நாடடங்கு அறிவிக்கப்பட்டு பெரும்பாலான நாட்கள் வீட்டிற்குள்ளேயே கழிந்ததால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேரம் ஒரு தடையல்ல என்பது நன்கு புரிந்தது; எவ்வளவோ நேரம் கிடைத்தாலும் சில செயல்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவே முடியவில்லை. எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் தொடர்ந்து செயலாற்ற இயலவில்லை; எனவே மனம் போன போக்கில் எல்லாவற்றையும் இஷ்டத்துக்கு முயற்சிக்க முடிந்தது.
புத்தகங்கள் ~ இந்த வருடம் 20 புத்தகங்களை வாசிக்க வேண்டும் என ஆரம்பித்து 15 புத்தகங்களே வாசித்திருக்கின்றேன். வாசித்தவற்றில் பல வருடங்களாக வாசிக்க நினைத்த ஒரு புளிய மரத்தின் கதை, புதுமைப்பித்தனின் பகடி எழுத்தில் நாரத ராமாயணம், தொ.பரமசிவனின் அழகர் கோயில், அலோக் கெஜ்ரிவாலின் Why I Stopped Wearing My Socks குறிப்பிடத்தகுந்தவை. கிடைத்த நேரத்தில் இன்னும் சில புத்தகங்களை வாசித்திருக்கலாம்.
திரைப்படங்கள் ~ மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏகப்பட்ட படங்களைப் பார்த்தேன்; பின்னர் வேகம் தானாகவே குறைந்து விட்டது. பார்த்தவற்றில் ஈர்த்தவை Section 375, Dia, The Platform மற்றும் Article 15. இணையத் தொடர்கள், காணொலிகளையும் இதே கணக்கில் சேர்த்துக் கொள்வதா எனத் தெரியவில்லை; ஆனால் அவையும் கணிசமான அளவு நேரத்தை இவ்வருடம் ஆக்கிரமித்துக் கொண்டன. பார்த்த இணையத் தொடர்களில் Paatal Lok மற்றும் Mr.Robot(இன்னும் சில சீசன்கள் பாக்கி இருக்கின்றன) நன்றாக இருந்தன.
எழுத்து ~ மேலே குறிப்பிட்டபடி ஆகஸ்டு மாதம் அதிகபட்சமாக 11 பதிவுகள் எழுதினேன்; அவ்வளவு தான் அடுத்தடுத்த மாதங்களில் தொடர முடியாமல் 18 பதிவுகளுடனே வருடம் முடிந்து விட்டது. கடந்த பத்து வருடங்களில் பார்வையாளர்களின் வருகை இவ்வருடமே அதிகமாயிருந்திருக்கிறது. இது தொடர்ந்து எழுதத் தேவையான உத்வேகத்தை அளிக்கிறது. இந்த வருடம் நாடடங்கின் துவக்கத்தில் குறும்பட முயற்சியில் ஆரம்பித்து, காணொலிகளை(vlogging) எனது யூட்யூப் சேனலில் வெளியிட்டு வருகிறேன். காணொலிகளில் பெரும்பான்மையிடத்தை மகளதிகாரம் நிரப்பியிருக்கின்றது. அதில் தொழில்நுட்பம் சார்ந்த எனக்குத் தெரிந்த தகவல்களையும் பகிரலாம் என்று இருக்கிறேன். இவ்வருடம் ஒரு மின்னூல் வெளியிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
மிதிவண்டி ~ ஓட்டமும் நடையுமாக இருந்தவன் மிதிவண்டி ஒன்றை வாங்கி கடந்த ஒரு மாத காலமாக ஊர் சுற்றி வருகிறேன். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் தொடர்ந்து மிதிவண்டி ஓட்டுகிறேன். இதுவரை ~500 கி.மீ வரை ஓட்டி இருக்கிறேன். நடக்கும் போதும், மிதிவண்டியில் போகும் போதும் ஒலியோடைகளையோ, பாடல்களையோ கேட்டபடி செல்கின்றேன். ஓர் ஒலியோடை துவங்கலாம் என்று யோசனை உள்ளது; 2021 முடிவில் பார்ப்போம் என்ன நடந்திருக்கிறதென்று.
இவை தவிர மொபைலில் வானையும், பறவைகளையும் படம் பிடிக்கப் பிடித்திருந்தது. குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட்டது மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் உள்ளது. ஒரு வழியாக 2020-ஐத் தள்ளியாகி விட்டது; கொரோனாப் பெருந்துயரிலிருந்து, 2021 அனைவரையும் மீட்கட்டும்! புத்தாண்டு வாழ்த்துகள்!