Parasite (ஒட்டுண்ணி) – சென்ற வருடம் வெளியாகிய இக்கொரியத் திரைப்படம், வாங்காத விருதுகளே இல்லை என்று சொல்லுமளக்கு விருதுகளைக் குவித்திருக்கின்றது (சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதும் அதில் அடக்கம்). விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது?
வறுமையில் வாடும் கிம் குடும்பத்தினருக்கு, கிம்மின் மகன் கி வூ-வின் நண்பன் வாயிலாக ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணுக்கு வீட்டில் சென்று சொல்லிக் கொடுக்கும் வேலைக்கான வாய்ப்பு கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தி, அதே வீட்டிலேயே தன் குடும்பத்தினர் அனைவருக்கும் வெவ்வேறு வேலை கிடைக்கச் செய்கிறான், கி வூ (தமிழ்த் திரைப்படம் ‘மின்சார கண்ணா’ பாணியில்). கிம் குடும்பத்தினருக்கு நாட்கள் நன்றாக நகர்ந்து கொண்டிருந்த வேளையில், ஒருநாள் பார்க் குடும்பம் தன் மகன் டா சாங்கின் பிறந்தநாளைக் கொண்டாட வெளியூர் செல்கிறார்கள். அவர்கள் ஊரில் இல்லாததால், இரவில் கிம் தன் குடும்பத்தினருடன் பார்க் வீட்டில் பார்ட்டியில் ஈடுபடுகிறார். பெருமழை காரணமாக பயணத்தைத் தொடர முடியாமல், பார்க் குடும்பத்தினர் விரைவிலேயே வீடு திரும்புகின்றனர். கிம் குடும்பத்தினர் பார்க் குடும்பத்தினரின் கண்களில் படாமல் தப்பினார்களா? தொடர்ந்து நிகழும் சம்பவங்களை, திரைப்படத்தில் கண்டுகளியுங்கள்.
திரைப்படத்தின் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு எல்லாம் ஒருபுறமிருக்க, உலக நாடுகளில் இத்திரைப்படம் பலத்த வரவேற்பைப் பெற்றதற்கான காரணம், அது ஏழை-பணக்கார வாழ்க்கை முறைகளை சித்தரித்து, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கண் முன் நிறுத்தியதாகக் கூட இருக்கலாம்; இதனால் உலகெங்கும் வசிக்கும் மக்கள், தங்களை படத்தின் கதாபாத்திரங்களோடு பொருத்திப் பார்த்து, படத்துடன் ஒன்றிப் போக முடிந்திருக்கலாம்.
முதல் பாதியில், கிம் குடும்பத்தினர் பார்க்கின் வீட்டிற்குள் நுழையும் போது, அவர்கள் பார்க் குடும்பத்தினரை சார்ந்திருப்பதாலும், பெறும் ஊதியத்தாலும் அவர்கள் ஒட்டுண்ணி போலத் தோன்றுகிறார்கள். ஆனால் படம் நிறைவுறும் போதோ, பார்க் குடும்பத்தினர் எல்லா விதமான அன்றாட வேலைகளுக்கும் கிம் குடும்பத்தினரையேச் சார்ந்திருப்பதால், அவர்கள் கிம் குடும்பத்தினரின் உழைப்பை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகளாகத் தெரிகிறார்கள்.