பனிநேரம்

பனியோடு பனியாய்
தன் பணி மறந்து
உறைந்து போய்
எதிர் திசை நோக்கி நிற்கும் நேரமே!
என்னோடு சேர்ந்து,
உருகி, கரைந்து
எதிர்காலம் தாண்டி, அவளிடம்
விரைந்து செல்ல, வா!

Advertisements

திரிதல்

திரி,
தன் தீ நாவால்
தன்னையும், எண்ணையையும்
தின்று கொண்டிருந்தது;
எரிந்து கொண்டிருந்தது விளக்கு.

கைபேசி கால கடிதங்கள்

அன்பே!
உனக்கு நான் கடிதங்கள் எழுதியிருக்கிறேனா?
– இல்லை.
அதனாலென்ன?
நுட்பங்கள் விரல் நுனியில் விளையாடும் கைபேசி யுகத்தில்
எல்லா செயலிகளிலும் நான் தட்டச்சி அனுப்பிய
ஒவ்வொரு செய்தியையும்
சிரிப்பான்களையும்
மீம்களையும்
படங்களையும்
ஒலி/ஒளித் துணுக்குகளையும்
ஒரு வரிச் செய்திகளையும் கூட
ஒன்று விடாமல் கோர்த்துப் பார்,
அப்போது புலப்படும்
நம் கைபேசி கால கடிதங்களும்,
அவை கட்டமைக்கும் மிக…மிகப் பெரிய நூலகமும்.

‘உயிருடன்…’ கவிதைத் தொகுப்பு மின்னூல்

Uyirudan_Cover_Imageவலைப்பதிவுகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பே ‘உயிருடன்…’. ஒரு வட்டத்துக்குள் நில்லாமல், காதல், நட்பு, நம்பிக்கை, மூடநம்பிக்கை, வானம், மேகம், நிலவு, இரவு, மழை … எனப் பல்வேறு பாடுபொருட்களை வகை தொகையில்லாமல் தன்னுள் அடைத்து வைத்திருக்கிறது இத்தொகுப்பு. எழுத்து வாகனத்திற்கு வாசிப்பு எரிபொருள் அவசியம் என்று பற்ற வைக்க, வாசிப்பு என்னை பற்றிக் கொண்டது. எழுத்து, வாசிப்பைத் தொடர்ந்த எழுத்து முயற்சி, புதிய முயற்சிகளுக்காக வாசிப்பு என நீண்ட பயணத்தில், நான் நடை பழகியதன் தொகுப்பு இம்மின்னூல். நன்றி!

மின்னூல் :- http://freetamilebooks.com/ebooks/uyirudan-poems/

யுரேகா

‘தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல்
காகம் ஒன்று அலைந்து கொண்டிருந்தது.
உண்பதற்கு உணவை வைத்தவர்கள்,
ஏனோ அருந்துவதற்கு நீரை வைக்கவில்லை.
நெடுநேரத்திற்கு பின்,
குறைகுடம் ஒன்று கண்ணில் தட்டுப்பட்டது.
அலகிற்கு எட்டாத அந்நீரைக் குடிக்க,
அருகில் கிடந்த சிறு கற்களை ஒவ்வொன்றாக
அந்த குடத்திற்குள் போட்டது. கற்களால்
மேல் எழும்பி விளிம்பு வரை வந்த நீரை
அருந்தி விட்டு, தாகம் தணிந்த மகிழ்ச்சியில்
‘கா கா’ என கரைந்து கொண்டே பறந்தது
அந்த புத்திசாலி காகம்.’

கதையைப் படித்த மாத்திரத்தில்
‘யுரேகா யுரேகா’ என்று கூவியபடி
வீதியில் இறங்கி ஓடினார் ஆர்க்கிமிடிஸ்.
****
02-08-2014

கஜல் – பாடப்பாட பரவசம்

 1. subramani95
  கஜல் இலக்கணம் ~ குறள் வெண் செந்துறை #கஜல்
 2. subramani95
  இறந்த பின்னும் என் இமைகள் திறந்தே இருக்கும்,
  வழக்கமாகிப் போனது அவள் வருகையைத் தேடி! #கஜல்
 3. subramani95
  இதயம் கொண்ட காதலை நான் இதுவரைக்கும் காக்கிறேன்
  அவளும் அறியா மவுனகீதம் இசைக்கும் நெஞ்சம் அல்லவோ!
  – நீதா ஃபாஸ்லி #கஜல்
 4. subramani95
  மறைந்து பேசக் காவலாய்ப் படர்ந்து நின்ற மதிற்சுவர்
  காலப்போக்கில் கல்வெட்டாகியென் நினைவில் நின்றதே!
  – ஹஸ்ரத் மோஹானி #கஜல்
 5. subramani95
  பாதி தேகமே நான் பார்த்து வாழ்கிறேன் ஊனமென் உறவா!
  பாதி என்னுடன் நீ பாகம் சேர்ந்து என் வடிவம் தர வா!
  – அஞ்சும் #கஜல்
 6. subramani95
  எத்தனையோ இருக்கின்றன
  எனக்கு அமையாமல்
  வேலை
  வீடு
  கவிதை
  அத்துடன்
  நீயும்.
  – அபுல் கலாம் ஆசாத்
 7. subramani95
  விழியோரத்தில் நீர்ப்பெருக்கு யாரை நினைத்து
  கார்காலத்தின் காரணமும் நீயில்லை தானே!
  – பஷீர் பதர்
  #கஜல்
 8. subramani95
  இந்தத் தீபத்துடன் மோதும் சூறாவளி தோற்காதோ!
  இந்தத் தீபத்துடன் நாளும் விட்டில்கள் ஒரு கோடி.
  – ஷாரியார்
  #கஜல்
 9. subramani95
  நிலத்தைப் பார்க்கும் விழியின் உள்ளே நினைவும் உளதோ சொல்
  அலை அடிக்கும் உள்ளக் கடலில் காதல் உளதோ சொல்.
  – கைஃபி ஆஸ்மி
  #கஜல்
 10. subramani95
  தண்ணீர் கேட்ட நாவிற்கு செவிசாய்த் தனளே இதுபோதும்
  இமையின் கோப்பை நிறைகின்ற விழிநீர் எனக்குத் தந்தனள்
  – ஜாவீத் அக்தர் #கஜல்
 11. subramani95
  மடலினிற் சென்றதென் தூது
  மறுதலித் தனளே மாது
  விடையிலை என்பது விடையோ
  விதியினில் உறவிலை ஏனோ
  – ஷகீல் பதாயுனி #கஜல்
 12. subramani95
  ஊராரின் பழிச்சொல் ஒருநாள் என்மேல் விடிந்தது!
  பிறகென்ன உன்பெயர் சொன்னேன் என்னால் முடிந்தது!
  – கதீல் ஷிஃபாயி #கஜல்
 13. subramani95
  வசந்தமும் வந்தால் நலம்நான் கேட்டேன் எனச் சொல்வீரா!
  வழியில்லாதொரு வனத்தினில் வாழ்பவன் குரல் கேட்பீரா!
  – கைஃபி ஆஸ்மி #கஜல்
 14. subramani95
  அவநிலை அடைகிற விதியானேன் நான்
  அழிநிலை யுறுகிற தடமானேன் நான்
  – பகதூர் ஷா ஜஃபர் #கஜல்
 15. subramani95
  இவரிடம் சேதிகள் சொல்வீர் இனியிங் கிடமிலை கேட்பீர்
  எவரும் தங்கிட இயலா இதயச் சிறை நிறைத்தேன் நான்.
  – பகதூர் ஷா ஜஃபர் #கஜல்
 16. subramani95
  வானம் என்னை வாழ்த்திட வேண்டும் வரங்கேட்பேன் இனி
  அழுகையும் என்னைப் பிரிந்திட வேண்டும் உன்னைப் போல் சகி!
  – மீர்ஸா காலிப் #கஜல்

கலைடாஸ்கோப்

அவள் அணியும்
வண்ண வண்ண
கண்ணாடி வளையல்கள்
எனக்குள் எதிரொளித்து
வரைகின்றன
வண்ண வண்ண
கலைடாஸ்கோப் வடிவங்களை.