சில வருடங்களாக நடைப்பயிற்சியை அவ்வப்போது கடைபிடித்து வருகிறேன். பெரும்பாலும் வருடத் துவக்கத்தில் எடுக்கப்பட்ட உறுதிமொழிக்காகவோ அல்லது கலந்து கொள்ளப் போகும் பத்து கி.மீ ஓட்டப்பந்தயத்துக்கான பயிற்சிக்காகவோ தொடரும் பயிற்சி, சில நாட்களிலேயே கைவிடப்படும். அதிகபட்சமாக உபயோகப்படுத்தும் செயலியில் நாளுக்கு ஒரு கி.மீ வீதம் ஒரு வருடத்தில் 365கி.மீ தூரத்தையாவது தொட வேண்டும் என்பதே, எட்ட முடியாத இலக்காக இருந்து வந்தது. இந்த வருடம் உறுதிமொழிகள் எதுவும் எடுக்காததினாலோ என்னவோ, இலக்கைத் தாண்டி மீட்டர் ஓடிக்கொண்டிருக்கின்றது. கொரோனா தொற்றால் நாடடங்கு அறிவிக்கப்பட்டு தனித்திருந்த நிலையில் ராபின் சர்மா-வின் The World-Changer’s Manifesto புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. அதில் குறிப்பிட்டிருந்த 20/20/20 சூத்திரத்தின் படி எழுந்தவுடன் முதல் 20 நிமிடத்தை உடற்பயிற்சிக்காக ஒதுக்க ஆரம்பித்தேன். அடுத்தடுத்த 20 நிமிடங்களை வாசிப்பதற்காகவும், அன்றைய தின அலுவல்களைத் திட்டமிடவும் செலவிட்டேன். இதை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு தோதாக, அலுவலகத்தில் தனிப்பட்ட மற்றும் குழுவினருக்காக குறைந்தது நாள் ஒன்றுக்கு 6000 அடிகள் வீதம் கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் கடக்க வேண்டும் என WalkerTracker செயலியில் சவால்கள் நடத்தப்பட்டன. பணி நேரம் போக மற்ற எல்லா நேரங்களிலும் நடக்க ஆரம்பித்தேன். இரண்டே மாதங்களில் கடந்த அடிகளைக் கணக்கிட்டுப் பார்த்தால் அவை 365கி.மீ-ஐத் தாண்டி ஓடி விட்டன. அலுவலகத்தில் நடத்தப்பட்ட சவால்கள் காலாவதியாகி விட்டாலும், இன்னமும் பயிற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அடியேன் கடந்த மாதம் ஒரு மிதிவண்டி வேறு வாங்கி ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அதைப் பற்றி வேறு ஒரு பதிவில் பார்ப்போம். கடந்து ஐந்து மாதங்களாக தொடர்ந்து பயிற்சி செய்வதால், 365*2 கி.மீத் தாண்டி மீட்டர் ஓடிக் கொண்டிருக்கின்றது. மகிழ்ச்சி!