ஏனோமி

அலறி அழைத்த கைபேசி,
அதிர்ச்சியான அந்த செய்தியை என் காதில் போட்டது.
தற்கொலை…
இது அவனது மூன்றாவது தற்கொலை முயற்சியாம்.
அழைத்துக் கொண்டே இருந்ததால்,
இம்முறை இழுத்துச் சென்றிருக்கிறான் காலன், இவனை.
ஆனால் எதற்காக?
விளைச்சலின்றி மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி அல்லன்;
தேர்வுத் தோல்விகளால் வழி தவறிச் சென்ற மாணவன் அல்லன்;
கணிப்பொறியாளன் அவன்.
அழுத்தமில்லாத அலுவல்; நிறைவான ஊதியம்.
மரணம் தேடிச் செல்லுமளவுக்கு,
காரணங்கள் அவனுக்கு இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை.
பின் எதற்காக எடுத்தான் இந்த முடிவை?
என் கேள்விகளுக்கான பதில்களை, அவன் எழுதிய
கடைசிக் கடிதம் உரக்கப் படித்தது.

உயிர்த்தோழனுக்கு,
உயிராக இருந்தாய்; என்
உலகாக இருந்தாய் இதுவரை.
உனக்கென்று ஒருத்தி வந்தவுடன்,
எனை மறந்தாயே! பிரிந்தாயே!
உயிர் பிரிந்த பின் உடலிருந்து என்ன பயன்?
என்னுலகம் நீ இல்லையேல்,
எனக்கென்று யாருண்டு இவ்வுலகில்?
உயிர்த்தோழன் உனக்காக,
அவ்வுலகில் காத்திருக்கும்,
– மெய்த்தோழன்

கடிதம் முடிந்த பின்,
என் கேள்விகள் கேட்டுக் கொண்டன,
‘இதெல்லாம் ஒரு காரணமா?’.
‘ஏனோமி’ இவற்றிற்கெல்லாம் பதிலானது.
அவனது இருவர் உலகம் விரிசல் கண்டது
அவன் தோழன் பிரிவால்.
தோழன் இல்லையென்றாலும், தான்
ஒரு சமூகத்தின் அங்கமென்பதை மறந்தான்,
சமூக அநாதையாக உயிரைத் துறந்தான்.
அவனுக்குச் சொல்ல முடியவில்லை…
உணர்த்த வேண்டும் நாம் மற்ற சமூக அநாதைகளுக்கு,
‘பரந்த உலகில் வழியெங்கும்
மரங்களாய் நிறைந்து இருப்பார்கள் தோழர்கள்.
நீ மட்டும் அல்ல உலகம்.’ என்று.

Advertisements

அணிலாடும் முன்றில்

ஞாபகக் கிடங்கில் இருந்த
ஒவ்வோர் இறகையும் இணைத்து
ஒரு சிறகை உறவுகளால் தொடுத்து
பின்னோக்கி பறக்கிறார் நா.முத்துக்குமார்.
உறவுகளை, அவரது உறவுகளால்
அறிமுகம் செய்து, அவர்களது அருமையையும்
அருமையாக கூறி இருக்கிறார்.
அணிலாடும் முன்றில் – உறவுகளால் கோர்க்கப்பட்ட ஓர் அணி.