HDOR 2023 – 3

HDOR 2023-ன் மீதிக் கிணறு தாண்டவும் சிரமமாகத் தான் இருந்தது. முதல் 50 நாட்கள் ஓடிய தூரத்தை(215.6கிமீ) துரத்தவே இரண்டாவது பாதியில் கடினமாக இருந்தது. பெரும்பாலான நாட்கள் 2கிமீ-லேயே கழிந்தது; வார இறுதி நாட்களில் 5 அல்லது 10கிமீ. ஜூலை 28-ம் தேதி சவாலை வெற்றிகரமாக முடித்ததற்கான பதக்கம் வந்து சேர்ந்தது. சிங்க முகம் பதிக்கப்பட்ட பதக்கம் தங்கமென மின்னியது; மகிழ்ச்சி. சரியாக 98-வது நாளில் 400கிமீ-ஐக் கடந்தேன். கடைசி 2 நாட்களில் 30கிமீ ஓடினால் முதல் பாதியில் கடந்த தூரத்தை சமன் செய்யலாம். ஆனால் இரண்டு நாட்களிலும் நாளொன்றுக்கு 10கிமீ மட்டும் ஓடுவதாகத் திட்டம். நேற்று ஒரே அலைச்சல்; வழக்கம் போல 2கிமீ முடிக்கவே போதும் போதும் என்றாகி விட்டது. இன்று கடைசி நாள். லால்பாக்கில் ஓட நினைத்து பின் ஓடுபொறியிலேயே ஓடியாயிற்று. கடந்த வருடங்களில் கடந்த தூரத்துக்கு கொஞ்சமும் அருகில் இல்லை. எனவே ஏதாவது ஒரு வகையில் இவ்வருட சவாலை சிறப்பிக்க அதிகபட்ச தூரத்தை ஓடலாம் என்று நினைத்தேன்; இதுவரையில் அரை மாரத்தான் தூரமே நான் ஓடியதில் அதிகபட்ச தூரம். இன்று அதைத் தாண்டி, 22.22கிமீ ஓடி HDOR மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் எனது அதிகபட்ச ஓட்ட தூரத்தை பதிவு செய்தாயிற்று. நூறு நாட்களில் 428கிமீ. கடந்த வருடங்களை விட ஒட்டு மொத்தமாக அதிக தூரம் ஓட முடியாவிட்டாலும், நூறு நாட்கள் 2கிமீ ஓடுவதே இவ்வருடம் கடும் சவாலாக இருந்தது. அவ்வகையில் இதுவே நான் கலந்து கொண்ட நூறு நாட்கள் ஓட்ட சவாலில் சிறந்தது. நிறைவு.

HDOR 2023

பெங்களூரு 10K

பெங்களூரு 10கி.மீ சவாலை வெற்றிகரமாக முடித்தாயிற்று. பெங்களூரு NICE சாலையில் நடைபெறும் இந்த 10கிமீ ஓட்டம் தடத்தில் ஏற்ற இறக்கங்களுடன் கூடிய கடினமான 10கிமீ‌ ஓட்டங்களில் ஒன்றாகும். 10000 நபர்கள் கலந்து கொண்டு ஓட்டம் ஆரம்பித்த போது, ஊதாப் பூக்களை சாலையில் கொட்டி வைத்தது போலிருந்தது; பெரும்பாலானவர்கள் போட்டி நடத்துபவர்கள் அளித்திருந்த ஊதா நிற டி சட்டையை அணிந்திருந்தனர். சென்ற வருடம் 61 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதால் இன்று 60 நிமிடங்களுக்குள் முடிக்க நினைத்தேன்; ஆனால் 64 நிமிடங்கள் ஆகி விட்டது. முதல் 5 கி.மீ-ஐ சரியாக 30 நிமிடங்களில் கடந்து விட்டேன். ஆறாவது கி.மீ -லிருந்து வேகம் குறைந்து விட்டது. ஏழாவது கி.மீ அதிகபட்ச நேரத்தை உறிஞ்சி கொண்டது. கொஞ்சம் தொண்டையை நனைத்துக் கொண்டு தொடர்ந்தேன். எட்டாவது, ஏழாவதுக்கு பரவாயில்லை. 6,7,8-ல் உதிரியாக அதிகரித்த ஒவ்வொரு நிமிடங்களும் ஒட்டு மொத்தமாக நான் எடுத்துக் கொண்ட நேரத்தைக் கூட்டி விட்டன. விட்டதைப் பிடிக்க 9, 10-ல் வேகத்தைக் கூட்டி ஒரு வழியாக வெற்றிகரமாக 10கி.மீ சவாலை முடித்தேன். 10கிமீ முடித்ததற்கான பதக்கத்தை பெற்றுக் கொண்டு ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பேனர்கள் முன் சில புகைப்படங்கள், நண்பர் சந்திப்பு, சிற்றுண்டி, மீண்டும் புகைப்படங்கள். ஓடும் போது கூட கடுக்காத கால்கள் புகைப்படம் எடுக்க ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்ற போது கடுத்து கடுப்பாகி விட்டன. வீடு திரும்ப பத்தரையாகி விட்டது. எனது ஆகச் சிறந்த ஓட்டமாகா விடினும், பங்கேற்று எனது இரண்டாவது சிறந்த ஓட்டத்தை ஓடியதில் மகிழ்ச்சி!

HDOR 2023 – 2

மெதுவாக நடந்து, ஓடி வேகமெடுக்க எத்தனிக்கும் போது தான் எத்தனை பணிகள்! 40 நாட்களில் 167 கி.மீ; ஆனால் கடந்த 10 நாட்களில் 48 கி.மீ. இளையவளுக்கு பள்ளி திறந்தாயிற்று; அழுத்தும் பணிச் சுமை வேறு; அதிலும் அணியில் சில சிலிக்கான் பள்ளத்தாக்குவாசிகள் இணைந்திருப்பதால் அவர்களுடன் அலுவலக கலந்துரையாடலை முடித்து விட்டு நித்திரைக்கு செல்வதற்குள் நேரம் அடுத்த நாளை நெருங்கி விடுகிறது. இதனால் அன்றாட உறக்க பழக்க வழக்கங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தன் பங்குக்கு மழையும், மழையைப் பிரியா மின்வெட்டும் தங்கள் இருப்பைப் பதிவு செய்து வெறுப்பேற்றுகின்றன. 41-50 நாட்களில் சில நாட்கள் குறைந்தபட்ச 2கி.மீ ஓடுவதற்குள்ளே போதும் போதும் என்றாகி விட்டது. மிதிவண்டியை சுத்தமாகத் தொடவேயில்லை. பாதிக் கிணறு தாண்டியாச்சு; மீதி? இப்படியே தான் அடுத்த சில வாரங்களும் ஓடும்; நான் எப்படி ஓடுவேனோ? ஓட்டம் தொடரும்…

HDOR 50th Day

HDOR 2023 – 1

HDOR – நூறு நாட்கள் ஓட்டம். மூன்றாவது வருடமாக இதில் கலந்து கொள்கிறேன். ஏப்ரல் 29 முதல் இன்று வரை நாற்பது நாட்கள் ஓடியிருக்கின்றன; எல்லா நாட்களையும் நடந்தோ ஓடியோ கடந்திருக்கின்றேன். முதல் நாள் காலை 50 கிமீ மிதிவண்டி பயணம்; மாலை பூங்காவில் 2கிமீ நடை என ஆரம்பித்தது நூறு நாட்கள் ஓட்டம். மே மாதம் மதுரை வந்த பின் பெரும்பாலும் 3 கிமீ நடை; அவ்வப்போது மிதிவண்டி பயணங்களுடன். மே இறுதியில் பெங்களூரு திரும்பிய பின்னர், ஓடுபொறி(Treadmill) மீண்டும் தூசி தட்டப்பட்டது. முதல் முப்பது நாட்களில் அதிகபட்சமாக ஐந்து கிமீ; ஒட்டு மொத்தமாக 100 கிமீ தான் ஓடியிருந்தேன். ஓடுபொறிக்கு கால்கள் பழகியதும் கடந்த பத்து நாட்களில் மட்டும் 67 கிமீ. எனது கடந்த வருட சாதனையை சமன் செய்யவே எஞ்சியுள்ள அறுபது நாட்களில் இன்னும் 429 கிமீ ஓட வேண்டியிருக்கின்றது; பார்த்துக்கலாம். நூறு நாட்களில் நாற்பது நாட்கள் நாளொன்றுக்கு 2 கிமீ கடந்தாலே நூறு நாட்கள் ஓட்ட சவாலை வெற்றிகரமாக முடித்ததாக அர்த்தம்; அதற்கான பதக்கமும் அனுப்பி வைக்கப்படும். இதனால் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால் 2023 சவாலை முடித்தாயிற்று; இறுதி எண்ணிக்கைக்காகக் காத்திருப்போம். ஓட்டம் தொடரும்…

HDOR 2023 – 1
HDOR 2023 – 2