருமை. ‘அந்த காலத்திலே …’ என்று அவ்வப்போது அனுபவங்களை அள்ளி வீசும் புரடக்ஷன் மேனஜர் நாராயணன், ‘ஏகயாய ராஜகுமாரி’ ஷைலஜா, ரவியின் மனைவி ரமணி, ரவியுடன் கதை விவாதத்திற்கு வந்திருந்த வேணு கோபால், ரவியின் குருநாதர் ஜார்ஜ் எனப் பலரும், கன்னியாகுமரியின் கடலலைகளில் நாம் பயணிக்கத் துணையாக இருக்கின்றார்கள்.

ஜெயமோகனின் ‘கன்னியாகுமரி’ – ஒரு மிடறு விடமும், அமுதமும்.

கலைடாஸ்கோப்

அவள் அணியும்
வண்ண வண்ண
கண்ணாடி வளையல்கள்
எனக்குள் எதிரொளித்து
வரைகின்றன
வண்ண வண்ண
கலைடாஸ்கோப் வடிவங்களை.

பிணி – மூப்பு – மரணம்

பிணி
மூப்பு
மரணம்…
இவையெல்லாம் நானும் தான் கண்டேன்.
ஞானம் ஏதும் வரவில்லை;
மருத்துவக் காப்பீடு
வருங்கால வைப்பு நிதி
ஆயுள் காப்பீடு,
ஆகியவை தான்
ஞாபகத்திற்கு வருகின்றன.

சிட்டுக்குருவி

மாடியில் காய வைத்திருந்த
தானியங்களை அவை கொத்தித்
தின்னும் போதும் விரட்ட மனமில்லாமல்
பார்த்து ரசித்த நாட்கள்…
வீட்டின் மூலையில் எப்போதாவது,
அவை கூடு கட்டும் போது,
அரிசிகளை அந்த கூட்டிற்குள்
அள்ளிப் போட்ட நினைவுகள்…
பல நாட்களுக்குப் பிறகு,
நான் பார்த்த சிட்டுக்குருவி,
பழைய நினைவுகளைக் கிளறிக் கொண்டிருந்தது.
பார்த்துப் பழகிய அந்த
சின்னஞ்சிறிய பறவைகள்,
அழிந்து வரும் பறவைகளின்
பட்டியலில் சேர்ந்திருக்கிறதாம்.
அரிய உயிரினமாகி விட்ட
அந்தக் குருவியைப்
படம் பிடித்துக் கொண்டிருந்த போது
வந்தது ஓர் அலைபேசி அழைப்பு.
வந்த அழைப்பை,
ஒரு குற்ற உணர்வுடன் ஏற்று பேசத் தொடங்கினேன்,
அலைபேசியிலிருந்து வரும் நுண்ணலைகளும்,
சிட்டுக்குருவிகளின் அழிவிற்கு ஒரு காரணம் என்பதால்.

அடிமாடு

பள்ளியிலிருந்து திரும்பும் போது வழியிலேயே பார்த்து விட்டான். வீட்டுக்குள் நுழைந்தவுடன் அம்மாவிடம் கேட்டான், ‘நம்ம மாட ஏம்மா களத்துல நிக்குற லாரில ஏத்திருக்காங்க?’.
‘அதுக்கு ஒடம்புக்கு முடியலல, அதான் டாக்டர்ட்ட கூட்டிட்டு போறோம்.’
‘அப்பாவும் நம்ம மாட்டோட டாக்டரப் பாக்க போறார்ல?’
‘அப்பா போகல. மாடு ஒடம்பு சரியானதும் அடுத்த வாரம் வீட்டுக்கு திரும்பி வந்துரும்’ என்று சொல்லி விட்டு அம்மா தன் வேலையைத் தொடர்ந்தாள்.
களத்திற்கு சென்று மாட்டை பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். வண்டி கிளம்பியவுடன் தான் வீட்டிற்கு திரும்பினான் சிறுவன்.
சரியாக ஒரு வாரம் முடிந்தவுடன், பள்ளியிலிருந்து வந்தவுடன் கொட்டகைக்கு ஓடினான். மாடு இல்லை. அம்மாவிடம் கேட்டான்.
மறந்திருப்பான் என்று நினைத்தவள் இந்த கேள்வியை அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இந்த முறை மாடு திரும்பி வரும் என்று சொல்லவில்லை; அது வராது என்று சொல்லவும் மனம் வரவில்லை. அவனது கேள்விகள் காதில் விழாதது போல வந்த அழுகையை அடக்கிக் கொண்டு, மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

வறுமைக்கோடு

வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள்
குறைந்திருக்கிறார்கள். அவர்களின்
வாழ்க்கைத்தரம் உயர்ந்ததினால் அல்ல.
வறுமைக்கோட்டை,
குறைவான வருமான வரம்புகளால்
வரைந்ததினால்.

ஒரு துளி மை

நேற்று முதல் காணவில்லையாம்.
என் தம்பியைக் கூட்டிக் கொண்டு கிளம்பினார்,
அவர் தம்பியை மை போட்டு கண்டுபிடிக்க.
நீண்ட வரிசையில் காத்திருந்த பின்
அந்த முதியவரை சந்தித்தனராம்.
வெற்றிலையில் மையைத் தடவி,
சிறிது நேரம் எதையோ முணுமுணுத்து விட்டு,
என் தம்பியிடம் கேட்டிருக்கிறார்,
‘அனுமார் தெரிகிறாரா?’.
ஒன்றுமறியாமல் அவன் விழித்துக் கொண்டிருக்க,
குரலை உயர்த்தி மீண்டும் கேட்டிருக்கிறார்.
வேறு வழியின்றி அவன் தலையசைத்திருக்கிறான்.
‘ஆஹா! இதோ தெரிகிறான் காணாமல் போனவன்.’
மீண்டும் என் தம்பியிடம் காட்டி கேட்டிருக்கிறார்.
இப்போது ‘தெரிகிறான்’ என்றிருக்கிறான்.
இல்லையென்றால் அம்முதியவர் விடுவதாக இல்லை.
‘வடக்கே திரிந்து கொண்டிருக்கிறான்.
வந்து விடுவான் ஒரு வாரத்திற்குள்.’
(மூட)நம்பிக்கையை வளர்த்தன அவர் வார்த்தைகள்.
தேடல் மீண்டும் தீவிரமானது.
ஒரு வழியாக நான்காவது நாள்
அவர்களது தேடல் முடிவுக்கு வந்தது.
தம்பி கிடைத்த மகிழ்ச்சியில் அவர் சொன்னார்,
‘சாமி சொன்ன மாதிரியே தம்பி கிடைச்சுட்டான்’
தேடிக் கிடைத்தவனை, சாமியால் கிடைத்தான் என்றது
வேடிக்கையாக இருந்தது எனக்கு.
பல லட்சம் பேரை சிந்திக்கவும் வைக்கிறது,
சிலரை இப்படி சிந்திக்க விடாமலும் செய்கிறது,
ஒரு துளி மை.