புதுமைப்பித்தனின் ‘நாரத ராமாயணம்‘, குறுநாவல் அல்லது நீள்கதை வடிவிலான சிறிய புத்தகம். ஒரே மூச்சில் வாசித்து விடலாமென்றால், வரிக்கு வரி பகடி; சில வரிகளை மீண்டும் வாசித்துப் புரிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது. ராமனது காலத்திலிருந்து காலனிய இந்தியா வரை காலச்சக்கரத்தில் ஒரு விரைவுப் பயணம், நாரத ராமாயணம்.
வாசிப்பின் போது எடுத்த சில குறிப்புகள்:-
மேலும், சீதாபிராட்டியின் மீது ஒரு தனிக் கோபம் இருந்தது. அசோகவனத்திலிருக்கும் பொழுது, என்ன சொல்கிறோம் என்றுகூட கவனிக்காமல் அவள் அவசரப்பட்டுக் கொடுத்த வரத்தினால், தனக்குச் செத்துப் போகவும் வழி இல்லாமல் செய்துவிட்டதை, அவரால் மன்னிக்க முடியவே இல்லை.
சுமந்திரபாலனும், கிரந்தத்தை மேலாகப் பார்த்து, அது பகைவர் வந்தவுடன் நடத்தவேண்டிய யுக்திகளாக இருந்ததால், இப்பொழுது அதைப்பற்றிக் கவலை இல்லை என்று அரசாங்கப் புத்தகசாலையில் வைத்துப் பூட்டினான்.
சில கெட்டிக்கார அயோத்தி வாசிகள் தங்களிடம் இருந்த படைக்கலங்களின் இரும்பு வீணாவதைக்கண்டு, தோசைக் கற்களாகவும் இரும்புக் கரண்டிகளாகவும் உருக்கி வார்த்துக்கொண்டனர்.
ஒருநாள் பூராவாகவும், வெள்ளியம்பலத் தம்பிரான்களுடனும் அவர்கள் அரசாங்கத்துடனும் ‘டு’ போட்டுவிட்டால் வழிக்கு வந்துவிடுவார்கள் என்று நினைத்து, மூலைக்கு மூலை போய்ப் பேசி ஜனங்களைத் தன்வசப்படுத்த ஆரம்பித்தான்.
கட்டாயம் வாசியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்!