பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்

panjam-padukolai-perazivu-communismஇரத்தம் சொட்ட சொட்ட அரிவாள்-சுத்தியல் இருக்கும் அட்டைப் படத்தோடு ஆரம்பிக்கிறது, ‘பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்’.

ஆதரவற்றோருக்காகவும், அடக்குமுறைக்கு எதிராகவும் குரல் கொடுப்பது போல் இருந்தாலும், மார்க்ஸியத்தை அதிகாரத்துக்கான ஓர் ஆயுதமாகவே மாற்றிக் கொண்டார்கள்

என்பதை, கம்யூனிச சித்தாந்தங்களால்/தலைவர்களால் சிதைக்கப்பட்ட உயிர்களின் புள்ளி விவரங்களுடன், நாம் உறைந்து நிற்கும் படி விவரிக்கின்றார், அரவிந்தன் நீலகண்டன்.

  • கம்யூனிஸம் ஓர் அறிமுகம் கம்யூனிஸ சித்தாந்தத்தின் பிறப்பும், ‘ஏன் கம்யூனிஸம் ஓர் அழிவு சக்தியாக இயங்கி வந்துள்ளது?’ என்பதைப் புரிந்து கொள்ள மார்க்ஸும், ஏங்கல்ஸும் கூறிய விஷயங்களுக்குள் இருக்கும் சில மையக்கருத்துகளும் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளன.
  • லெனின்: புரட்சி, புரட்சி, படுகொலைகள் ரஷ்யாவின் ஜார் மன்னராட்சி கவிழ்க்கப்பட்டு, அதிகாரம் லெனின் கைகளுக்குக் கிடைக்கிறது. செகாவால் மக்கள் மீது பயன்படுத்தப்பட்ட ‘சிவப்பு பயங்கரம்’, ராணுவ நடவடிக்கை மூலம் ஒடுக்கப்பட்ட க்ரோன்ஸ்டாட் புரட்சி மற்றும் ஸ்டாலினின் எழுச்சி இதில் கூறப்பட்டுள்ளது.
  • ஸ்டாலின்: பிணக்குவியல்கள் மேல் ஒரு பொன்னுலகம் ஸ்டாலினின் அரசியல் சதுரங்க விளையாட்டில் ட்ராஸ்கி மற்றும் புக்காரின் பலியாவது, பெரும் துடைத்தொழிப்புகள், குலாக் வதைமுகாம்கள், கேய்டின் படுகொலைகள் மற்றும் ஸ்டாலினின் கொலைக்கரமான பெரியா பற்றி எனப் பலவும் இந்த அத்தியாயத்தில் அடங்கும்.
  • மார்க்ஸியப் பஞ்சங்கள் ரஷ்யா, உக்ரைன், சீனா மற்றும் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பஞ்சங்களும், அதற்கான காரணங்களும் இதில் அலசப்பட்டுள்ளன.
  • அறிவியலும் மார்க்ஸியமும் அறிவியல் அரசியல் சித்தாந்தத்துக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பது, லெனினின் மூளை குறித்த முடிவுக்கு ஏற்றவாறு செய்யப்பட்ட ஆராய்ச்சி, ஜெனிடிக்ஸ் மற்றும் சூழலியல் உதாரணங்களால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
  • சர்வாதிகாரிகளின் பொன்னுலகம்: மாவோ, போல்பாட், காஸ்ட்ரோ மாவோ, போல்பாட்(கெமர் ரூஜ் இயக்கம்) மற்றும் காஸ்ட்ரோ-சே குவேரா ஆகியோர் அவர்கள் பங்குக்கு புரட்சியால் ஓட விட்ட இரத்த ஆறுகளை விவரிக்கின்றது, இந்த அத்தியாயம்.
  • திபெத்தில் எரிந்த நாலந்தா சீனா திபெத்தில் செய்த இனப்படுகொலை.
  • இந்திய விடுதலைப் போராட்ட துரோகங்கள் & சுதந்திர இந்தியாவின் துரோகங்கள் அத்தியாயங்கள் கம்யூனிஸ சித்தாந்தத்தாலும், கம்யூனிஸ்டு கட்சிகளாலும் இந்தியா அடைந்த பாதிப்புகளை விளக்குகின்றது.

தேசத்தின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும், சுதந்திரத்துக்கும் மேலாகச் சித்தாந்தத்தை வைக்கும் எந்த அமைப்பும், இயக்கமும் ஒதுக்கப்பட வேண்டியதே

என்பது தான், இந்தப் புத்தகம் சொல்லும் பாடம்.