எல்லையற்ற சுருள்(Infinite Scroll) வடிவமைப்பு தற்போது பரவலாக எல்லா கருவிகளிலும், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் காணப்படுகிறது. செயலியைத் திறந்தவுடன் சமீபத்திய அல்லது பயன்படுத்தப்படும் வழிமுறைக்கேற்ப சில செய்திகள் காட்டப்படும். கீழிலிருந்து மேலாக தொடு திரையைத் தள்ள(scroll) அடுத்ததாக சில செய்திகள் காட்டப்படும். நாம் செயலிக்குள்ளாகவே கட்டுண்டு கிடப்போம்; இப்படியாக முடிவிலியாய் சுருண்டு கிடக்கும் பெரும் நாகம் ஒன்று நம் நேரத்தை விழுங்கிக் கொண்டிருக்கும். முன்பெல்லாம் இவற்றையே பக்கவாரியாக பார்க்கும் போது, ஒரு கணக்கு வழக்கு இருக்கும்; பத்து பக்கங்களை இப்போதைக்குப் புரட்டுவோம் என்று நமக்குள் ஒரு எல்லைக்கோட்டை வரைந்து கொள்ளலாம். இந்த எல்லையற்ற சுருள் வடிவமைப்பில் அதே வழியைப் பின்பற்ற இயலாது. தற்போது நேர விரயத்தைத் தவிர்க்க, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் போது அவற்றிற்கென்று நேரம் ஒதுக்கி அப்போது மட்டும் பயன்படுத்துவது நன்று. அதற்காக நேர மேலாண்மைக்கான செயலி ஒன்றை கைபேசியில் நிறுவிக் கொள்ளலாம். நேரத்தின் மதிப்பை உணர்ந்து செலவிடுவோம்.