சில மாதங்களாக கிண்டிலில் புத்தகங்கள் வாசிக்கும் போது எடுக்கும் குறிப்புகளை டிவிட்டரில் பகிர்ந்து கொள்ள இயலவில்லை. முன்னதாக புத்தகங்களின் அட்டையுடன் குறிப்புகளை ட்விட்டரில் கிண்டிலிலிருந்து பகிரலாம். பகிரும் போது தெரிவிக்கப்படும் பிழை குறித்த செய்திகளாலும் எந்த பயனும் இல்லை; ஒன்றும் புரியவும் இல்லை. வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்வதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். இடையில் ஒருமுறை அவர்களது தளத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை யாராவது சந்தித்துள்ளார்களா என்று தேடிப் பார்த்தேன்; எதுவும் சிக்கவில்லை.
இன்று முதலாவதாக அமேசான் இந்தியாவினுடைய வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டேன். என்னுடன் உரையாடியவர் கருவியை மீட்டமைக்க(reset) அறிவுறுத்தினார். எனக்கு அதில் உடன்பாடு இல்லாததால் அவரிடம் வேறு பதில்கள் இல்லையென்றும், என்னுடைய கருவி அமெரிக்காவில் வாங்கப்பட்டிருப்பதால் மேலதிக விவரங்களுக்கு வேண்டுமானால் அந்நாட்டினுடைய வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளச் சொன்னார். நானும் விடாமல் அடுத்ததாக அமெரிக்க வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டேன். அவர்களிடமிருந்து கிடைத்த பதில் ‘அமேசான் கிண்டிலிலிருந்து புத்தகக் குறிப்புகளை ட்விட்டருக்குப் பகிரும் வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வசதியை இனி உபயோகிக்க முடியாது.‘. அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதே இம்முறை இணையத்திலும் அதே பதிலை காண முடிந்தது. சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடாவிட்டால் அமேசான், கூகுளால் கூட நமக்கு உதவ முடியாது எனத் தெளிந்தது. இந்திய வாடிக்கையாளர் சேவை மையத்திலிருப்பவரால் இந்த பதிலளிக்க முடியாதது தான் சற்று வேதனை அளிப்பதாக இருந்தது. ஆக ட்விட்டரில் புத்தகக் குறிப்புகளைக் கிண்டிலிலிருந்து பகிர வேறு வழியைத் தான் யோசிக்க வேண்டும்.