பொதுவாக மேடைப் பேச்சுகள், கட்டுரைகளில் மேற்கோள்கள், புள்ளிவிவரங்களைச் சேர்க்கும் போது அவை சொல்ல வரும் கருத்துகளை வலுவாக முன்வைக்க உதவியாக இருக்கும். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளையும், காணொளிகளையும் பார்த்தால், அதில் தரவுகளைத் தாரை தாரையாகக் கொட்டி விட்டிருக்கின்றனர். அப்படி வாரி வழங்கப்படும் தரவுகளிலிருந்து, புதிதாக நாம் தெரிந்து கொள்பவையும், நம்பகத்தன்மையும் மிகக் குறைவு. பார்வையாளர்களின் சொந்தக் கருத்துக்கு ஏற்ப அவற்றிற்கு லைக்ஸூம், டிஸ்லைக்ஸூம். புள்ளியியலில் இருக்கும் தரவுகளை வளைத்து எந்த ஒரு கருத்துக்கும் சாதகமாகக் கூற முடியும். உதாரணத்திற்கு இன்று கொரேனாவால் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை எடுத்துக் கொள்வோம். நேர்மறையாக சொல்ல விழையும் போது இதையே நேற்றைய எண்ணிக்கையை விட இன்று புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவு எனச் சொல்லலாம். அதையே எதிர்மறையாகச் சொல்ல நினைத்தால், அதை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மாநிலங்களிலேயே அதிகம்(முதலாவதோ/இரண்டாவதோ) என்றும் கூறலாம். ஒரே தரவை கருத்துக்கு ஏற்றவாறு திரித்துக் கொள்ளலாம். அதிலும் சிலவற்றில் கூறப்படும் தரவுகளைக் காணும் போது, ஒருமுறை என் நண்பர் சொன்ன ‘நான் தான் இரண்டாவது மூணாவதா வந்தேன்‘ வாக்கியம் தான் ஞாபகத்துக்கு வருகிறது(நான்காவது என்பதை இப்படியும் கூறலாம் போல).