ரெயினீஸ் ஐயர் தெரு

reinees_iyer_streetவண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ எனக்குப் பிடித்தமான நாவல்களில் ஒன்று. ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ என்று புத்தகத்தின் பெயரே வித்தியாசமாக இருந்ததால் கிண்டிலில் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். இந்தச் சிறிய நாவல் ரெயினீஸ் ஐயர் தெருவையும், அங்கு வாழ் மக்களையும், அவர்களது அன்றாட வாழ்க்கையையும் நம் கண் முன் விரிய வைக்கின்றது. நாவலில் வரும் காட்சிகளும், கதாபாத்திரங்களும் சிறு வயதில் நான் குடியிருந்த ஆர்.சி.தெருவினரை ஒத்திருந்ததால், ரெயினீஸ் ஐயர் தெருவுக்குள் இன்னும் எளிதாக சென்று வர முடிந்தது. கி.ரா வின் ‘கோபல்ல கிராமம்’ கிராமத்தைச் சுற்றி வருகிறதென்றால், ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ ஒரு தெருவைச் சுற்றி விரிகின்றது. நன்று!

நாவலின் பொருளடக்கத்தைப் பாருங்கள் 😉

IMG_20180213_073750

Advertisements

இன்று வாங்கிய புத்தகங்கள்

இன்று அமேசான் தள்ளுபடியில் கிண்டில் ஸ்டோரில் அள்ளிய புத்தகங்கள்:-

  1. மதில்கள் – வைக்கம் முகம்மது பஷீர்
  2. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகன்
  3. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
  4. அள்ள அள்ளப் பணம் 1 -பங்குச்சந்தை: அடிப்படைகள் – சோம. வள்ளியப்பன்
  5. யூதர்கள் ~ வரலாறும் வாழ்க்கையும் – முகில்

2017

இதே தலைப்பில் இந்த வருட ஆரம்பத்தில், ஒரு படமாக என் இவ்வருடத்தைய இலக்குகளைக் குறித்து பதிவேற்றியிருந்தேன். இப்போது அவற்றை மையமாக வைத்து 2017-ஐத் திரும்பிப் பார்ப்போம்.

  • வாசிப்பு – குட்ரீட்ஸின் 2017 வாசிப்பு சவாலில் ’20 புத்தகங்கள் வாசிக்க வேண்டும்’ என்றொரு இலக்கை நிர்ணயித்து, இன்று ஒரு வழியாக அதை எட்டியும் பிடித்தேன். நிறைவு! மகிழ்ச்சி!  வெண்முரசில் ஒரு நாவலையாவது தினமும் சுடச்சுட வாசிக்க வேண்டும் என்ற ஆசை ‘மாமலர்’ மூலம் நிறைவேறியது. இவ்வருடத்தில் வாசித்ததில் பிடித்தமான நாவல்களில் மாமலரும் ஒன்று. ஜே.ஜே: சில குறிப்புகள், அம்மா வந்தாள், சிவா முத்தொகுதி, மாதொருபாகன், பாகிஸ்தான் போகும் இரயில் ஆகியவை இவ்வருட வாசிப்பில் முக்கியமானவை.

Goodreads_2017_Challenge

  • ஓட்டம் – சொற்ப கி.மீ-களே இவ்வருடத்தில் கடந்திருக்கின்றேன். இதுவரை நான் ஓடிய 10 கி.மீ பந்தயங்களிலேயே சிறப்பான ஓட்டத்தை டி.சி.எஸ் 10 கி.மீ பந்தயத்தில் வெளிப்படுத்தியது மட்டுமே ஒரே ஆறுதல். அடியீடுமானி ஒன்றைக் கையில் கட்டுக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறேன். இதனால் தொட்டதற்கெல்லாம் ரன்கீப்பரை உபயோகிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. இது கூட இவ்வருடத்தைய மோசமான ஓட்டத்துக்கு ஒரு காரணமாக இருக்குமோ? தடைபட்டு, உடைபட்டு நிற்கும் ஓட்டம், அடுத்த வருடமாவது சீராக தொடர வேண்டும்.
  • எழுத்து – பத்து வருடங்களுக்கும் மேலாக வலைப்பதிவுகள் எழுதி வரும் நிலையில், இவ்வருடமே அதிக பதிவுகளை எழுதியிருக்கின்றேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி! வலைப்பதிவில் இதுவரை எழுதிய கவிதைகளை மின்னூலாக வெளியிட்டிருக்கின்றேன் 🙂 குறுங்கதைகள், ஓகே கூகுள் கட்டுரைத் தொடர் என அக்டோபர் வரை சிறப்பாகவே நகர்ந்து கொண்டிருந்தது. அடுத்த வருடமும் இது தொடர வேண்டும் என்பது அவா.
  • திரைப்படங்கள் – வாரத்திற்கு ஒன்று வீதம் 50+ திரைப்படங்களைப் பார்த்திருக்கின்றேன். அவற்றுள் பிடித்தமானவை கீழே:-2017_Movies_Liked
  • இன்ன பிற மறக்க முடியாத தருணங்கள்:- தம்பியின் திருமணம், அனலிகாவின் முதல் பிறந்தநாள் விழா, சவன்துர்கா, பாண்டிச்சேரி பயணங்கள்.
  • வேலைப் பளுவால் நவம்பரும், டிசம்பரும் நான் குளிர் கால உறக்கத்தில் இருப்பது போல் பணியைத் தவிர வேறெந்த செயலுமின்றி சர்ரென்று கடந்து விட்டன. ஆனது ஆகட்டும், 2018-ஐ வரவேற்கத் தயாராவோம். வருக 2018!