பெங்களூரு இலக்கியத் திருவிழா 2017

பெங்களூரு இலக்கியத் திருவிழா 2017 இரண்டு நாட்கள் (28-10 & 29-10) நடைபெற்றது. சனிக்கிழமை நான் அரங்கிற்குள் நுழையும் போது, ராமச்சந்திர குஹா நாட்டுப்பற்று vs வெறி குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். அது முடிந்தவுடன் ஆட்டா கலாட்டாவின் புத்தக ஸ்டாலுக்கு சென்று  பெருமாள் முருகனின் மாதொருபாகன், கூளமாதாரி, சாதியும் நானும் மற்றும் அம்பையின் சிறகுகள் முறியும் ஆகிய புத்தங்களை வாங்கிக் கொண்டேன். அடுத்ததாக ‘சாதியும் நானும்’ என்ற தலைப்பில் பெருமாள் முருகன், அம்பை, கண்ணன் சுந்தரம் ஆகியோர் உரையாடிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். ‘சாதியும் நானும்’ புத்தகங்களில் உள்ள அனுபவக் கட்டுரைகளைத் தான் தொகுத்த விதத்தையும், அம்பை அதைத் தானாக முன் வந்து ஆங்கிலத்தில் மொழியாக்கியதையும் பெருமாள் முருகன் விவரித்தார்; பெருமாள் முருகன் பேசியதை கண்ணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  ‘சாதியும் நானும்’ ஆங்கிலத்தில் ‘Black Coffee in a Cocunut Shell’-ஆக வெளியாகியுள்ளதையடுத்து இந்த அமர்வாம். ‘ஆகாய கங்கை’ எனும் தலைப்பில் இந்திரா லங்கேஷ், மரு.விஜயா, ஆஷா தேவி ஆகியோர் லங்கேஷ் மற்றும் கௌரி லங்கேஷ் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். முழுக்க முழுக்க கன்னடத்தில் இருந்தது அவர்களின் பேச்சு; அரைகுறையாகத் தான் புரிந்தது. 1984-ம் ஆண்டு சீக்கியர்கள் படுகொலையின் போது தங்களது அனுபவங்களை ஹர்தீப் சிங், கன்வால்ஜீத் தியோல், என்.எஸ்.மாதவன், ப்ரீத்தி கில் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். அடுத்ததாக இளம் எழுத்தாளர்கள் சவி சர்மாவும், வருண் அகர்வாலும் புது எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்களுடைய கதையைச் சொன்னார்கள். அனில் கும்ப்ளே, ராஜ்தீப் சர்தேசாய், கிடியான் ஹை, ஷர்தா உக்ரா ஆகியோர் டி20 உலகப் போப்பையை இந்தியா வென்றது என்னென்ன மாற்றங்களை இந்திய மற்றும் உலக கிரிக்கெட்டிற்குள் கொண்டு வந்தது என விவாதித்தனர்; இவ்விவாதத்தின் போது கூட்டம் பிய்த்துக் கொண்டு நின்றது. அத்தோடு நான் கிளம்பி வந்து விட்டேன். ஞாயிற்றுக்கிழமை திருவிழாவிற்கு செல்லவில்லை; விடுப்பு எடுத்துக் கொண்டேன் 😉blrlitfest

பெருமழை

பெருமழை,
ஒரு வழிப் பாதையில் உருவாக்கிய
ஏழு மலை, ஏழு கடல்களால்
ஏதோ பெயரில்லா புதியதொரு தீவுக்கு இடம் பெயர்ந்துள்ளது,
என் வீடு.

லால்பாக் மலர் கண்காட்சி

Lalbagh Flower Showலால்பாக் மலர் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன்.
எவ்வளவு பெரிய தோட்டம்!
வண்டுகள் மொய்க்கும் மலர்கள், இங்கு
வாண்டுகளாலும், பெரியோர்களாலும் மொய்க்கப்பட்டிருந்தன.
ஆங்காங்கே விதைகள், பூந்தொட்டிகள்,
புத்தகங்களுக்கு என புதிய அங்காடிகள் முளைத்திருந்தன.
எங்கு நோக்கினும், கண்களின் ரசனையை
காமிராவின் லென்சுகள் குத்தகைக்கு எடுத்திருந்தன.
அப்படியே கண்ணாடி மாளிகைக்குள் புகுந்த மக்கள் வெள்ளத்தில் கலந்து,
இரண்டரை லட்சம் ரோஜாக்களாலும், பத்தாயிரம் ஆர்க்கிட் மலர்களாலுமான
ஈபிள் கோபுரத்தையும், விவேகானந்தரையும்,
அந்தூரியம் மலர்களாலான ஆடை அணிந்த அழகியையும் தரிசித்து விட்டு
மிதந்தபடியே வெளியே வந்தோம்.
களைப்பைப் போக்க அங்கேயே ஓர் ஓரமாய் அமர்ந்து,
டீக்கடை பெஞ்சில் பேசும் விஷயங்களை அலசி விட்டு,
மீண்டும் மக்கள் வெள்ளத்தில் கலந்து,
தோட்டத்திற்கு வெளியே வந்து விழுந்தோம், வீட்டிற்குத் திரும்ப.

****
இரா.சுப்ரமணி
27 01 2013