வித்யாரம்பம்

இளையவளுக்கு இன்று மழலையர் பள்ளி துவக்க விழா. குறிப்பிட்ட நேரத்திற்கு கிளம்பும் போதே அரை மணி நேரம் கழித்து தான் ஆரம்பிக்கும் என்று ஆணித்தரமாக கூறியிருந்தேன்; அப்படியே நடக்கவும் செய்தது. ஆசிரியைகளுடன் மின்னி, புஜ்ஜியும் எங்களை வரவேற்றனர்; மின்னி, புஜ்ஜியுடன் சில கிளிக்ஸ். நிகழ்ச்சி ஆரம்பமான போது அரங்கம் நிறைந்து வழிந்தது; பெற்றோர் சில இடங்களில் சிறாரை சிராவயல் மஞ்சுவிரட்டு போல துரத்திக் கொண்டிருந்தனர். மிக்க மகிழ்ச்சியுடன் பெற்றோர்; செய்வதறியாது திகைப்புடனும், நகைப்புடனும் மழலையர். குத்துவிளக்கு ஏற்றப்பட்டு, பிரார்த்தனை, ஆடல், பாடல், பேச்சு என மேடை அமர்க்களப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின் வித்யாரம்பம்; அரிசியில் குழந்தையின் கையைப் பிடித்து எழுத வைக்கும் நிகழ்வு. விஜயதசமியன்று செய்யப்படும் இந்து சமய சடங்கு கிறித்தவ பள்ளியில் அனைத்து மத மழலையருக்கும் செய்யப்பட்டது. மகிழ்ச்சி! ஒவ்வொரு குழந்தைக்கும் மரக்கன்று ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. இன்று ஒரு தகவலாக Kindergarten என்பது ஜெர்மானிய மொழி வார்த்தை; மழலையர் தோட்டம் என பொருள்படும் இக்கல்வி முறையைத் தோற்றுவித்தவர் ஃப்ரெடரிக் ஃப்ராபெல் எனும் ஜெர்மானியர்;அதனால் தான் Garten(Garden). வரும் போது மீண்டும் மின்னி, புஜ்ஜி, ஜம்போ, டெட்டி என எல்லோருடனும் படமடுத்துக் கொண்டு விடை பெற்றோம். நாளை முதல் 7:30-8:30 நான் ரொம்ப பிஸி.

வித்யாரம்பம்

தற்செயல்

நேற்று எனது மனைவியின் கைபேசிக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு; தவற விட்டு விட்டார். ட்ரூகாலர் செயலி ரீனா மேம் என எண்ணுக்கு பின்னால் உள்ளவரை அடையாளப்படுத்தியது. அது எனது மூத்த மகளின் வகுப்பாசிரியை பெயர் என்பதால், அதே எண்ணுக்கு திரும்ப அழைத்திருக்கிறார்; தொடர்பு கொள்ள இயலவில்லை. எனக்கு இத்தகவலை அப்படியே தட்டி விட்டார். முன்பொரு முறை இதே மாதிரி பள்ளி நேரத்தில் வகுப்பாசிரியை அழைத்த போது அனலிகாவுக்கு உடல்நிலை சரியில்லை என உடனடியாக பள்ளிக்கு என்னை அழைத்தார்கள். என்னவாக இருக்கும் என பலவாறு யோசித்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் வீட்டிலிருந்து அழைப்பு; அழைத்தவர் அடுத்த வாரம் திறக்கவிருக்கும் எனது இளைய மகளின் மழலையர் பள்ளி வகுப்பாசிரியை. ஓர் அறிமுகத்திற்காக அழைத்திருக்கிறார். ஒரே சமயத்தில் இரு மகள்களின் வகுப்பாசிரியைகளுக்கும் ஒரே பெயர்; இது தற்செயலானதே 🙂

ஓர் இனிய காலைப் பொழுது

கோடை விடுமுறையின் இறுதி நாட்களை மதுரையின் வெயிலில் கழித்து விட்டு பெங்களூரு வந்தால் அதற்கு நேரெதிரான காலநிலை; நல்ல மழை. முதல் வாரம் முந்தைய தினங்களில் தொலைந்து போயிருந்த தூக்கம் மொத்தமாய் வந்து சேர்ந்து கொண்டது. காலை ஆறு மணிக்கு அலாரம் வைத்தாலும் வேலைக்கு ஆகவில்லை; சரி மழைக்காலம் வெளியே ஏதும் செய்யலாகாது என்று தேற்றிக் கொண்டேன். அதையடுத்து மூத்த மகளுக்கு பள்ளி துவங்கியது; 7:30-க்கு தெரு முனைக்கு வரும் வேனில் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். 6:30-7:30 குறிப்பிடும் படியான பணி இல்லாவிடினும் மனைவி அடுப்படியில் அதிவேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது சிறு குறும்பணிகள் என் சிரத்தில் ஏற்றப்பட்டு விடும்; இந்நேரம் வேறு எதற்கும் இடமில்லை. வெகு நாட்களுக்குப் பின் இன்று 30கிமீ மிதிவண்டி பயணம் திட்டமிடப்பட்டது. 4:30-க்கு எழுந்து 5 மணிக்கு ஆரம்பிக்க வேண்டியது; சற்று தாமதமாக துவங்கியது. திட்டப்படி 6:30-க்குள் வர சாத்தியமில்லை என்பது துவக்கத்திலேயே துலங்கி விட்டது. 10-15 நிமிடங்கள் தாமதமானால் சமாளித்து கொள்ளலாம் என்று தொடர்ந்தேன். பாதி கிணறு தாண்டியவுடன் நண்பர் தேநீர் அருந்தி விட்டு செல்லலாம் என்று ஒரு கடையை தேடிப் பிடித்து நிறுத்தினார். கடைக்காரர் பால் கவரைப் பிரித்து மெதுவாக பாத்திரத்தில் ஊற்றி; சில நிமிடங்களில் நான் கொதிக்க ஆரம்பித்து விட்டேன். அங்கிருந்து நகர்ந்து அருகில் உள்ள தேநீர் கடையில் ஒரு கோப்பை வெந்நீர் அருந்தி விட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். வீட்டிலிருந்து அழைப்பு; வரும் போது ரொட்டி, முட்டை வாங்கி வர வேண்டுமாம். விறுவிறுவென விரைந்து அழுத்தி சென்று ரொட்டி, முட்டையோடு வீட்டை அடையும் போது 7:10. மகளுக்கு ஒரு ரொட்டியில் ஜாம்‌ தடவி கொடுத்தேன்; அதிலும் முக்கால்வாசி தான் உண்டாள். மதிய உணவுக்கு வேக வைத்த முட்டை வெந்து தணிய மறுத்தது. வேன் ஓட்டுநர் பத்து நிமிடத்துக்கு முன்னதாகவே காட்சி தந்து, ஒலிப்பானை அதிர விட்டார். பரபரப்பான பத்து நிமிடங்கள்; பற்றி எரிந்து கொண்டிருந்தன. ஒரு கங்கு பறந்து வந்து விழுந்தது ‘காலைல சைக்கிள் ஓட்டிட்டு இவ்வளோ லேட்டா வரணுமா?’. இனி கொஞ்ச காலத்துக்கு மிதிவண்டி காலையில் நன்றாக உறங்கலாம். அடுத்த வாரம் இரண்டாம் கட்டமாக இளையளுக்கு பள்ளி திறக்கவிருக்கின்றது; அதன் பின் 7:30-8:30-ம் பிஸி. ஓர் இனிய காலைப் பொழுது இப்படித் தான் ஆரம்பிக்கும்…

ஓட்டோவியங்கள்

ஒரு வார நாளில் வீட்டிலிருந்து பணி புரிந்து கொண்டிருந்த போது, உடைத்த வால்நட்களுக்கு பதிலாக முழு வாதுமைக் கொட்டைகள் வாங்கப்பட்டு விட்டதால் அதை உடைத்து பெட்டிக்குள் அடைக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. இந்த மாதிரி இடைச்செருகலாய் வரும் வேலைகள் உடைத்து நொறுக்கும் படி இருப்பது ஒரு வகையில் வரம். உடைத்து அடைக்கும் போது சரியாக இரு பாதியாக அழகாக பிளந்த ஓடுகளை பத்திரப்படுத்திக் கொண்டேன். அவற்றை கரும்புள்ளி செவ்வண்டுகளாக்குவது இன்றைய இலக்கு. நானும் மகள்களும் கருப்பு, சிவப்பு வண்ணங்களைக் குழப்பியடித்து ஓடுகளை வண்டுகளாக மாற்றி விட்டோம். வண்டுகள் தான் ஓடாமல் ஒரே இடத்தில் நின்று விட்டன. இப்போது எந்த வண்டு நன்றாக வந்திருக்கிறது என்பது மகள்களின் கேள்வி. இந்த மாதிரி கேள்விகள் தான் வண்டை விடவும் நம்மை குடைந்து எடுப்பவை; பவுன்சர்களை சில சமயங்களில் அப்படியே விட்டு விடுவது நல்லது. வீணாப் போனவை என்று எதையும் வீசி எறியும்‌ முன்னர், கொஞ்சம் முயற்சித்தால் அதிலிருந்து ஏதாவது ஒன்றை உருவாக்கலாம்; குறைந்தபட்சம் குழந்தைகளுடன் உருப்படியாக நேரம் செலவழிக்க உதவிகரமாக இருக்கும்.

ஓட்டோவியங்கள்

நாற்பது

அனலிகாவிற்கு எண்கள் எழுதும் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த போது கற்றுக் கொண்டது. நாற்பதை எப்படி எழுதுவது என சொல்லிக் கொடுத்தோம் ‘முதல்ல நாலு போடணும். அதுக்கடுத்து ஜீரோ. ‘ அவள் ‘04‘ என்று எழுதிக் காட்டினாள். ‘என்ன எழுதச் சொன்னா என்ன எழுதிருக்க?‘ எனக் கேட்க, அவளது பதில் ‘முதல்ல நால தான் எழுகுனேன். அடுத்து ஜீரோ‘. புரியாமல் விழித்தால், அவள் முதலில் நான்கை எழுதி, அதற்கடுத்து தான் ஜீரோ எழுதுகிறாள்; ஆனால் அதை நான்குக்கு முன்னே போட்டு விடுகிறாள். அவளது வாதமும் சரியாகவே பட்டது. சொல்லிக் கொடுக்கும் போது மிகத் தெளிவாக கற்பவர்களுக்குப் புரியும் படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று எனக்கும் புரிந்தது.

மழலை மொழியாக்கம்

நான் சொல்லிக் கொடுக்கும் வார்த்தையை
மெல்ல மெல்ல மென்று, அதையே
எனக்கு சொல்லிக் கொடுக்கிறாள்,
மொழியாக்கம் செய்து,
மழலை மொழியில்.