புதுமைப்பித்தனும் காஃப்காவும்

நேற்று மாலை உயிர்மை பதிப்பகம் சார்பில் எஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு நூல்கள் ‘நீரிலும் நடக்கலாம்’ மற்றும் ‘காஃப்கா எழுதாத கடிதம்’ வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. புத்தக வெளியீட்டை ஒட்டி மனுஷ்யபுத்திரன், எஸ்.ஏ.பெருமாள், சுரேஷ்குமார் இந்திரஜித், மதுக்கூர் ராமலிங்கம், ம.திருமலை, எஸ்.வி.வேணுகோபால் ஆகியோர் புத்தகங்களைப் பற்றி சிறப்புரை ஆற்றினர். வெளியீட்டைத் தொடர்ந்து ‘புதுமைப்பித்தனும் காஃப்காவும்’ என்ற தலைப்பில் எஸ்.ராமகிருஷ்ணனின் இலக்கிய சிறப்புரை. எது புதுமைப்பித்தனையும், காஃப்காவையும் இணைக்கும் கண்ணி? இருவருடைய வாழ்வையும் ஒப்பிட்டு, அவை பெரும்பாலும் ஒத்திருப்பதை அடிக்கோடிட்டு காட்டினார். இந்தியாவில் பெரும்பான்மையினர் காஃப்காக்களே என்றார் (காஃப்காவுக்கு அவரது அப்பாவை சுத்தமாக பிடிக்காதாம் x-( ). புதுமைப்பித்தன் காஃப்காவின் ‘உருமாற்றத்திலிருந்து‘ ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்‘ கதையைப் புனைந்திருக்கலாம் என்று, இரு கதைகளுக்குமிடையேயான ஒற்றுமைகளைப் பட்டியலிட்டார். புதுமைப்பித்தனின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை அவர் கூறிய போது, இலக்கியத்தின் மீது எத்துணைப் பித்துடன் இருந்திருக்கிறார் என்பது புரிகிறது. நான் இருவரையும் வாசித்து விட்டு, இதே மாதிரி யோசித்துப் பார்க்க முயல்கிறேன். அருமையான சிறப்புரை வழங்கிய எஸ்.ராவுக்கும், வெளியீட்டை ஏற்பாடு செய்த உயிர்மை பதிப்பகத்தாருக்கும் நன்றி!

யுரேகா

‘தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல்
காகம் ஒன்று அலைந்து கொண்டிருந்தது.
உண்பதற்கு உணவை வைத்தவர்கள்,
ஏனோ அருந்துவதற்கு நீரை வைக்கவில்லை.
நெடுநேரத்திற்கு பின்,
குறைகுடம் ஒன்று கண்ணில் தட்டுப்பட்டது.
அலகிற்கு எட்டாத அந்நீரைக் குடிக்க,
அருகில் கிடந்த சிறு கற்களை ஒவ்வொன்றாக
அந்த குடத்திற்குள் போட்டது. கற்களால்
மேல் எழும்பி விளிம்பு வரை வந்த நீரை
அருந்தி விட்டு, தாகம் தணிந்த மகிழ்ச்சியில்
‘கா கா’ என கரைந்து கொண்டே பறந்தது
அந்த புத்திசாலி காகம்.’

கதையைப் படித்த மாத்திரத்தில்
‘யுரேகா யுரேகா’ என்று கூவியபடி
வீதியில் இறங்கி ஓடினார் ஆர்க்கிமிடிஸ்.
****
02-08-2014

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு

இந்தியப்-பிரிவினை

இந்தியப் பிரிவினை

பொதுவாக முடிவு தான் கல்லறையில் இருக்கும். ஆனால் இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயமே கல்லறையில் ஆரம்பிக்கிறது. ஸ்டேஷன் வந்து நிற்கும் இரயிலில் பிணக் குவியல்களின் ஊடே தங்கள் உறவுகளைத் தேடும் மக்களைச் சித்தரிக்கும் காட்சி, பிரிவினையின் எதிர்வினைக்குச் சான்று. அதிகாரத்தை இந்தியாவுக்கு மாற்ற புதிய வைஸ்ராயாக மவுண்ட் பேட்டன் நியமிக்கப்படுவது, இந்திய தேசிய காங்கிரஸ் – முஸ்லீம் லீக்கின் தோற்றம், நேரு-படேல்-காந்தி-ஜின்னாவுடன் மவுண்ட் பேட்டன் பிரிவினை பற்றி நடத்திய பேச்சு வார்த்தைகள் (இந்த அத்தியாத்தை வாசித்து முடித்திருந்த வேளையில், ஆகஸ்டு 15 அன்று மாலை ‘காந்தி’ திரைப்படத்திலிருந்து சரியாக இதே காட்சி ஒரு சேனலில் ஓடிக் கொண்டிருந்தது), ஜூன் 3, 1947 வெளியான சுதந்திரம் பற்றிய அறிவிப்பு, பாகப் பிரிவினை, இந்தியா-பாகிஸ்தானைப் பிரிக்க ராட்கிளிஃப் வரைந்த கோடு, சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தல் (ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் சேர்க்கும் போது நடந்த கலவரங்களை மையமாக்கிப் புனையப்பட்டது, அசோகமித்திரனின் ’18வது அட்சக் கோடு’), சுதந்திர தினம், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க ஜின்னா தீட்டிய திட்டம் என பிரிவினையை ஒட்டி நடந்த நிகழ்வுகளை எல்லாம் சுருக்கமாக வெட்டி ஒன்றாக ஒட்டியிருக்கிறார். இதை வாசிக்கும் போது உங்களுக்கு ஏதேனும் ‘ஏன்? எப்படி?’ என்று கேள்விகள் தோன்றியிருந்தால் அது கண்டிப்பாக ‘கேள்விகள்’ என்ற அத்தியாயத்தில் இருக்கும். பிரிவினையில் ஹிந்துத்துவா அமைப்புகளின் பங்கும் விளக்கப்பட்டிருக்கிறது. ‘விலை’ சிறிய அத்தியாயமாக இருந்தாலும் பிரிவினைக்காகக் கொடுத்த பெரிய விலைகளை சாதாரணமாய்ச் சொல்லி செல்கிறது.

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடுராட்கிளிஃப் வரைந்த கோட்டைச் சுற்றி ஓர் உறைய வைக்கும் கோட்டோவியம்.

புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்.

புத்தகத்தை வாசித்த கையோடு பிரிவினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தீபா மேத்தாவின் ‘1947: Earth‘ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். முதல் அத்தியாயத்தில் வரும் அந்த இரயில் காட்சி திரைப்படத்திலும் வருகிறது; ஆனால் இங்கே இரயில் குருதாஸ்பூரிலிருந்து லாகூருக்கு வருகிறது முஸ்லீம்களின் பிணங்களோடு. பிரிவினையின் விலை, வலியைக் காண இந்தத் திரைப்படத்தையும் ஒருமுறை பாருங்கள். இந்தத் திரைப்படம் 2000-ல் ‘சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்துக்காக’ இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது.