கற்றல்

அவன் குடிலை அடைந்த போது மதியமாகிவிட்டிருந்தது. குடிலின் வெளியே மரத்தடியில் தியானத்திலமர்ந்திருந்த குருஜியிடம், ‘குட் ஆஃப்டர் நூன் குருஜி! நான் தங்களது குருகுலத்தில் சேர விரும்புகிறேன். இங்கு நான் என்ன கற்றுக் கொள்வேன்?’ என்று அட்மிஷன் ஓகேயாகும் முன்னரே, ப்ரீபேர்டு செய்து வைத்திருந்த, ப்ரீபெய்டு கேள்வியைக் கேட்டான் அந்த  ஸ்மார்ட் சிறுவன். மதிய உணவுக்குப் பின் பதிலளிப்பதாகக் கூறி விட்டு, அவனையும் உணவு உண்ண அழைத்தார் குருஜி. நெடிய பயணத்தால் களைத்துப் போயிருந்தவனுக்கு அது சரி எனப்பட்டது. குடிலுக்குள் நுழைந்தவனுக்கு ஆச்சர்யம்!!! அனைத்து வகையான உணவு வகைகளும் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. பிடித்தவற்றையெல்லாம் தட்டில் எடுத்து வைத்து ஒரு பிடி பிடித்தான். மதிய உணவுக்குப் பின் அவனை சந்தித்த குருஜி  ‘எல்லா வகையான உணவுகளும் இருந்தாலும், உனக்குப் விருப்பமானவற்றையே எடுத்து உண்டு உன் பசியைப் போக்கினாய். அதே போல, எத்துணை விஷயங்களை இங்கு போதித்தாலும், உனக்கு எதில் நாட்டமுள்ளதோ, அதுவே உன்னை வந்தடையும். அதையே நீ கற்பாய்!‘ என்று பதிலுரைத்தார்.  இப்போது அந்த சிறுவன், ஸ்மார்ட் சீடனாகியிருந்தான்.

Advertisements