14-வது மதுரை புத்தகத் திருவிழா

மதுரையில் நேற்று ஆரம்பித்த 14-வது புத்தகத் திருவிழா செப்டம்பர் 9 வரை நடைபெற இருக்கிறது. இன்று புத்தகத் திருவிழாவிற்கு அனலிகாவுடனும், கிஷோருடனும் சென்று வந்தேன்.

அவ்வப்போது கிண்டிலிலேயேப் புத்தகங்களை வாங்கி வருவதால் இவ்வருடம் விருப்ப பட்டியலேதும் இல்லை. இருப்பினும் அத்தனை புத்தகங்களைப் பார்த்ததும் எதுவும் வாங்காமல் இருக்கவும் முடியவில்லை. இன்று வாங்கிய புத்தகங்கள்:-

 1. ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் – ஜெயகாந்தன்
 2. ஓர் இலக்கியவாதியின் பத்திரிக்கை அனுபவங்கள் – ஜெயகாந்தன்
 3. ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் – ஜெயகாந்தன்
 4. சங்கச் சித்திரங்கள் – ஜெயமோகன்
 5. நாய்கள் – நகுலன்
 6. ஆட்கொல்லி – க.நா.சு
 7. இந்தியாவில் சாதிகள் – டாக்டர் அம்பேத்கர்
 8. ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்

9-வது மதுரை புத்தகத் திருவிழா

9-வது புத்தகத் திருவிழா மதுரையில் தற்போது நடைபெற்று வருகிறது [செப்டம்பர் 7 வரை]. வழக்கம் போல வாசிக்கிறேனோ, இல்லையோ, பின்வரும் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன்.

 1. நீரிலும் நடக்கலாம் – எஸ்.ராமகிருஷ்ணன்
 2. காஃப்கா எழுதாத கடிதம் – எஸ்.ராமகிருஷ்ணன்
 3. தண்ணீர் – அசோகமித்திரன்
 4. அவஸ்தை – யு.ஆர்.அனந்தமூர்த்தி
 5. கால்கள் – ஆர்.அபிலாஷ்
 6. கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
 7. மௌனியின் கதைகள்
 8. உலகப் புகழ் பெற்ற மூக்கு – வைக்கம் முகம்மது பஷீர்
 9. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
 10. மிதவை – நாஞ்சில் நாடன்
 11. சதுரங்கக் குதிரை – நாஞ்சில் நாடன்

வாசித்துவிட்டு இவற்றைப் பற்றி எழுதுகிறேன் 🙂

கீழக்குயில்குடி

கீழக்குயில்குடிக்குப் போகணும்னு சொன்னதிலிருந்து, எப்ப போகலாம்னு கேட்டுகிட்டே இருந்தான் கிஷோர். இன்று சாயங்காலம் நேரா, கீழக்குயில்குடி சமணர் மலைக்குக் கூட்டிட்டே போயிட்டான். மலையடிவாரத்தில் ஓர் அய்யனார் கோவில் இருந்தது. அதற்கு முன் ஒரு தாமரைக்குளம். அங்க தான் நீச்சல் பழகுனானாம் கிஷோர் 😉 . தொல்லியல் துறை மலையேறுவதற்குத் தோதாக, கொஞ்ச தூரம் வரை படிகளை அமைத்திருந்தது. படிகள் இருந்த வரை மலையில் ஏறி, அங்கிருந்த சிற்பங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, இருட்டிக் கிடந்த வானம் நீரை வாரி இறைத்தது 😦

தீர்த்தங்கரர்

தீர்த்தங்கரர்

அங்கிருந்த தீர்த்தங்கரர் சிற்பத்தில், சைடுல இருந்து இரண்டு இயக்கியர்கள் சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள்; தலைக்கு மேல் முக்குடை இருந்தது. இந்த மூன்று குடைகளும், மூன்று உலகங்களைக் குறிக்கின்றன. இது மூன்று உலகங்களுக்கும் அதிபதி என்பதை உணர்த்துகின்றதாம்.

இன்னுமா கிளம்பல என்பது போல், மழை எங்களை அடித்து விரட்ட, மலைக்கு டாட்டா சொல்லி விட்டு கடகடவென்று கீழிறங்கினோம்.மழை நிற்கும் வரை காத்திராமல் கிளம்பியதால், சாரல் முகத்தில் சப் சப் என்று அடிக்க, தொப்பென்று மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

மாமதுரை போற்றுவோம்

Patti Mandram

Pattimandram

மதுரையின் பழமை, பெருமை, வரலாற்று சிறப்புகளை விளக்கும் வகையில் ‘மாமதுரை போற்றுவோம்’ விழா மதுரையில் பிப்ரவரி 8,9,10 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. விழாவில் ஒரு நிகழ்ச்சியாக ‘மாமதுரையின் பெருமைக்கும் புகழுக்கும் பெரிதும் காரணம் – பழமையின் சின்னங்களே! மண்ணின் மக்களே!’ என்ற தலைப்பில், பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் தமுக்கம் திடலில் நடத்தப்பட்டது. பட்டிமன்றத்தில் நான் கேட்டறிந்த தகவல்களில், நினைவில் இருப்பவற்றைக் கீழே பட்டியலிடுகின்றேன்.

 • ‘பழமையின் சின்னங்கள்’ அணிக்காக பேசியவர்கள் குறிப்பிட்ட சின்னங்கள் :- வைகை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கோரிப்பாளையம் பள்ளிவாசல், செயின்ட் மேரிஸ் தேவாலயம், மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், ஆனைமலை, திருமலை நாயக்கர் மஹால், சித்திரைத் திருவிழா, அழகர் மலை, ஆல்பர்ட் விக்டர் பாலம், அமெரிக்கன் கல்லூரி, தமுக்கம் திடல், புது மண்டபம், தாமரைப் பூ வடிவில் வடிவமைக்கப்பட்ட மதுரை வீதிகள் மற்றும் காந்தி அருங்காட்சியகம்
 • ‘மண்ணின் மக்கள்’ அணிக்காக பேசியவர்கள் குறிப்பிட்ட சில மதுரைக்காரர்கள் :- எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி. எம். சௌந்தரராஜன், மணி ஐயர், நாராயணன் கிருஷ்ணன் மற்றும் ஜி.நாகராஜன்
 • சென்னை நகரை சீரமைக்கும் பொருட்டு, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று, நகரமைப்பு பற்றி தெரிந்து கொண்டு வருவதாக கூறிய அதிகாரிகளுக்கு, ‘இதற்காக ஐரோப்பா செல்லத் தேவையில்லை. இரயிலேறி மதுரைக்குச் சென்று வாருங்கள்.’ என்று சொன்னாராம் காமராசர்.
 • தென்னிந்தியாவில் சமணப் படுகைகள் மதுரையில் தான் அதிகமாக உள்ளன.
 • பரிபாடல், மதுரைக்காஞ்சி என பல சங்க இலக்கியப் பாடல்களிலிருந்து மதுரையைப் பற்றிய வரிகளை மேற்கோள் காட்டினார்கள்.
 • ‘தீபம்’ நா.பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’, ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே!’, சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ போன்ற நூல்கள் மதுரையை மையமாகக் கொண்டவை.
 • ‘சொக்கன் ஊரணி’ என்ற பெயரே மருவி ‘செக்கானூரணி’ ஆனது. ‘சம்பந்த நல்லூர்’ என்ற பெயரே மருவி ‘சமயநல்லூர்’ ஆனது.
 • ‘தமு’, ‘கமு’ என்ற தெலுங்கு சொற்களிலிருந்தே ‘தமுக்கம்’ திடலின் பெயர் உருவானது.
 • முன்னர் சித்திரைத் திருவிழா ‘தைத்’ திங்களில் கொண்டாடப்பட்டு வந்தது. அதைத் தையிலிருந்து, சித்திரைக்கு மாற்றியவர் ‘திருமலை நாயக்கர்’.
 • வைரமுத்துவின் வரிகளில் மதுரை:-

  நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான்
  நிமிர்ந்து முட்டும் கோபுரமும்
  ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் – தமிழ்
  அழுந்தப் பதிந்த சுவடுகளும்
  காணக் கிடைக்கும் பழமதுரை – தன்
  கட்டுக் கோப்பால் இளமதுரை!

பேராசிரியர், மாமதுரையின் பெருமைக்கும், புகழுக்கும் காரணம் சின்னங்களை உருவாக்கியும், அதைப் பாதுகாத்தும் வரும் ‘மண்ணின் மக்களே!'(நாம தான்) என்று தீர்ப்பளித்து பட்டிமன்றத்தை முடித்து வைத்தார். பட்டிமன்றம் முடிந்தவுடன், அப்படியே அங்கே கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மதுரையிலிருந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மதுரை வீதிகளின் வடிவமைப்பு மாதிரி, மதுரையைச் சுற்றியுள்ள இடங்களைப் பற்றிய தகவல்கள்(முகவரி மற்றும் வரைபடத்துடன்), புகைப்படங்கள், படங்கள் எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்து விட்டு வந்தேன்.

‘நானும் மதுரைக்காரன் தான்.’ என்று பெருமையுடன் கூறிக் கொண்டு, மாமதுரையைப் போற்றி, இந்தப் பதிவை இத்துடன் முடித்துக் கொள்கிறேன் 🙂

Albert Victor Bridge

Albert Victor Bridge

Madurai Streets

Madurai Streets

Madurai West Tower Entrance

Madurai West Tower Entrance

Madurai West Tower Entrance

Madurai West Tower Entrance

Madurai West Tower Entrance

Madurai West Tower Entrance

Panda maatru murai

பண்டமாற்று முறை

மதுரை சந்திப்பு

சில நாட்களுக்கு முன், ஸ்ரீராமும், பிரவீனும் ‘2013 பொங்கல் விடுமுறைகளின் போது இந்தியாவில் இருப்போம்’, என்று ஓர் அறிக்கை விட்டார்கள். ‘சரி பார்ப்போம்’, என்று வழக்கமான பதிலைச் சொல்லி வைத்தோம். நாள் நெருங்க நெருங்க, ‘எங்கே சந்திப்பது?’ என்று பேச்சை ஆரம்பித்தார்கள். ஏற்கனவே ‘பொங்கல் கொண்டாடினால், அது மதுரையில் தான்’, என நாங்க முடிவெடுத்து விட்டதால், அவர்களை ‘முடிஞ்சா மதுரைக்கு வந்து பாருங்க.’ என்று சொல்லி விட்டோம். பேச்சு வார்த்தையின் போது, என்னிடம் டிக்கெட் இல்லாத காரணத்தினால், மதுரை செல்வதற்கு டிக்கெட் எடுக்கும் பொறுப்பு ஒரு மனதாக எனக்கு அளிக்கப்பட்டது. அந்தப் பொறுப்பை நான் செம்மையாக செய்திருந்தாலும், கடைசி நேரத்தில் ஏற்பட்ட குளறுபடியால் பிரவீனின் அறிவுரை அம்புகளைத் தாங்கிக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டேன் 😦 என் மீது யாருக்கேனும் கோபம் இருந்தால், பிரவீனுக்கு ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்; அவனே உங்களை மீண்டும் அழைத்து ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் என்னைக் கழுவிக் கழுவி ஊத்துவான். நிற்க. ஒவ்வொருவரும், ஒவ்வொரு நேரத்தில் 12-01-2013 அன்று மதுரையை வந்தடைந்தார்கள். காலை 11:00 மணியளவில், செந்தில் வீட்டிலிருந்து நான், ஷனுஃப், பிரவீன் மற்றும் செந்தில், பிரபாகரன் வீட்டிற்கு சென்றோம். வழியில், எங்களுடன் நிர்மலும் சேர்ந்து கொண்டான். அடுத்த வாரம், பிரபாகரனுக்குத் திருமணம் நடைபெறவிருப்பதால், அவனை மனமார வாழ்த்தி விட்டு, அவனிடமிருந்து விடை பெற்றுக் கொண்டோம். விடை பெறும் முன், செந்திலின் மனதை பல நாட்களாக அரித்துக் கொண்டிருந்த ஒரு கேள்விக்கு விடை கிடைத்ததையும், பிரபாகரன் யாருக்காகவோ வாங்கி வைத்திருந்த பலகாரங்களையும், பவண்டோவையும் நாங்கள் காலி செய்ததையும் சொல்லியே தீர வேண்டும். At Prabhakaran's House அது-இது-எது, என ஒவ்வொருவரும் ஒரு ஹோட்டல் பெயரைச் சொல்ல, கடைசியாக காக்கா தோப்பு தெருவில் இருக்கும் ஸ்ரீராம் மெஸ்ஸில் புகுந்து விளையாடினோம். சென்ற வாரம், அஞ்சப்பரில் ஐந்தே ரன்களில் அவுட்டான முசி, ஸ்ரீராம் மெஸ்ஸில் அபாரமாக ஆடி சதம் அடித்து, இழந்த ஃபார்மை மீட்டார், என்பது குறிப்பிடத்தக்கது 😉 மதிய உணவுக்குப் பின், திட்டமிட்ட படி கல்லூரிக்குச் சென்றோம். பார்த்துப் பழகிய, அழகிய மரங்கள் எங்களை வரவேற்றன. மைதானத்தில் Inter-Department கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. நாங்கள் இறுதி ஆண்டு படிக்கும் போது, நடத்திய கிரிக்கெட் போட்டி ஞாபகத்திற்கு வந்தது. அதில் ஓர் அணியின் பெயர் ‘முடிஞ்சா தோத்து பாரு’ என்று ஸ்ரீராம் சொன்ன போது, சிரித்துக் கொண்டே தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியை நினைத்துக் கொண்டேன். நூலகம், கணிணித் துறை, பம்ப் ஹவுஸ் என அங்கும், இங்கும் குதித்த படி, ஆல மர விழுதுகளில் தொங்கிய படி என பல க்ளிக்குகள். விளம்பரங்கள் பிடிக்காத சிலர், காமிரா முன் நிற்காமல் காத தூரம் தள்ளியே நின்றிருந்தனர் 😉 பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்திருந்தாலும், அன்று பம்ப் ஹவுஸில் அமர்ந்து கொண்டு பேசிய அதே வெட்டிப் பேச்சு. மங்காத்தாவில் அஜித் போல, கடைசியாக வந்து சேர்ந்தார் வன்னி. ஆர்த்தி ட்ரைவ் இன்-ல் ஒரு காபி சாப்பிட்டு விட்டு, என் வீட்டில் போய் ஒரு அட்டென்டன்ஸ் போட்டு விட்டு, ஜம்போ பெல்லில் இரவு உணவை முடித்துக் கொண்டோம். இப்போ கிளைமேக்ஸ் வந்தாச்சு. வேறெங்க, இரயில் நிலையம் தான்; ஸ்ரீராமையும், ஷனுஃபையும் வழியனுப்பி விட்டு, நான் வீட்டிற்கு சென்றேன். சரி இப்போ இந்தப் பதிவுல, என்ன சொல்ல வர்றனு, நீங்க கேக்குறது எனக்குப் புரியுது. ரொம்ப நாளைக்கு அப்புறம் நண்பர்களப் பார்த்தது, தேன் மிட்டாய் சாப்பிட்டதுக்கு அப்புறமும் இருக்கும் தித்திப்பைப் போல இனிப்பா இருந்துச்சு. அத அப்படியே பதிவு பண்ணிரலாம்னு தான், இந்த ‘மதுரை சந்திப்பு’ பதிவு.At College
நண்பர்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!