விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் ‘நீங்கள் இந்தியரா?‘ என ஓர் அலுவலர் கனிமொழியை வினவியதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பெங்களூரு விமான நிலையத்திலும் இதே போல இந்தியிலேயே பேசும் அதிகாரிகளைப் பார்த்திருக்கிறேன். முதலில் அவர்கள் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ள முனைந்தேன். எனக்கு தமிழ், ஆங்கிலம், ஓரளவிற்கு கன்னடமும் தெரியும்; இவற்றையெல்லாம் விட்டு விட்டு அதுவும் ஆங்கிலம் தெரிந்த நபர்கள் அம்மாநில மொழியையும் தவிர்த்து விட்டு இந்தியில் பேசும் போது ஏனோ அதை என் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. போகப் போக ‘இந்தி தெரியாது. கன்னடம் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள்‘ என்று சொல்ல ஆரம்பித்தேன். அதற்கு எனக்கு கிடைக்கும் பதில் ‘மதராஸியா?‘. பொது இடங்களிலும் சிலர் இந்தியில் வந்து பேச ஆரம்பிப்பார்கள்; இந்தி தெரியாது என்று சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அதிலும் சிலர் தேசிய மொழி இந்தி தெரியாமல் எப்படி? என்று கேட்பார்கள். அவர்களுக்கு நாம் இந்தி தேசிய மொழி அல்ல என்று பாடம் எடுத்து விட்டு நகர வேண்டி இருக்கும். இந்த மாதிரி நபர்களிடம் இந்தி தெரியாது என்று சொல்லும் போது கர்வமும் கூட வந்து ஒட்டிக் கொண்டு ஒருவித மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.