ஓகே கூகுள் – 1 வரைபடம்

மதுரைக்கு வழி வாயிலே.

முன்பெல்லாம் புதிதாக ஓர் இடத்திற்குச் செல்லும் போது, பேருந்து நிலையத்திலிருந்தோ, இரயில் நிலையத்திலிருந்தோ எப்படி அந்த இடத்தை அடைவது என்று வழியை முன்பே ஓரளவுக்கு தெரிந்து வைத்திருப்பர். இல்லையென்றால் பேருந்தை விட்டு இறங்கியவுடன் தென்படும் டீக்கடையில், ஒரு டீ வாங்கி குடித்துக் கொண்டே வழியை விசாரிப்பர்; ‘அவரும் நேரா போய் லெஃப்ட் எடுத்தீங்கனா கொஞ்ச தூரத்துல ஓர் ஆலமரம் வரும்; அப்படியே போனீங்கனா இரண்டு ரோடு பிரியும்; அதுல ரைட் சைடு நடந்து போங்க … ‘ என்று விலாவரியாக விலாசத்தை சொல்லுவார். நம்ம நேரா போய் லெஃப்ட் எடுத்துட்டு, அதற்கு பின் எப்படி போக வேண்டும் என்று மீண்டும் வழியை விசாரிப்போம். மரங்கள், கோவில்கள், சிலைகள் வழிகாட்டும் போது பிரபல அடையாள சின்னங்கள். அலைபேசி பரவலாக உபயோகத்தில் வந்த பின்பு, அலை வழியாகவே வந்து வீட்டிற்கு அழைத்துச் செல்பவர்கள் உளர். இருப்பினும் முன் பின் தெரியாதவர்கள் வீட்டிற்கோ, ஒரு புதிய இடத்திற்கோ செல்வதென்றால் சற்று சிரமம் தான். அதுவும் மெட்ரோ நகரங்களில் யாரிடமாவது வழி கேட்டால் பெரும்பாலானோர்களிடமிருந்து வரும் பதில் ‘நானும் அசலூர் தான்’.

Google-Mapsஇன்றைய தேதிக்கு ஸ்மார்ட் போன்களின் வரவு, அட்ரஸ் தேடி அலையும் நேரத்தை மிச்சப்படுத்தியிருக்கிறது. ஸ்மார்ட் போனில் வரைபட செயலியை நிறுவி விட்டால் போதும்; தற்போது எந்த இடத்தில் இருக்கிறோம், செல்ல வேண்டிய இடத்திற்கு இருக்கும் தூரம் எவ்வளவு, விரைந்து செல்ல எவ்வழியில் செல்லலாம், வழியில் போக்குவரத்து நெரிசல் நிலவரம் எப்படி, செல்லும் இடத்திற்கான அரசு போக்குவரத்து விவரங்கள் என எக்கச்சக்க விஷயங்கள்; ஒரு வழிகாட்டியாய் சேரும் இடம் வரை வழியை சொல்லிக் கொண்டே வரும்; கேட்டுக் கொண்டே  பத்திரமாய் போய் சேருவது தான் பாக்கி. வரைபடம், அதிகமாக உபயோகிக்கப்படும் ஸ்மார்ட்போன் செயலிகளில் ஒன்று. சில நாட்களாக தொலைக்காட்சி விளம்பரங்களில், சாலையோர விளம்பரப் பலகைகளில் #LookBeforeYouLeave ஹேஷ் டேக்குடன்  கூகுள் வரைபடத்தைக் காண முடிகிறது. அதில் ஒரு விளம்பரம்:-

Where 2 Technologies கம்பெனியை 2004-ல்  கூகுள் வாங்கியதிலிருந்து ஆரம்பிக்கிறது வரைபடத்தின் பயணம். C++ மொழியில் டெஸ்க்டாப் நிரலாக்கமாக இருந்தது இணைய மென் பொருளாக மாற்றி அமைக்கப்பட்டது. நிலப்பரப்பு தரவுகளைக் காட்சிப்படுத்தும் மென் பொருள்களை உருவாக்கும் Keyhole கம்பெனியையும், போக்குவரத்து நெரிசல் தகவல்களை சுடச் சுடக் கூறு போட்டு கொடுக்கும் ZipDash கம்பெனியையும் வாங்கிய பிறகு வரைபடத்திற்கான ஸ்கெட்ச் பெரிதாக போடப்பட்டது. 2005-ல் முதன் முதலாக வெளியிடப்பட்ட கூகுள் வரைபடத்தின் பரிணாம வளர்ச்சியை, நம் பாக்கெட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன் வரைபட செயலியே காட்டி கொடுத்து விடும். இதற்கு பின்னால் உள்ள தொழில் நுட்பமும், உழைப்பும் அசாத்தியமானவை. பல பங்குகளிடமிருந்து பெற்ற தரவுகளையெல்லாம் ஒன்றாக அரைத்து மெருகூட்டினால், இறுதியாகத் தான் நாம் காணும் கூகுள் வரைபடம் கிடைக்கும். ஒரே ஒரு மூலத்தை மட்டும் சார்ந்திராமல், கிடைக்கும் தரவுகளை எல்லாம் தேவையான இடங்களில் பயன்படுத்துகிறது கூகுள். அது மட்டுமில்லாமல், தெருத் தெருவாக புகைப்படக் கருவிகளுடன் காரை ஓட்டியும் தரவுகளைச் சேகரிக்கிறது. இதனால் காரால் செல்லக்கூடிய வழித்தடங்களை சரிபார்த்தது மாதிரியும் ஆயிற்று; இடங்களின், தடங்களின், போக்குவரத்துக் குறியீடுகளின் புகைப்படங்களை எடுத்தது மாதிரியும் ஆயிற்று. உதாரணத்திற்கு இந்த தரவுகளையும், புகைப்படங்களையும், அஞ்சப்பர் உணவகச் சின்னத்துடன் பொருத்திப் பார்த்து எங்கெல்லாம் அஞ்சப்பர் உணவகம் இருக்கின்றது என்று கண்டுபிடிக்க முடியும். வரலாறு மிகவும் முக்கியம்; கூகுள் வரைபடத்தின் சுருக்கமான வரலாற்றின் காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்.

தாஜ்மஹாலின் 360 டிகிரி ஸ்ட்ரீட் வ்யூ (Street View)

எத்துணை தரவுகளைத் தன்னகத்தே வரைபடம் கொண்டிருந்தாலும், இன்னொரு முக்கியமான தகவல் தான் அதை முழுமையடையச் செய்து, நமக்கு அதை பயனுள்ளதாக்கும்; அது தற்போது நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் என்பது. அதை அறிந்து கொள்ள நமக்கு ஜி.பி.எஸ் அவசியமாகிறது. புவியிடங்காட்டி (Global Positioning System – GPS) என்பது உலகத்தில் ஓரிடத்தைத் துல்லியமாக வானில் இருந்து அறியும் ஒரு கருவியும் திட்ட அமைப்பும் ஆகும். ஒரு ஜி.பி.எஸ் பெறுதல்(GPS Receiver) அமைப்பு செயற்கைகோள்களிடமிருந்து செய்திகளைப் பெற்று, அதற்கும் செயற்கைக்கோள்களுக்குமான தூரத்தை அளவிடுகிறது. இவ்வாறாக குறைந்ததது மூன்று செயற்கைகோள்களின் தூரம் தெரியும் பட்சத்தில்  டிரைலேடர்ஷன் முறைப்படி ஓரிடத்தைத் (அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை) துல்லியமாக தீர்மானிக்க  முடியும். இடத்தின்  உயரத்தையும்(முப்பரிமாணம்)  சேர்த்து அறிய அவ்விடத்திலிருந்து நான்கு  செயற்கைகோள்களின் தூரம் தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, பெங்களூருவிலிருந்து ~500 கி.மீ எனும் போது அது திருவனந்தபுரமாகவோ, ஹைதராபாத்தாகவோ, பனாஜியாகவோ, மதுரையாகவோ இருக்கலாம்; சென்னையிலிருந்தும் அந்த ஊர்  ~500 கி.மீ என்று சேர்க்கும் போது, அது ஹைதராபாத் அல்லது மதுரையாக இருக்கலாம்; அதே ஊர் நாகர்கோயிலிலிருந்து ~200 கி. மீ என்று தகவல்கள் கூடும் போது, ஹைதராபாத் காணாமல் போய் அந்த ஊர் மதுரை என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதான்பா டிரைலேடர்ஷன்!

கூகுள் வரைபடத் தரவுகள் மேல் பல்வேறு நிறுவனங்கள் காப்புரிமை கொண்டுள்ளன. அவற்றை இலவசமாக உபயோகிக்க முடியாது. எனவே தான் விக்கிபீடியாவைப் போலவே திறத்தரவு வரைபடத் திட்டப் பணியான OpenStreetMap-ல் வரைபடத் தரவுகள், தன்னார்வலர்களால் திரட்டப்பட்டு வருகின்றன.

– தொடரும்

Advertisements