அவர்களுக்கு நன்றி

இன்று காலையில் கிரிக்கெட் ஆடி விட்டு, அப்படியே மடிவாலா சென்று சாரதியின் சமையலை மூக்கு பிடிக்க சாப்பிட்டு விட்டு, மீண்டும் வீட்டுக்குத் திரும்பும் போது தான் ‘எனது பர்ஸைக் காணவில்லை’ என்று தெரிந்தது. நானும், கார்த்தியும் வந்த வழியிலேயே திரும்பிச் சென்று வழியில் அது கிடக்கின்றதா, எனத் தேடிப் பார்த்தோம். கிடைக்கவில்லை 😦 அப்புறம் கொஞ்சூண்டு நம்பிக்கையுடன் ஆபிஸில் சென்று விசாரித்த போது, யாரோ ஒருவர் அதில் இருந்த கார்டைப் பார்த்து ஆபிஸ் விலாசம் தேடி வந்து கொடுத்து விட்டுச் சென்றதாக சொன்னார்கள். அதற்கு முன்னரே, அந்த பர்ஸ் 2-3 கைகள் மாறி இருந்ததாக தகவல். எப்படியோ பர்ஸ் கிடைச்சுருச்சு. கண்டுபிடித்துக் கொடுத்த நபர் யாரென்று தெரியாமல் போனாலும், எனது பர்ஸ் மீண்டும் எனக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த, ‘அவர்களுக்கு நன்றி!‘.

சில ஆண்டுகளுக்கு முன், இதே மாதிரி ஒரு குட்டிக் கதையைப் பதிவு செய்திருந்தேன். அதில் ஒருவருடைய பர்ஸ் காணாமல் போகிறது. அதைக் கண்டெடுத்த முதலாமவர், அதிலிருந்து பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீண்டும் அதை எடுத்த இடத்திலேயே போட்டு விடுகிறார்; இரண்டாமவர் அதை எடுத்து உரியவரிடம் ஒப்படைக்கும் போது, அவர்களது மனதில் தோன்றும் எண்ணங்கள் அந்தக் கதையில் பதிவு செய்யப்பட்டிருந்தன. பர்ஸ் காணாமல் போவதைத் தவிர, இந்த சம்பவத்திற்கும், அந்தக் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், சும்மா ஒரு மீள்பதிவு.

நல்லவன்
‘இங்க தான் சிக்னல் பக்கத்துல… ஆஸ்பத்திரிக்கு முன்னாடி… சிவப்பு கலர் டி-சர்ட், ப்ளு கலர் பேண்ட்…’
‘ஓகே! உங்களப் பார்த்துட்டேன். இதோ வர்றேன்.’
அந்த சிவப்பு நிற டி-சர்ட்காரனை அவன் நெருங்கினான்.
‘நீங்க தான ராம்?’
‘ஆமா’
இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
‘உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல, …’
‘பரவாயில்ல சார், இந்தாங்க உங்க பர்ஸ். எல்லாம் சரியா இருக்குதான்னு பாருங்க.’
‘தேவையில்ல சார். பர்ஸ் தொலைஞ்சதும் என்ன பண்றதுனே தெரியல… அதுவும் இன்னிக்கே கிடைச்சிடும்னு நினைச்சு கூட பார்க்கல… ரொம்ப நன்றி’
சில நிமிட உரையாடலுக்குப் பின் இருவரும் பிரிந்தனர்.

சிறிது தூரம் சென்ற பிறகு, அவன் வண்டியை நிறுத்தி விட்டு, தனது பர்ஸை எடுத்துப் பார்த்தான். டிரைவிங் லைசென்ஸ், கிரெடிட் கார்டு, ஐ.டி.கார்டு … எல்லாம் சரியாக இருந்தது, அவன் வைத்திருந்த 250 ரூபாயைத் தவிர.
‘ச்ச, திருட்டுப் பய, அவனப் போய் நல்லவன் அப்டி, இப்டினு பாராட்டிப் பேசிட்டு வந்திருக்கோமே. அங்கேயே, பர்ஸ பிரிச்சுப் பார்த்துட்டு, அவனயும் பிரிச்சிருக்கணும். சரி விடு, இதாவது கிடைச்சதே…’ வீட்டை நோக்கி வண்டியை விட்டான் அவன்.

‘உன்னப் போய் நல்லவன்னு சொல்லிட்டுப் போறான் பாரு… கீழ கிடந்த பர்ஸ, இன்னிக்கு துலாம்-லாபம், உள்ள இருக்க பணம் நமக்கு தான்னு நெனச்சுகிட்டே தான் எடுத்த, பர்ஸில ஒரு பைசா கூட இல்லைன்ன உடனே, அப்படியே அவனுக்கு போன் பண்ணி வரச் சொல்லிட்டு, என்னமோ நல்லவன் மாதிரி பேசிட்டு போறியே!’ அவனுக்குள்ளிருந்த கெட்டவன் அவனை ஏளனம் செய்ய, வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான் ‘நல்லவன்’ ராம்.

***

இரா.சுப்ரமணி
12 10 2008

அடிமாடு

பள்ளியிலிருந்து திரும்பும் போது வழியிலேயே பார்த்து விட்டான். வீட்டுக்குள் நுழைந்தவுடன் அம்மாவிடம் கேட்டான், ‘நம்ம மாட ஏம்மா களத்துல நிக்குற லாரில ஏத்திருக்காங்க?’.
‘அதுக்கு ஒடம்புக்கு முடியலல, அதான் டாக்டர்ட்ட கூட்டிட்டு போறோம்.’
‘அப்பாவும் நம்ம மாட்டோட டாக்டரப் பாக்க போறார்ல?’
‘அப்பா போகல. மாடு ஒடம்பு சரியானதும் அடுத்த வாரம் வீட்டுக்கு திரும்பி வந்துரும்’ என்று சொல்லி விட்டு அம்மா தன் வேலையைத் தொடர்ந்தாள்.
களத்திற்கு சென்று மாட்டை பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். வண்டி கிளம்பியவுடன் தான் வீட்டிற்கு திரும்பினான் சிறுவன்.
சரியாக ஒரு வாரம் முடிந்தவுடன், பள்ளியிலிருந்து வந்தவுடன் கொட்டகைக்கு ஓடினான். மாடு இல்லை. அம்மாவிடம் கேட்டான்.
மறந்திருப்பான் என்று நினைத்தவள் இந்த கேள்வியை அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இந்த முறை மாடு திரும்பி வரும் என்று சொல்லவில்லை; அது வராது என்று சொல்லவும் மனம் வரவில்லை. அவனது கேள்விகள் காதில் விழாதது போல வந்த அழுகையை அடக்கிக் கொண்டு, மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

ஒரு துளி மை

நேற்று முதல் காணவில்லையாம்.
என் தம்பியைக் கூட்டிக் கொண்டு கிளம்பினார்,
அவர் தம்பியை மை போட்டு கண்டுபிடிக்க.
நீண்ட வரிசையில் காத்திருந்த பின்
அந்த முதியவரை சந்தித்தனராம்.
வெற்றிலையில் மையைத் தடவி,
சிறிது நேரம் எதையோ முணுமுணுத்து விட்டு,
என் தம்பியிடம் கேட்டிருக்கிறார்,
‘அனுமார் தெரிகிறாரா?’.
ஒன்றுமறியாமல் அவன் விழித்துக் கொண்டிருக்க,
குரலை உயர்த்தி மீண்டும் கேட்டிருக்கிறார்.
வேறு வழியின்றி அவன் தலையசைத்திருக்கிறான்.
‘ஆஹா! இதோ தெரிகிறான் காணாமல் போனவன்.’
மீண்டும் என் தம்பியிடம் காட்டி கேட்டிருக்கிறார்.
இப்போது ‘தெரிகிறான்’ என்றிருக்கிறான்.
இல்லையென்றால் அம்முதியவர் விடுவதாக இல்லை.
‘வடக்கே திரிந்து கொண்டிருக்கிறான்.
வந்து விடுவான் ஒரு வாரத்திற்குள்.’
(மூட)நம்பிக்கையை வளர்த்தன அவர் வார்த்தைகள்.
தேடல் மீண்டும் தீவிரமானது.
ஒரு வழியாக நான்காவது நாள்
அவர்களது தேடல் முடிவுக்கு வந்தது.
தம்பி கிடைத்த மகிழ்ச்சியில் அவர் சொன்னார்,
‘சாமி சொன்ன மாதிரியே தம்பி கிடைச்சுட்டான்’
தேடிக் கிடைத்தவனை, சாமியால் கிடைத்தான் என்றது
வேடிக்கையாக இருந்தது எனக்கு.
பல லட்சம் பேரை சிந்திக்கவும் வைக்கிறது,
சிலரை இப்படி சிந்திக்க விடாமலும் செய்கிறது,
ஒரு துளி மை.