விக்ரம் வேதா

Vikram-Vedha-Tamil-Mp3-Songs தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் மரத்தில் ஏறி, தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பிப்பான். வழியில் வேதாளம் ஒரு கதையை எடுத்து விடும். கதையின் முடிவில் ஒரு கேள்வியை வேறு கேட்கும்; பதில் சொல்லாவிட்டால் தலை வெடித்து விடும் என்று குண்டை தூக்கி போடும்; பதில் சொல்லிவிட்டால் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்ளும். மறுபடியும் தன் முயற்சியில் … வேதாளம் சொல்லும் கதைகளும், அதன் முடிவில் கேட்கும் கேள்விகளும் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலிருந்தது, இக்கதைகளை சுவாரஸ்மானவைகளாக்கியிருந்தது. இக்கிளாஸிக் கதைகளின் பாணியிலேயே, தற்போதைய சூழலுக்கு தகுந்தாற் போல ஒரு கதையை படமாக்கினால் எப்படி இருக்கும்? ‘விக்ரம் (விக்ரமாதித்தன்) வேதா (வேதாளம்)’ என படத்துக்கு அக்கதை பாணியிலேயே தலைப்பை மட்டும் வைப்பதோடு நில்லாமல் அட்டகாசமான கதை, திரைக்கதையால் அதை நியாயப்படுத்தியும் இருக்கிறார்கள் இயக்குநர்கள். வேதாவாக விஜய் சேதுபதி மிரட்டியிருக்கிறார்; அவரைப் போட்டுத் தள்ள துடிக்கும் விக்ரமாக மாதவன். இவர்களுக்கு இடையேயான கதை, கதைக்குள் கதை, புதிர்க் கதைகள் தான் ‘விக்ரம் வேதா’. மிகச் சிறப்பு.

Advertisements

டன்கிர்க்

கிறிஸ்டோபர் நோலனின் ‘டன்கிர்க்’ திரைப்படத்தை இன்று பார்த்தேன். இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மானியப் படை, நேசப்படைகளை பிரான்ஸில் உள்ள டன்கிர்க் துறைமுகத்தில் சுற்றி வளைத்தன. அங்கிருந்து இங்கிலாந்து வீரர்கள் தப்பி பிழைத்து தாய்நாடு திரும்பினர். வெற்றி தோல்வியின்றி திரும்பும் இந்த நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்டதே ‘டன்கிர்க்’ திரைப்படம். இத்திரைப்படத்தை ஏனைய இரண்டாம் உலகப்போர் சம்பந்தப்பட்ட படங்களிலிருந்து வித்தியாசப்படுத்தியிருப்பது, இது வெற்றியை பறைசாற்றவோ, இனப்படுகொலைகளை எடுத்துக்காட்டவோ இல்லை என்பது தான். dunkirk-poster நேசப்படைகள் சுற்றி வளைக்கப்படுவதில் ஆரம்பிக்கும் திரைப்படம், கப்பல்களில் வீரர்கள் திரும்புவது, ஜெர்மானிய படைகளின் வான்வழித் தாக்குதலை சமாளிப்பது, மக்கள் கப்பல்களில் வந்து வீரர்களைக் கூட்டிச் செல்வது என பயணித்து வாகை சூடாமல் தப்பி பிழைத்துத் தாய்நாடு திரும்பும் நாம் மக்கள் முகத்தில் எப்படி விழிப்பது என கவலையுடன் நாடு திரும்பும் வீரர்களுக்கு மக்கள் தரும் உற்சாக வரவேற்புடன் நிறைவடைகிறது. நீர், நிலம், வானம் என மூன்று இடங்களில் ஆரம்பித்து அவற்றை ஒரு புள்ளியில் இணையுமாறு திரைக்கதை அமைத்து தொடுவானத்தைத் தொட்டுக் காட்டியிருக்கிறார். ஐமாக்ஸில் படத்தைப் பார்க்கும் போது, குண்டுகள் திரையரங்குக்கு உள்ளேயே வெடித்தது போலிருந்தது; மணல் முகத்தில் தெறித்து விழாதது தான் குறை. ‘டன்கிர்க்’ – வரலாறு மிகவும் முக்கியம்; நன்று.

சவன்துர்கா

சவன்துர்கா என்று முடிவு செய்வதற்கே சனிக்கிழமை சாயங்காலம் ஆகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணிக்கு எட்டு பேர் பெங்களூரிலிருந்து கிளம்பினோம். வழியில் காலை உணவை சாப்பிட்டு விட்டு சவன்துர்கா போய் சேர ஒன்பதரை ஆகிவிட்டது. வழக்கமான வழியல்லாது, வேறு ஒரு வழியில் கொஞ்ச தூரம் ஏறினோம்; பின்னர் அது சரிப்பட்டு வராது என்று மேலேறிச் செல்பவர்களைத் தொடர ஆரம்பித்தோம். ஞாயிற்றுக்கிழமையாதலால் வழியில் ஏகப்பட்ட பேர் ஏறிக் கொண்டும், இறங்கிக் கொண்டும் இருப்பதைக் காண முடிந்தது; பாதையைக் கண்டுபிடிப்பதற்குத் தோதாக வழியில் பாறைகளில் அம்புக்குறிகளும் போடப்பட்டிருந்தால் வழி தவறிச் செல்வதற்கு வாய்ப்புகள் குறைவு. சில சாகசப் பிரியர்கள் வழக்கமான வழியில் செல்லாமல் செங்குத்தான, வழுக்கலான பகுதிகளில் ஏறவும், இறங்கவும் செய்கிறார்கள், அதற்கு அனுமதி இல்லாவிட்டாலும் கூட. ஆங்காங்கே புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டே உச்சியை அடைய மதியம் பன்னிரெண்டரை ஆகிவிட்டது. உச்சியில் அடிக்கிற காற்றில் ஆளே பறந்து விடுவோம் போல. அர்க்காவதி ஆறும், ஊரும் மேலிருந்து பார்ப்பதற்கு அருமையாக உள்ளன. அங்கிருந்த நந்திக்கு வணக்கம் வைத்து விட்டு, கொண்டு சென்ற நொறுக்குத் தீனிகளை காலி செய்து விட்டு, சிறிது நேர ஓய்வுக்குப் பின் இறங்க ஆரம்பித்தோம். ஒரு மணி நேரத்தில் சரசரவென இறங்கி விட்டு பெங்களூருக்குக் கிளம்பினோம். மிதமான தட்ப வெப்பநிலை, அவ்வப்போது லேசான மழைத் தூறல் என இதமான வானிலை.  ஒரு தடவை மலையில் ஏறி இறங்கினால் ~8 கி.மீ தூரம் இருக்கும். வரும் வழியில் மஞ்சின்பேலே அணையைப் பார்க்கலாம் என்றால் பொதுமக்களுக்கு அனுமதியை தடை செய்து நான்கு வருடங்கள் ஆகிறதாம்; பக்கத்தில் எங்கு நின்று பார்க்கலாம் என்றும் சொல்லி அனுப்புகிறார்கள். சவன்துர்கா – ஒருநாள் பயணத்திற்கும், மலையேற்றத்திற்கும் நீங்கள் தயாரென்றால் போய் வரலாம்.

Savandurga

Savandurga

கற்றல்

அவன் குடிலை அடைந்த போது மதியமாகிவிட்டிருந்தது. குடிலின் வெளியே மரத்தடியில் தியானத்திலமர்ந்திருந்த குருஜியிடம், ‘குட் ஆஃப்டர் நூன் குருஜி! நான் தங்களது குருகுலத்தில் சேர விரும்புகிறேன். இங்கு நான் என்ன கற்றுக் கொள்வேன்?’ என்று அட்மிஷன் ஓகேயாகும் முன்னரே, ப்ரீபேர்டு செய்து வைத்திருந்த, ப்ரீபெய்டு கேள்வியைக் கேட்டான் அந்த  ஸ்மார்ட் சிறுவன். மதிய உணவுக்குப் பின் பதிலளிப்பதாகக் கூறி விட்டு, அவனையும் உணவு உண்ண அழைத்தார் குருஜி. நெடிய பயணத்தால் களைத்துப் போயிருந்தவனுக்கு அது சரி எனப்பட்டது. குடிலுக்குள் நுழைந்தவனுக்கு ஆச்சர்யம்!!! அனைத்து வகையான உணவு வகைகளும் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. பிடித்தவற்றையெல்லாம் தட்டில் எடுத்து வைத்து ஒரு பிடி பிடித்தான். மதிய உணவுக்குப் பின் அவனை சந்தித்த குருஜி  ‘எல்லா வகையான உணவுகளும் இருந்தாலும், உனக்குப் விருப்பமானவற்றையே எடுத்து உண்டு உன் பசியைப் போக்கினாய். அதே போல, எத்துணை விஷயங்களை இங்கு போதித்தாலும், உனக்கு எதில் நாட்டமுள்ளதோ, அதுவே உன்னை வந்தடையும். அதையே நீ கற்பாய்!‘ என்று பதிலுரைத்தார்.  இப்போது அந்த சிறுவன், ஸ்மார்ட் சீடனாகியிருந்தான்.

#டிரெண்ட்ஸ்

ஏகப்பட்ட மிஸ்டு கால்கள் மற்றும் வாட்ஸ் ஆப் செய்திகளில் விழிக்க வேண்டியிருந்தது; நாளிதழ்களின் ட்வீட் கார்னர்களில், எனது ட்விட்டர் கணக்கில் நேற்று சக நடிக, நடிகையரைப் பற்றி வெளியிடப்பட்டிருந்த ட்வீட்டுகள் உட்கார்ந்திருந்தன; தொலைக்காட்சியை ஆன் செய்தால் அதே ட்வீட்டுகள் பிரேக்கிங் நியூஸில் வலமிருந்து இடம் ஓடிக் கொண்டிருக்கின்றன;ட்விட்டரில் #நான்_லீக்ஸ் டிரெண்டிங். ட்வீட்டுகள் ஒவ்வொன்றும் அன்லிமிட்டெட் சுவீட்ஸை ஊடகங்களுக்கு ஆன்லைன் டெலிவரி செய்தது போலிருந்தன. அவனுக்கு தலை சுற்றியது … நேற்று இரவு பார்ட்டியில் கலந்து கொண்டது நினைவிலிருக்கிறது; இடையே சக நடிக, நடிகையருடன் வாக்குவாதம் முற்றியது அரை குறையாய் நினைவில் பதிந்தும், அழிந்துமிருக்கிறது; அவ்வளவு தான்; அதற்கு பின் என்ன நடந்தது என்று சுத்தமாக நினைவில் இல்லை. சில நிமிடங்கள் யோசனைக்குப் பின், அவனது ட்விட்டர் கணக்கில் நுழைந்து, நேற்று பதிவேற்றப்பட்ட ட்வீட்டுகளை நீக்கி விட்டு, ‘நேற்று எனது ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு விட்டது‘ என்று ஒரு ட்வீட்டை தட்டிவிட்டு விட்டு வெளியேறினான், அந்த நடிகன்.

பி.கு: இக்கதையில் வரும் சம்பவங்கள் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.