கர்ஜனை

காட்டில் உள்ள விலங்குகள், பறவைகளென அனைத்து உயிரிகளும், கர்ஜிப்பதைத் தவிர வேறெந்த குரலோ/ஒலியோ எழுப்பலாகாது என சிங்க ராஜா அதிரடியாக அவசர அரசாணை ஒன்றை பிறப்பித்தது. ‘என்னடா இது வம்பா போச்சு! நமக்கு எப்படி கர்ஜிக்க வரும்?’ என மைண்ட் வாய்ஸ் எழுந்தாலே, அவர்கள் வனத்துரோகிகள் என குற்றஞ்சாட்டப்பட்டு காடு கடத்தப்பட்டார்கள். இந்த சூழ்நிலையில் ஆணையை மறுத்தவர்களும், எதிர்த்தவர்களும் ஏதாவதொரு ஊன் உண்ணிக்கு விருந்தாகியிருப்பார்கள் என்பதை தனியாக விளக்கத் தேவையில்லை. எஞ்சியிருந்தவர்கள் ஒன்றும் பேச முடியாமல் மௌனத்தைக் கடைபிடித்தார்கள். நாட்கள் ஓடின… காடு இயல்பு நிலைக்கு திரும்பிய பின், தன் வேட்டையை முடித்துக் கொண்டு காடு திரும்பிய சிங்க ராஜாவுக்கு காட்டின் அமைதி கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. மாதங்கள் ஓடின… அடுத்ததாக ஒரு நன்னாளில் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் கர்ஜனை காட்டின் குரலாக அறிவிக்கப்பட்டு, அதைக் கொண்டாடும் வகையில் ஒரு வாழ்த்து வடையும் சுட்டு அனுப்பப்பட்டது, ஊமையாகிப் போய் தமக்கு நாக்கு எதற்கு என மறந்து போன வன உயிரிகளுக்கு. ஓங்கி ஒலிக்கட்டும், கர்ஜனை!

Advertisements