உப்பு வேலி

உப்புவேலி

நீண்ட நாட்களாக வாசிக்க விரும்பிய புத்தகங்களின் பட்டியிலில் இருந்த புத்தகம் ‘உப்பு வேலி‘. சர்க்கரையைப் பற்றி பேசுமளவுக்கு உப்பைப் பற்றி பேசுவதில்லை. தற்போது எளிதில் மலிவாகக் கிடைக்கும்(இதர மளிகைப் பொருட்களின் விலையோடு ஒப்பிடுகையில்) உப்பு, சில வருடங்களுக்கு முன்பு விலையுயர்ந்த பொருளாக இருந்திருக்கின்றது என்பதை நம்ப முடிகிறதா? அதாவது வருட சம்பளத்தில் ஆறில் ஒரு பங்கு ஒரு குடும்பத்தின் உப்புக்கான செலவு.ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கிய புத்தகத்திலுள்ள சிறிய அடிக்குறிப்பில் ஆரம்பிக்கிறது ஆசிரியரின் இந்தியப் பெருவேலிக்கான தேடல். வேலியின் மிச்சத்தைக் காணும் மிதமிஞ்சிய வெறியால் பயணங்களிலும், வேலி தொடர்பான செய்திகள், வரைபடங்கள் போன்றவற்றை சேகரிப்பதிலுமே பெரும்பாலான நேரத்தை செலவிட்டிருக்கின்றார். கம்பெனி உப்புத் தயாரிப்பினை தன் கையகப்படுத்தி, வேறெந்த வழியிலும் அதை மக்கள் பெறாமலிருக்க சுங்கப் புதர்வேலியை உருவாக்கியது; உயிர்வேலி எப்படி உருவாக்கப்பட்டது? உப்பின் அவசியம், காந்தியின் உப்புச்சத்தியாகிரகம் என உப்பைப் புத்தகம் முழுவதும் தூவியிருக்கிறார். பர்மத் லயின் என்றழைக்கப்பட்ட வேலியின் எச்சத்தைக் கடைசியில் அவர் காண்பதுடன் புத்தகம் நிறைவடைகிறது. ஒரு வரலாறானது புத்தகமாகவோ அல்லது திரைப்படமாகவோ படைப்புறும்போது, அது மானுடத்தின் மனசாட்சியை எக்காலத்துக்கும் உலுக்கும் ஆவணமாக நிலைபெற்றுவிடுகிறது. இந்திய வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் வாசிக்க வேண்டிய படைப்பு. மிக நன்று!