ஓகே கூகுள் – 3 ஜிமெயில்

விளக்கப்படாத கனவு திறக்கப்படாத கடிதம் போன்றது.

‘நலம். நலமறிய அவா.’ என்று துவங்கும் கடிதங்களை வாசித்து எவ்வளவு நாட்களாகின்றன. ‘ஊருக்கு போய்ட்டு லெட்டர் போடு’ என்று சொல்லி தான் வெளியூர் செல்லும் உறவுகளையும், நண்பர்களையும் வழியனுப்பியே வைப்பார்கள். அப்போதெல்லாம் எந்த ஒரு செய்தியானாலும் தொலை தூரங்களைக் கடந்து பரிமாறிக் கொள்ள கடிதங்களே வழிவகை செய்தன. அந்தந்த ஏரியா போஸ்ட்மேன்களுக்கு அந்தந்த பகுதியிலுள்ள அத்தனை முகவரிகளும் அத்துப்படியாக இருக்கும். சும்மா தபால்காரரைப் பார்க்கும் போதெல்லாம், ‘எனக்கு எதுவும் கடுதாசி வந்துருக்கா?’ என்று திரும்ப திரும்ப கேட்டு கடுப்பேத்துபவர்களும் உண்டு. ‘காதலித்துப் பார் தபால்காரன் கடவுளாவான்‘ என்று வைரமுத்து எழுதிய வரிகளிலிருந்து கூட அறிந்து கொள்ளலாம், கடிதப் போக்குவரத்தே பிரதானமாக இருந்த அந்த காலக்கட்டத்தை. தபால்தலைகள் சேகரித்து வைப்பதென்பது ஒரு பிரபலமான பொழுதுபோக்கு. அதன் பின்னர் தனியார் அஞ்சல் சேவைகள், தொலைபேசி, கைபேசி, மின்னஞ்சல்களின் வருகை கடிதப் போக்குவரத்தைக் கணிசமான அளவுக் குறைத்து விட்டன. அலுவலகப் பணிக்காகட்டும், சொந்த விஷயங்களுக்காகட்டும் கண் சிமிட்டும் நேரத்தில் பெறுநருக்கு செய்திகளைக் கடத்தும் மின்னஞ்சல் அன்றாட அலுவல்களில் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது.

அறிமுகம்

gmail_logoஅழைப்பிதழ் இருந்தால் மட்டும் பயனர் கணக்குத் துவங்க முடிந்த பீட்டா வெளியீடாக ஜிமெயில் வெளியான போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். PP லேபில் சீனியர்கள் ‘ஜிமெயில் அழைப்பிதழ்கள் இருக்கின்றன யாருக்காவது வேண்டுமா?’ என்று கேட்ட போது, இரண்டு கைகளையும் தூக்கிக் கொண்டு ஒன்னுக்கு ரெண்டாக ஜிமெயிலில் பயனர் கணக்குகள் துவங்கியது நினைவிலிருக்கிறது. 1GB சேமிப்பு வசதி(தற்போது 15GB) , உரையாடற் பார்வையில் மின்னஞ்சல்களை ஒழுங்குபடுத்துவது என வெளியான போதே பலரது கவனத்தை ஈர்த்தது ஜிமெயில். முதன்மையானவை, சமூகம், விளம்பரங்கள், அறிவிப்புகள் என தரம் பிரித்து தனித்தனியாக மின்னஞ்சல்களைப் போட்டு வைப்பது; இணைப்புகளை ஜிமெயிலுக்குள்ளாகவே பார்க்கும் வண்ணம் அமைத்திருப்பது; கண்கவர் தீம்கள்; இன்பாக்ஸிலிருந்தே மின்னஞ்சல்களைத் திறக்காமலே, பார்சல்களை டிராக் செய்ய, தயாரிப்புகளுக்கு மதிப்புரை வழங்க, நிகழ்வுகளுக்குப் பதிலளிக்க முடிவது;  பயன்படுத்துவதற்கு எளிதான, இன்பாக்ஸைப் பார்த்துக் கொண்டே புதிய செய்திகளை எழுதும் வசதி என எக்கச்சக்க அம்சங்களைத் தன்னகத்தே கொண்ட ஜிமெயில், ஒரு பில்லியன் பதிவிறக்கங்களை முதன் முதலாக பதிவு செய்த ஆன்ட்ராய்டு செயலி என்பதில் வியப்பேதுமில்லை. ‘@yourcompany.com’ எனும் தனிப்பயன் மின்னஞ்சல் முகவரிகளுடன் வணிகத்திற்காகவும் ஜிமெயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2014-ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி, 60% நடுத்தர கம்பெனிகளும், 92% ஸ்டார்ட்அப் கம்பெனிகளும் ஜிமெயிலையே பயன்படுத்தி வருகின்றனர். அப்பவே அப்படினா, இப்ப?

தள வரலாறு

நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் புதுமையான கண்டுபிடிப்புகள் கூகுளில் வரவேற்கப்படுகின்றன. அதற்காக ஊழியர்கள் தங்கள் வேலை நேரத் தில் 20% நேரத்தை செலவழித்துக் கொள்ளலாம். அப்படி உருவான சிறந்த படைப்புகளில் ஒன்று தான், ஜிமெயில். கூகுள் குரூப்ஸ் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த பால் புஹை முதல் கட்ட பணிகளை முடிக்கும் தருவாயில்,  ‘இதே மாதிரி மின்னஞ்சலுக்கு ஒரு சுவாரஸ்யமான திட்டப்பணி உள்ளது. செய்கிறீர்களா?’ என்று கேட்க,  புஹை அதற்காகவே காத்திருந்தது போல, முன்னதாகவே தனக்குள் வைத்திருந்த மின்னஞ்சல் மென்பொருள் யோசனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்தார். கூகுள் குரூப்ஸ் நிரலிலிருந்து ஆரம்பித்தவருக்கு, முதல் பதிப்பைத் தயார் செய்ய ஒரே ஒரு நாள் தான் ஆனதாம்.  சேமிப்புக்கும், தேடலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஜிமெயில் முதலில் கூகுள் பணியாளர்களின் பயன்பாட்டுக்கு மட்டும் வெளியிடப்பட்டது. கூகுள் நிறுவனத்துக்குள்ளேயே வலம் வந்து கொண்டிருந்த ஜிமெயில் ஏப்ரல் 1, 2004 அன்று வெளியே பீட்டா பதிப்பாக காலை வைத்தது. அதுவரை சின்ன சின்ன ரோல்களில் தலை காட்டிக் கொண்டிருந்த ஜாவாஸ்கிரிப்ட்டை சூப்பர் ஹீரோ அஜாக்ஸாக மாற்றியது ஜிமெயில் தான். கூகுளிலிருந்து 2006-ம் ஆண்டு வெளியேறிய பால் புஹை, ஃபிரண்ட்ஃஈட் நிறுவனத்தைத் துவங்கினார்; 2009-லேயே அதை ஃபேஸ்புக் ஒரே அமுக்காக அமுக்கிக் கொண்டது என்பதெல்லாம் கிளைக் கதைகள். பிப்ரவரி 7, 2007 தனது பீட்டா சோதனைக் காலத்தை முடித்துக் கொண்டு ஜிமெயில் வெளியானது. பத்து வருடங்களுக்கும் மேலாக மின்னஞ்சலில் தன் முத்திரையை பதித்து, மின்னஞ்சல் தலையாக நம் கண் முன்னேயே உருமாறியிருக்கிறது ஜிமெயில்.

தெரிந்து கொள்ளுங்கள்

  • பயனர் பெயர்களில் விருப்பத்திற்கேற்ப புள்ளிகளை சேர்த்தோ, நீக்கியோ எழுதலாம். ஆக உங்களது பயனர் பெயர் ‘okaygoogle@gmail.com’ என்று வைத்துக் கொண்டால்,  ‘okay.google@gmail.com’,  ‘ok.ay.google@gmail.com’ என எந்த முகவரிக்கு அனுப்பினாலும் மின்னஞ்சல் உங்களுக்கு வந்து சேரும்.
  • “@”-க்கு முன்னே, ‘+’-க்கு பின்னே ஏதாவது வார்த்தைகளைப் போட்டு உங்கள் பயனர் பெயருக்குத் தேவைகளுக்கேற்றவாறு செல்லப் பெயர்களை ‘+’ முகவரிகளாக வைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு ‘okaygoogle+blog@gmail.com’, ‘okaygoogle+news@gmail.com’ என எந்த முகவரிக்கு அனுப்பினாலும் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்; முகவரியை வைத்து தரம் பிரித்து, வடிகட்டி வாசித்துக் கொள்ளலாம். இதன் மூலம் எந்த முகவரிக்கு ஸ்பேம் மின்னஞ்சல் வந்துள்ளதோ அதை வைத்து எந்த இணையதளம் உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கசிய விட்டுள்ளது என்றும் அறிந்து கொள்ளலாம்.
  • அனுப்பும் பட்டனை தட்டி விட்டால் மின்னல் வேகத்தில், தடுத்தாலும் நில்லாமல் மின்னஞ்சல் பெறுநரைச் சென்றடையும். ஜிமெயிலில் உள்ள ஒரு வசதியின் படி, மின்னஞ்சலை அனுப்பிய பின்னரும், 30 நொடிகள் வரை அதைத் தடுத்து நிறுத்த நமக்கு அவகாசம் கொடுக்கப்படும்.
  • ஒரு பதிலை சேமித்து வைத்து, ஒரே மாதிரியான மின்னஞ்சல்களுக்கு அதே பதிலை தட்டச்சு செய்யாமல் அப்படியே அனுப்ப முடியும்.
  • அடிக்கடி தொடர்பு கொள்ளும் முகவரிகளை எல்லாம் சேர்த்து ஒரு குழுவாக சேமித்து வைத்துக் கொண்டால், அடுத்தடுத்து மின்னஞ்சல்கள் அனுப்பும் போது குழுவின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும்; அனைவருக்கும் மின்னஞ்சல் சென்று விடும்.

– தொடரும்

Advertisements