ஓகே கூகுள் – 2 யூடியூப்

கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.

சிறுவயதில் வெள்ளிக்கிழமை ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியையும், ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் திரைப்படத்தையும் பார்க்க 8 வீடுகளிருந்த எங்கள் காம்பவுண்டில் அனைத்து வயதினரும் தொலைக்காட்சி இருக்கும் வீட்டின் முன் தவம் கிடப்போம். அதை விட்டால் திரையரங்குகளுக்குத் தான் திரைப்படங்கள் பார்க்க செல்ல வேண்டும். அதன் பின் கேபிள் டிவி சேனல்கள் தலை தூக்க ஆரம்பித்தன. அமிர்தம் டீக்கடையில் கூட்டம் அப்படி அலை மோதும், டீக்கடைத் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகள் பார்ப்பதற்காகவே. அரசு தொலைக்காட்சிகளை வழங்கிய பிறகு டிவி சேனல்கள் கண்களைக் கட்டிப் போட்டு விட்டன. வீடியோ அப்படியே வீடியோ கேசட், சி.டி, டிவிடி, USB ட்ரைவ் என தவழ்ந்து, அமர்ந்து, நடந்து, ஓடி வந்து இப்போது யூடியூபில் நிற்கிறது. தொலைக்காட்சி சேனல்கள் எவ்வளவோ மாறுதல்களை அடைந்து, எண்ணிலடங்காமல் இருந்து வந்தாலும் காட்சி ஊடகம் என்னவோ தன் ஒரு கண்ணை தற்போது இணையத்திலும் வைத்திருக்கின்றது.

அறிமுகம்

YouTube-social-icon2யூடியூப் உலக அளவில் அதிகமாக உபயோகிக்கப்படும் இரண்டாவது இணையதளம். யூடியூப் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான தளம். ஆனால் பொழுதுபோக்கையும் தாண்டி, அரசியல், அறிவியல், சமையல் குறிப்புகள், தொழில் நுட்பம், விளையாட்டு, ஏன்? எப்படி? எதற்கு? என பலதரப்பட்டவிஷயங்களையும் அறிந்து கொள்ளும் களமாக அது இருந்து வருகிறது. ஒவ்வொரு நிமிடமும் 400 மணி நேரத்திற்கான வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வீடியோக்களுக்கான சமூக  வலைத்தளமாக விளங்கும் யூடியூப், படைப்பாளிகளையும், பார்வையாளர்களையும் ஒருங்கிணைக்கும் பாலம். குழந்தைகளுக்கென பிரத்யேகமாக அவர்களுக்கு ஏற்ற வீடியோக்களை மட்டுமே காட்ட யூடியூப் கிட்ஸ் என்றொரு செயலியுமுள்ளது.

யூடியூப் பேபி பிறந்த கதை

2005-ல் சாட் ஹர்லி, ஸ்டீவ் சென், ஜாவித் கரிம் ஆகிய மூவர் யூடியூபை நிறுவினார்கள். மூவரையும் ஒன்றிணைத்தது அதற்கு முன் அவர்கள் பணியாற்றிய பேபால் நிறுவனம். முதலில் அவர்களுக்குத் தோன்றிய யோசனை ஆன்லைன் வீடியோ டேட்டிங் தளம்;ஏனோ அது கைவிடப்பட்டது. இன்றைய யூடியூப் உருவாக முக்கிய நிகழ்வுகளாக இருந்தவற்றில் முக்கியமானது, சாட் மற்றும் ஸ்டீவ் கலந்து கொண்ட டின்னர் பார்ட்டியை கரிம் “செல்லாது! செல்லாது! நீங்கள் அப்படி எதுவும் பண்ணல” என்று மறுத்து விட்டதாம். நாமாக இருந்திருந்தால் “நம்புனா நம்பு! நம்பாட்டி நீ அங்கிட்டு போ! நான் இங்கிட்டு போறேன்” என்று நடையைக் கட்டியிருப்போம். இன்னொரு நிகழ்வாக குறிப்பிடப்படுவது 2004 சூப்பர் பௌல் விளையாட்டு இடைவேளையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஜானட் ஜாக்ஸனின் மேலாடை தவறிய காட்சியும், சுனாமி காட்சிகளும் கரிமுக்கு இணையத்தில் எங்கு தேடியும் கிடைக்காததாம். நவம்பர் 2006-ல் கூகுள் யூடியூபை 1.65 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. தற்போது யூடியூப் கூகுளின் கிளை நிறுவனமாக இருந்து வருகிறது. யூடியூபில் டிவி நிகழ்ச்சிகளையும், ஸ்மார்ட் டிவிகளில் யூடியூபையும் பார்க்க வைத்ததே யூடியூபின் வளர்ச்சிக்கு சான்று.

முதல் யூடியூப் வீடியோ

யூடியூப் சேனல்

யூடியூபில் கணக்கில்லாமல் வீடியோக்களைப் பார்க்கலாம். அதுவும் ஒரு வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பரிந்துரைக்கிறேன் பேர்வழி என்று அதையொத்த வீடியோக்களை பக்கவாட்டில் காட்டும். அப்படியே ஆட்டோ ப்ளேவில் அதை ஓடவிட்டு விட்டு ஜம்மென்று பார்த்து ரசிக்கலாம். யூடியூபுக்குள்  நுழைந்து விட்டாலே சராசரியாக குறைந்தது ~40 நிமிடங்களை ஒருவர் செலவிடுகிறாராம். இப்படியே பார்த்து பார்த்து நாட்களும் ஓடிக் கொண்டிருக்கும் போது, எப்போதாவது நாமும் கூட ஒரு வீடியோவை உருவாக்கி பதிவேற்றலாமே என்று பல்பு எரிந்தால் உங்களுக்கென்று ஒரு யூடியூப் சேனலை உருவாக்குங்கள். உங்களுக்கு என்ன தெரியுமோ அதை ஆடியன்ஸின் பல்ஸுக்கேற்ப வீடியோக்களாக பதிவேற்றும் போது, லைக்ஸ் அள்ளும்; வ்யூஸ் எண்ணிக்கை உயரும்; உங்கள் சேனலுக்கென்று ஒரு தனி ரசிகர் வட்டம் உருவாகும். சிறந்த படைப்புகளை உருவாக்கத் தேவையான குறிப்புகளை நீங்கள் யூடியூப் அகாடமியில் காணலாம். அதன் பின்னர் உங்களது சேனலில் உள்ள வீடியோக்களுக்கு பணமாக்குதலை இயங்கச் செய்து, யூடியூப் மூலம் நீங்கள் பணமும் சம்பாதிக்கலாம். சமீபத்தில் யூடியூப் ஸ்பாட்லைட்டில் இடம் பெற்ற ‘Country Foods‘ சேனலைப் பாருங்கள். லஷ்மணின் 106 வயது பாட்டியின் சமையல் வீடியோக்கள் வைரல் ஹிட். இருக்கின்ற வேலையை விட்டுவிட்டு ஸ்ரீநாத்தும், லஷ்மணும் ஆரம்பித்த இந்த சேனல், அதை விடவே அதிக வருமானத்தை அவர்களுக்கு ஈட்டிக் கொடுக்கிறது.

விளம்பரங்கள்

யூடியூபில் சராசரியாக தினமும் ஒரு பில்லியன் மணி நேர வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன. இவ்வளவு பெரிய சந்தைக்குள் விளம்பரங்களை வெளியிட கம்பெனிகள் வரிசை கட்டாமலா இருக்கும். யூடியூபில் நீங்கள் விளம்பரம் செய்யும் போது, அது முகப்புப் பக்கத்திலோ, வீடியோக்கள் ஆரம்பிக்கும் முன்னரோ, வீடியோக்களுக்கு இடையிலோ அது சொருகப்பட்டிருக்கும். விளம்பரங்களை வெளியிட்ட பின்னர், அதை எத்தனை பேர், எத்தனை முறை பார்த்திருக்கிறார்கள்?, 5 நொடிகளுக்குப் பின் விளம்பரத்தைத் தாண்டிச் செல்ல வாய்ப்பு இருந்தாலும் வீடியோ முடியும் வரை பார்த்திருக்கிறார்களா? கம்பெனியைப் பற்றி எத்தனை பேர் தேடியிருக்கிறார்கள்? அதில் எவ்வளவு பேர் விளம்பரத்தைப் பார்த்தவர்கள் என்று எக்கச்சக்க புள்ளி விவரங்களால் ஒரு மெகா சைஸ் கோலத்தையே நமக்கு போட்டுக் காட்டுகிறது. அதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப கம்பெனி ஃபிராண்டுகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது தான் பாக்கி. குறைந்தது 30 நொடிகள் அல்லது விளம்பரம் முடியும் வரை பார்த்திருந்தால் மட்டுமே அதற்காக பணம் வசூலிக்கப்படும் எனும் யூடியூபின் நேர்மை பிடித்திருக்கிறது (ஒருமுறை பார்க்கப்பட்டால் $.20). 2015-ல் யூடியூபுக்கு விளம்பரங்களால் மட்டும் கிடைத்த நிகர வருவாய் 4.28 பில்லியன் அமெரிக்க டாலர்கள். வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் எப்படி விளம்பரப்படம் எடுப்பது என்று இங்கே வகுப்பெடுக்கிறது யூடியூப். உதாரணத்திற்கு விளம்பரப்படத்தில் அடுத்து பார்வையாளர்கள் என்ன செய்ய வேண்டும் எனத் தெளிவாக வழிநடத்தப்பட வேண்டும் (CTA). இந்தப் பதிவுகள் உங்களுக்குப் பிடித்திருந்தால், லைக் மற்றும் ஷேர் செய்யவும் 😉

 

நாம் யூடியூபில் வீடியோக்களைக் கண்டுகளித்துக் கொண்டிருப்பதாக மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்; ஆனால் நாம் பார்க்கும்/தேடும் வீடியோக்களின் வழியே யூடியூப் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருப்பதும் நினைவிலிருக்கட்டும்.

– தொடரும்

Advertisements