கோரங் விழித்துப் பார்க்கும் போது எண் 48 என்று குறியிடப்பட்ட ஓர் அறைக்குள் இருக்கிறான். அந்த அறையில் உடனிருக்கும் ட்ரிமகாசியின் உதவியால் மெல்ல மெல்ல அந்த இடத்தைப் பற்றி தெரிய வருகிறது.
- பூஜ்யத்தில் ஆரம்பித்து ஏகப்பட்ட தளங்கள் கீழ்நோக்கி செல்கின்றன.
- ஒவ்வொரு தளத்திலும் இருவர் இருக்கின்றனர்.
- அவ்விடத்திற்கு வரும் போது ஏதாவது ஒன்றை தங்களுடன் கொண்டு வரலாம்.
- குறிப்பிட்ட நேரத்தில் உணவு மேடை பூஜ்ய தளத்தில் ஆரம்பித்து கீழ்நோக்கி வர ஆரம்பிக்கும். ஒவ்வொரு தளத்திலும் சிறிது நேரம் நிற்கும்; அதற்குள் அத்தளத்திலிருப்பவர்கள் உணவருந்தி விட வேண்டும்.
- உணவை எடுத்து அறையில் வைத்துக் கொண்டால், அறையின் வெப்பநிலை உச்சத்திற்கோ அல்லது உறைய வைக்குமளக்கு கீழோ மாறிக் கொண்டே, அறையிலிருப்பவர்களை நிலைகுலையச் செய்யும்.
- ஒவ்வொரு தளத்தில் இருப்பவர் உண்டது போக மிச்ச மீதிகளே கீழ்நோக்கி செல்லும். தளத்தின் எண் அதிகரிக்க அதிகரிக்க உணவு மேடையில் வெறும் பாத்திரங்களே எஞ்சும்.
- ஒரு தளத்தில் ஒரு மாதம் கழித்த பின்னர் அவர் வேறொரு தளத்திற்கு மாற்றப்படுவர்; அது அவர் இருக்கும் தளத்திற்கு மேலோ அல்லது அதளபாதாளத்திலோ கூட இருக்கலாம். உதாரணத்திற்கு 23, 119, 45, 171, 6 … என்று ஒழுங்கற்று அந்த தள வரிசை மாதமாதம் நீளும்.
அறை எண் 48-ல் ஒரு மாதம் கழித்த பின்னர் 171-வது தளத்திற்கு கோரங்கும், ட்ரிமகாசியும் மாற்றப்படுகிறார்கள். உணவு மேடை அத்தளத்திற்கு வரும் போது எதுவும் எஞ்சியிருக்காது. அத்தளத்தில் ஒரு மாத காலம் எப்படி அவர்கள் தாக்குபிடிக்கிறார்கள்? அத்துளையில் ஆறு மாதம் கோரங் எப்படி சமாளிக்கிறான்? உணவை எல்லா தளங்களுக்கும் கிடைக்கும் படி செய்ய நினைக்கும் கோரங்கால், அத்துளையில் அவன் இருக்கும் ஆறு மாத காலத்திற்குள் அந்த மாற்றத்தைக் கொண்டு வர முடிந்ததா? என்பதை ‘துளை’ (The Platform) துளைத்துச் சொல்கிறது.
நன்று.