ராசிபலன்

விழித்ததும்,
நாட்காட்டியில் பழைய தேதியைக்
கிழித்து விட்டு
நாள்தோறும் அன்றைய
ராசிபலனை வாசிப்பது வழக்கம்.
மேஷம் – விருப்பம், ரிஷபம் – மறதி, மிதுனம் – சினம், கடகம் – போட்டி, சிம்மம் – லாபம்
சாலையில் கிடந்த ஒரு ரூபாய் நாணயம்,
காலையில் கண்ட பலனை, நனவாக்கியது.
இப்படியாக அவ்வப்போது நடந்த நிகழ்வுகள்
அவன் நம்பிக்கையை பலமாக்கின.
நாட்கள் நகர்ந்தன…
அன்று – அவன் பிறந்தநாள்.
அர்ச்சகரிடம் அவன் அம்மா சொன்னாள்,
‘சதயம் நட்சத்திரம், கும்பம் ராசி.’
அதிர்ச்சியுடன் ‘அப்போ சிம்மம்’ என்று கர்ஜித்தான் அவன்.
‘அது உன் லக்னம்டா, கும்பம் உன் ராசி’ என்று
அவனுக்கு எடுத்துக் கூறினாள் அன்னை.
வீட்டுக்குள் நுழைந்தவுடன்,
அன்றைய ராசிபலனைப் பார்த்தான்.
‘… சிம்மம் – அமைதி … கும்பம் – குழப்பம் …’
இப்போது அவனுக்கு தெளிவு பிறந்தது.
அடுத்தநாள் எழுந்தவுடன் பார்த்தான் கும்ப ராசிக்கான பலனை.
ராசிபலனுக்கு மேல் பறந்து கொண்டிருந்த அன்றைய பொன்மொழி,
‘மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்’ .

Advertisements