ஒரே நேரத்தில் பலதரப்பட்ட பணிகளைச்(multitasking) செய்யும் போது ஏற்படும் செயல்திறன் இழப்பு பற்றி இக்கிகாய் புத்தகத்தில் சில பக்கங்கள் பேசப்பட்டிருந்தன. அது கணிணிகளுக்கு வேண்டுமானால் ஒத்து வரும்; ஆனால் மனிதர்களுக்கு சரிப்பட்டு வராது. ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டுமே கவனத்தைக் குவிக்கும் போது அதை சிறப்பாகச் செய்ய முடியும் என்று விவரித்திருந்தார்கள். அப்போது அஷ்டவதானிகள் அப்படியே சிந்தனையில் வந்து போனார்கள்; அவர்களால் மட்டும் எப்படி ஒரே சமயத்தில் எட்டு செயல்களை செய்ய முடிகிறது என்று. அப்படியே நம்மைப் பற்றியும் யோசித்துப் பார்த்தேன். ஒரே நேரத்தில் செய்வது இருக்கட்டும்; அடுத்தடுத்தாவது எத்தனை செயல்களைச் செய்ய முடிகிறது; ஏதாவது ஒரு செயலையாவது முடிக்க முடிகிறதா? இப்படி எதையுமே முழுவதுமாக முடிக்காமல் multitasking என்ற பெயரில் தன் இஷ்டத்துக்கு இழுத்தடிக்கும் நபர்களை ‘இஷ்டாவதானி‘ என்றழைக்கலாமா என யோசித்து வருகிறேன். செய்யணுமே என்று கடனுக்கு அச்செயலை செய்பவர்கள், செய்முறை அறியாது அல்லது அறிய விழையாது இஷ்டத்துக்கு செய்பவர்கள் இத்யாதி… இத்யாதிகளையும் இஷ்டாவதானிகளாக் கொள்ளலாம்.