அவ்வுலகம்

த்ரிவிக்ரமன் கேள்விப்பட்ட முதல் மரணத்திலிருந்து ஆரம்பிக்கிறது அவ்வுலகம். கற்பனைகளில் அவர் கண்ட சாமியைக் கல்லாகக் கண்டதும் ‘எல்லாக் கற்பனைகளுமே பொடிப் பொடியாகிற நிகழ்வுகளின் தொகுப்பு தான் வாழ்க்கை’ என்பது புரியத் துவங்குகிறது. பல புதிய உலகங்களை விக்ரமனுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் மரணத்தை ஏற்றுக் கொண்ட விதம், அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. தனது கடைசி சடங்குகளை எப்படி செய்ய வேண்டும், என்று சுக்கிரனிடம் சொல்லி விட்டு, சில நாட்களிலேயே அவ்வுலகம் செல்கிறார் த்ரிவிக்ரமன். மரணத்தை வரவேற்று ஏற்றுக் கொண்டதால் அவ்வுலகில் அவருக்கு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. அங்கு அவர் தான் பார்க்கவே கூடாது என நினைத்த சிலரையும், மீண்டும் என்றாவது ஒருநாள் பார்க்க மாட்டாமோ என பார்க்க ஏங்கும் சிலரையும் பார்க்கிறார். அந்த பிம்பங்கள் அவருக்கு இறந்த காலத்தையும், அப்போது அவர் இழந்ததையும் நினைவுபடுத்துகின்றன. ஒவ்வொரு பிம்பத்துடன் அவர் உரையாடி விட்டு செல்லும் போதும் அவர் மனத்திலிருந்த அழுக்குகள் ஒவ்வொன்றாக வெளியேறுகின்றன. ‘பூலோக வாழ்வை எவ்வளவு எளிதாக வீணடித்து விடுகிறோம்’ என்பதை ஒவ்வொரு பிம்பத்தின் வாயிலாகவும் நம் கண் முன் நிறுத்தி, சிந்திக்க வைக்கிறார் வெ.இறையன்பு.

அவ்வுலகப் பயணத்தின் போது மனதில் பதிந்த பொன்மொழிகள்

  • ஒப்பிடாத வரை உன் வாழ்வு சொர்க்கம்.
  • நினைவுகளின் தொகுப்பே வாழ்வின் விரிவாக்கம்.
  • எந்த உயர்ந்த விஷயமும் கேள்விக்குள்ளாக்கப்படலாம்.
  • நம்பிக்கைகள் எல்லாமே ஒருவகையில் மூடநம்பிக்கைகளே.

அவ்வுலகம் – இறப்புக்குப் பின் தொடரும் இறந்த காலம்…

கடவுள்


சுஜாதாவின் ‘கடவுள்’, கடவுள் நம்பிக்கை பற்றி அவர் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ‘பிரபஞ்சத்தைப் படைத்தது யார்? (யாராவது படைத்திருந்தால் அவரைப் படைத்தது யார்?)’ என்று பலருக்குள்ளும் இருக்கும் கேள்விகளுடன் கட்டுரையைத் தொடங்குகிறார். சரி கேள்விகளுக்கான விடையைச் சொன்னாரா?

இப்படி பல சமாச்சாரங்களை தெரிஞ்சு வெச்சிருந்த மனிதர், நமக்கும் சொல்கிறார். ஆனால் கடைசி வரைக்கும் மேலே சொன்ன கேள்விகளுக்கு விடையே சொல்லவில்லை :-( சரி கடவுள் நம்பிக்கை அவருக்கு இருக்கா?

அறிவியலின் பதில் – ‘இருக்கலாம்’. ஆன்மீகத்தின் பதில் ‘இருக்கிறார்’. என் பதில் ‘it depends’

புத்தகத்தில் பல இடங்களில் நம்மாழ்வார் பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று:-

ஆணல்லன் பெண் அல்லன்; அல்லா(து) அலியுமல்லன்
காணலும் ஆகான். உளன் அல்லன்; இல்லையல்லன்
பேணுங்கால் பேணும் உருவும் ஆகும். அல்லனுமாம்.
கோணை பெரிதுடைத்து எம்பெம்மானைக் கூறுதலே!

சுஜாதாவின் ‘கடவுள்’ – இருக்காரு… ஆனா இல்ல… (படிக்கலாம்)

வாழ்த்துக்கள்

பிறந்தநாள்,
தீபாவளி,
பொங்கல் – என்று
விழாக்கால வாழ்த்து அட்டைகள்
வீட்டிற்கு வந்து வருடங்களாகி விட்டன.
அலைபேசி அழைப்புகள்,
குறுந்தகவல்கள்,
மின்னஞ்சல்கள் கூட பழையனவாகிப் போயின,
சமூக வலைப்பின்னல்களாலான,
மெய்நிகர் உலகினால்.
அவரவர் கணக்கில் நுழையும் போது,
ஆங்காங்கே தென்படுகின்றன இப்போது,
முகப்புத்தகச் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும்,
வெறும் வார்த்தைகளாகிப் போன,
வாசமில்லா வாழ்த்துக்கள்.

கடவுள் எங்கே இருக்கின்றார்?

‘கடவுள் எங்கே இருக்கின்றார்?’ என்று,
கேட்டவுடன் ஓடிச் சென்று,
பூசை அறையைத் திறந்து காண்பித்து விட்டு,
பதிலளித்த பெருமிதத்துடன் நின்றான் அந்த சிறுவன்.
சில வருடங்களுக்குப் பின்பு, இதே
கேள்விக்கு அவனது பதில் கோவிலாகலாம்.
சிந்தித்து விழிக்கும் போது தான் அவனுக்குத் தெரியும்,
‘கடவுள் எங்கே இருக்கின்றார்?’ என்று.

சக்வாரோ

அனல் வளி வீசும், இள வேனிற் காலத்தில்,
கானல் நீராற்றின் இரு புறமும், தீட்டிக் கொண்டிருந்தன
சுடு மணலில் தம் நிழலோவியங்களை
நெடு சக்வாரோ அழல் மரங்கள்.